நினைவு-50
அரசு மருத்துவமனையில் சற்றும் தாமதிக்காமல் அனுமதிக்கப்பட்டான் ராகவன். இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவனின் மூச்சுத்திணறல் சீராகப்பட்டது.
திணறல் எடுத்த மூச்சு சீர்பட்டாலும் பேசும் போதும் நடக்கும் போதும் அவனுக்கு மூச்சு வாங்கத்தான் செய்தது. எளிதாக எதையும் செய்ய முடியாமல் திண்டாடி தத்தளித்துப் போனான்.
மருத்துவமனையில் இவனிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை. நேரம் தவறாமல் மருத்துவர் வந்து பரிசோதித்து விட்டுச் செல்ல, செவிலி வந்து மருந்துகளை கொடுத்து கடமையைச் செய்தாள். இவனுக்கு வேண்டிய உணவையும் உடையினையும் ஹாஸ்பிடல் வார்டுபாய் கொண்டு வந்து கொடுக்க, இவனது தேவைகள் எல்லாம் பூர்த்தியடைந்து விடுகின்றன.
எந்நேரமும் ஆக்சிஜன் மாஸ்கை அணிய வேண்டியிருந்தது. இன்னும் சிறிது நாளுக்கு இப்படித்தான் நடமாட வேண்டுமென மருத்துவர் சொல்லி விட்டார். ராகவனின் அவஸ்தையின் அளவு இன்னதென்று இல்லாமல் ஏறிக் கொண்டே போனது.
‘அப்பப்பா இத்தனை பாடா? திடகாத்திரமான ஆண் எனக்கே இத்தனை வேதனை என்றால், மென்மையான உடலமைப்பும் மனதும் கொண்ட பெண்ணிற்கு எப்படி இருந்திருக்கும்? எப்படியும் சாவின் விளிம்பிற்கே சென்று மீண்டு வந்திருப்பாள். அப்படி மீண்டாலும் அவளின் தேகநிலை சீரடைந்ததா? இயல்பான வாழ்க்கையை அவளால் எதிர்கொள்ள முடிகிறதா?’ என்று திவ்யாவைப் பற்றியே அவனது எண்ணங்கள் சுற்றி வந்து அலைகழிக்கத் தொடங்கின.
அதோடு எப்போது என்ன பூதம் வரப்போகிறதோ என்று தெரியாமல் அவனது மனம் பயத்துடன் தவிக்கத் தொடங்கியது. மனமெல்லாம் தேவானந்தன் கூறிய ‘உனக்கான காம்ப்ளிமென்ட் பின்னாடியே அனுப்பி வைக்கிறேன்’ என்ற பேச்சு அசரீரியாக ஒலித்துக் கொண்டே இருந்தது.
மருத்துவமனையில் நடப்பது ஒன்றும் புரியவில்லை அவனுக்கு! யார் யாரோ வருகிறார்கள், போகிறார்கள்... விசாரித்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஜீவனில் சக்தியும் வற்றிப் போயிருக்க, தன்போக்கில் கண்ணை மூடிக்கொண்டு நாட்களை கடத்திக் கொண்டிருந்தான் ராகவன்.
நான்கு நாட்கள் கழித்து மருத்துவர் வந்து, ‘இனி பயமில்லை வீட்டில் இருந்தே மருந்துகளை எடுத்துக் கொண்டு ஓய்வில் இருக்கலாம்’ என்று கூறிவிட்டுச் செல்ல. புதிதாக ஒரு காவல்துறை இன்ஸ்பெக்டர் வந்தார்.
“அப்போ உள்ளே போயி சௌக்கியமா இருந்துடலாமா ராகவன்?” என்று நக்கலோடு கேட்க,
“எங்கே சார்?” என்று புரியாமல் விழித்தான்.
“உன் மாமியார் வீட்டுக்கு தான்... வேறங்க!” என்றதும் ‘சிறையைத் தான் சொல்கிறார்’ என்று புரிந்து கொண்டான் ராகவன்.
“என்ன சார் சொல்றீங்க... என்னை எப்போ கைது பண்ணீங்க? என்ன கேஸ்? யார் கம்பிளைன்ட் கொடுத்தா?” மூச்சு வாங்கிக்கொண்டே கேள்விகளை அடுக்க, வெறுப்பாய் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.
“மெதுவா கேளுடா! உன் உசுரை வெல்லக்கட்டியா காப்பாத்தி வச்சுருக்கோம். கொஞ்சமாவது எங்களுக்கு பிரயோஜனப்படட்டும்!”
“சார் ப்ளீஸ்... எனக்கு எதுவும் புரியாமத் தான் கேக்கறேன்”
“நீ ஏன் கேக்க மாட்டே? நீ செஞ்ச வைச்சிருக்கற காரியமெல்லாம் ரொம்ப யோக்கியமாச்சே!” என்றதும் ராகவனின் மனம் சத்யாவிற்கு செய்து துரோகத்தை நினைத்துப் பார்த்தது.
‘அதற்காகத் தான் கைது செய்ய வந்திருக்கிறாரோ!’ என்றெண்ணி, “சார் ஏதோ ஒரு வேகத்துல புத்தி கெட்டுப் போயி ஆனந்தன் குரூப்ஸ்கு துரோகம் செஞ்சுட்டேன். அதை சரின்னு சொல்லல... நான் தண்டனை ஏத்துக்க தயாராத் தான் இருக்கேன். ஆனா ஹெல்த் சரியில்ல சார்! வீட்டுல இருந்து ரெஸ்ட் எடுத்துக்கணும். என் வக்கீலை கூப்பிட்டு ஜாமீனுக்கு அரேன்ஜ் பண்ணச் சொல்லணும். அவருக்கு ஃபோன் பண்ண மட்டும் பெர்மிஷன் குடுங்க!” என்று நயந்து பேச, முடியாதென்று பலமாக தலையாட்டி மறுத்தார் இன்ஸ்பெகடர்.
“சார் ப்ளீஸ்... இனிமே சத்யா சார்க்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன்” என்று அவன் சொன்னதும் அடக்கமாட்டாமல் சிரித்தார் இன்ஸ்பெகடர்.
“உன் வாயால இன்னும் எத்தனை தடவை உண்மையைச் சொல்லி அப்ரூவர் ஆவ நீ? சரியான விவரம் தெரியாம இப்டி உளறிக் கொட்டுறியே வெளக்கெண்ண!”
“என்ன சார் சொல்றீங்க?”
“உன் வீட்டை சீல் வச்சாச்சு... உன் பாங்க் அக்கவுண்டை பிளாக் பண்ணியாச்சு! வீட்டுல இருக்கிற பணத்தையும் சீஸ் பண்ணி ஸ்டேஷனுக்கு எடுத்துட்டு போயாச்சு... நீ எங்கே போயி தங்கப் போறே? வக்கீலுக்கு எப்படி பீஸ் கொடுக்கப் போற?” அதிரடியாக பல அணுகுண்டுகளை போட்டு அவனுக்கு நெஞ்சுவலியை வரவழைத்தார் இன்ஸ்பெக்டர்.
“சார்! ஏன் இப்படி... எதுக்கு?”
“உன்னை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வரும்போதே அரெஸ்ட் பண்ணியாச்சு! ராகா புராடக்ட்ஸ்ன்ற பேருல லைசென்ஸ் இல்லாம மசாலா பாக்கெட் சப்ளை செஞ்சு பப்ளிக் நியூசென்ஸ் பண்ணினதுக்காக உன்னை அரெஸ்ட் பண்ணி இருக்கோம். யாருக்காவது இது மூலமா ஃபுட் பாய்சன் ஆகி துன்பப்பட்டா அந்த கேஸும் தனியா உன் மேலே வந்து சேரும்” என்று அடுத்த இடியை இறக்கினார்.
“சார்... அது என்னோட சொந்த புராடக்ட் இல்ல”
“அப்ப யாரோடது? அதுக்கு ஆதாரம் இருக்கா?” என்று கேட்டதும் அவனிடத்தில் பதில் இல்லை.
“அந்த மசாலா பாக்கெட் எல்லாம் கேசவ்னு ஒருத்தன் வந்து கொடுத்தான் சார்” என்று கூறி அவன் வந்து காரணத்தையும் அவன் பணம் கொடுத்த விவரத்தையும் அளித்தான். உடன் அவனது அலைபேசி எண்ணையும் கொடுக்க அது ஸ்விட்ஸ் ஆஃப் மோடுக்கு சென்றிருந்தது.
“நீ பொய் சொல்ற ராகவா... உன்கிட்ட விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்ல... நீ சொல்லித்தான் மார்க்கெட்டுல அந்த பாக்கெட்டுகளை மக்களுக்கு கொடுத்திருக்காங்க... அவங்களுக்கு நீ சம்பளம் கொடுத்த விவரம் என்கிட்டே இருக்கு. அதுவுமில்லாம உன் வீட்டுல இருந்து தான் மூட்டை மூட்டையா மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் பண்ணி இருக்கோம். இதை மீறி நீ எதுவும் சொல்லணும்னா அதுக்கு தகுந்த ஆதாரம் வேணும்.” என்று விவரம் கூறினார் இன்ஸ்பெக்டர்.
“நான் செய்யாத தப்புக்கு என்னை அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க சார்!” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதான் ராகவன்.
“எங்களுக்கு ஆதாரம் கிடைச்சதை வச்சு தான் உன்னை கைது பண்ணியிருகோம். நீயா தான் சத்யானந்தனுக்கு பண்ணின துரோகத்தை சொல்லி குற்றவாளி ஆகியிருக்க... ஆக மொத்தம் உன்மேல ரெண்டு கிரிமினல் கேஸ் ஃபைல் பண்ணிட்டோம். நீ சத்யாக்கு எதிரா செஞ்சதை உன் வாயால சொன்னதை எல்லாம் ரெக்கார்டு பண்ணினது கைவசம் இருக்கு. உன்னை கோர்ட்ல கொண்டுபோய் நிப்பாட்ட அது போதும்.”
“ஐயோ சார்... கேசவ் தான் முக்கிய குற்றாவாளி அவனையும் பிடிங்க சார்... அவன் சொல்லித்தான் ராகா மாசலா மேட்டர்ல இன்வால்வ் ஆனேன்”
“அதுக்கு ப்ரூப் இருக்கா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்டதும் யோசித்தான் ராகவன்.
கேசவ் வெகு சாதூரியாமாகப் பேசியே எந்த ஆதாரமும் இன்றி காரியங்களை அவன் வசம் ஒப்படைத்திருந்தான். அட்வான்ஸ் தொகையை ராகவனுக்கு கொடுக்கும் போதும் கையில் ரொக்கப் பணமாக கொடுத்திருக்க, அதற்கும் சாட்சி இல்லை. ஆனால் இவனோ பாக்கெட்டுகளை விநியோகம் செய்தவர்களுக்கு சந்தையில் வெளிப்படையாக பணம் கொடுத்தது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
“உன் பேருல கம்பெனி ஆரம்பிச்சு பாக்கெட் போட்டுட்டு இப்ப அது உனக்கு சொந்தமில்லன்னு சாதிக்கிறியே?” என்று நக்கலாக் கேட்டார் இன்ஸ்பெகடர்.
அவர் ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்லத்தான் தான் எப்படி வகையாக சிக்கியுள்ளோம் என்பதே அவனுக்கு தெரிந்தது. சத்யானந்தன் மிகத் தெளிவாக திட்டம் போட்டு தன்னை வளைத்து பிடித்திருப்பதும் நன்றாகவே புலப்பட்டது.
செய்யாத வேலைக்கு கெட்ட பெயரை வரவழைத்து, பொய்யான குற்றச்சாட்டில் சிறைக்குள் அனுப்பி வைத்த சத்யானந்தனின் சாமர்த்தியத்தை மெச்சிக் கொள்ளத்தான் முடிந்தது.
“டாக்டர் கிட்ட டிஸ்ஜார்ஜ் ஃபார்மாலிட்டீஸ் பேசிட்டு வர்றேன். ஒழுங்கா ரெடியா இரு! ஏதாவது தகராறு இழுத்து வச்சு கலாட்டா பண்ண நினைச்ச... இழுத்துவிட மூச்சு இருக்காது. ஸ்ட்ரைட்டா பரலோகம் அனுப்பிட்டு மூச்சுதிணறி போயி சேர்ந்துட்டான்னு கேஸை குளோஸ் பண்ணிடுவேன்” என்று எச்ச்சரித்து விட்டுச் செல்ல, தனது எதிர்காலம் கேள்விக்குறியான அவலத்தை தெளிவாய் உணர்ந்து கொண்டான் ராகவன்.
***
"தம்பி நாளைக்கு டெல்லி போக எல்லாம் எடுத்து வச்சுகிட்டியா?” சப்பாத்திகளை வைத்துக் கொண்டே, மங்கையர்க்கரசி கேட்க,
"டெல்லிக்கு தாத்தா தானே போறார்!" என்று புரியாமல் கேட்டான் சத்யானந்தன்.
"ஏய் சத்யா... நம்ம ராமநாதன் பேத்தி மேரேஜ் நாளை மறுநாள் இருக்கு. போன வாரம் வந்து இன்வைட் பண்ணினதை மறந்துட்டியா? நான் அந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா போயே ஆகணும். அதனால உன்னைப் போகச் சொல்லி நேத்து ஈவினிங் சொன்னேனே? மறந்துட்டயா?" குழப்பம் கலந்த கேள்வியாக கேட்டார் தேவானந்தன்.
‘எப்போ சொன்னார்?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டவனிடம்,
“நேத்து லஞ்ச டைம்ல சொன்னானங்க கண்ணா... நானும் உங்களுக்கு டிராலி பேக் பண்ணி வச்சுட்டேன்” என்று நினைவிற்கு கொண்டு வந்தாள் திவ்யா.
"ம்ம்... சொன்னீங்க தான் ஸாரி மறந்துட்டேன் போலருக்கு" தாத்தா!”
“அந்த ராகவன் விஷயத்துல நீ ரொம்ப ஆழமா இறங்கி எல்லாத்தையும் மறந்துட்டே!” என்று தாத்தா சொன்னதும்,
“ஒரு வழியா பீடை ஒழிஞ்சதுன்னு சந்தோஷப் படுங்க மாமா!” மங்கையர்க்கரசி நிம்மதி பெருமூச்சுடன் சொல்ல,
“பின்ன சும்மாவா? அத்தனை தகிடுதத்தம் பண்ணி இறங்கி வேலை பார்த்தது வீணாப் போயிடுமா?” என்று மீசையை முறுக்கிக் கொண்டார் தேவானந்தன்.
“இதுல லட்சுமி அம்மாக்கு தான் பெரிய தாங்க்ஸ் சொல்லணும்.” சத்யா சொல்லவும்,
“ஏன்டா?” என்று மங்கையர்க்கரசி கேட்க,
“பின்ன... அவங்க மூலமா அறிமுகமான அவங்க அண்ணன் பசங்க தான் நிறைய சப்போர்ட் பண்ணாங்க... அந்த மாமன் மச்சானுங்க இல்லாம என்னால இந்த காரியத்தை சாதிச்சுருக்க முடியாது. எனக்கு ஒரு பிரச்சனை வரவும் என்ன மாப்பிள்ளன்னு உரிமையா கேட்டு வந்து நின்னுட்டாங்க... எங்க அத்தை புள்ளைக்கு ஒண்ணுன்னா நாங்க பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டோம். நீங்க சரின்னு சொல்லுங்க... நாங்க இறங்கி வேலை செய்றோம்னு சொல்லி, லட்சுமி அம்மாவையும் என்கிட்டே பேச வச்சு தைரியம் கொடுத்தாங்க! பிளானிங் நான் போட்டது... ஏற்பாடு எல்லாம் அவங்களோடது தான்!” என்று விரிவாக எடுத்துக் கூறினான் சத்யானந்தன்.
இத்தனை நாட்கள் வரை எதையும் தகவலாகக் கூட கூறாமல் எல்லாம் முடிந்த பிறகே விலாவாரியாக விளக்கம் கொடுத்தான். ராகவனை குடவுனில் அடைத்து வைத்து மூச்சு திணற விட்டதை சொன்னதும் மிகுந்த வருத்தம் கொண்டாள் திவ்யா.
“இப்படியொரு பழிக்கு பழி தேவையா கண்ணா?” என தனியாக இருந்த வேளையில் கேட்டு சண்டை பிடித்திருந்தாள் மனைவி.
“உனக்கு ஒன்னும் தெரியாது. அவனுக்கு வலி என்னன்னு தெரிஞ்சாதான் அடுத்த தடவ எதைச் செய்ய நினைச்சாலும் யோசிப்பான்”
“அதுக்குன்னு ஒரு உசிரோட விளையாடனுமா? அவனுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லையா?”
“ஒரு சிலருக்கு வலிக்க வலிக்க பாடம் கத்துக் கொடுத்தா தான் மனசுல பதிய வச்சுப்பாங்க... தண்டனைன்ற பேருல ஜெயில்ல அடைச்சு வைக்கிறதெல்லாம் எதுக்குன்னு நினைக்கிற?” என்று எதிர்கேள்வி கேட்டு மனைவியின் வாயை அடைத்தான் சத்யா.
“எல்லாத்துக்கும் ஒரு ரெடிமேட் ஆன்சர் வச்சுருக்கீங்க... உங்ககிட்ட பேச முடியாது. ஆனா இப்டி அவனை கஷ்டப்படுத்தினதுல எனக்கு உடன்பாடு இல்ல” என்று தனது எதிர்ப்பை காட்டி இரண்டு நாட்களாக முகத்தை தூக்கி கொண்டு அலைகிறாள் திவ்யா.
அவளை தாஜா செய்யவும் விருப்பமில்லாமல் அவளாக தெரிந்து கொள்ளும் வரையில் பொறுமை காப்போம் என்றெண்ணி அமைதியாக இருந்தாலும் அவனது மனம் அவளின் பின்னே செல்வதை தடுக்க முடியவில்லை.
எப்போதும் ஜாடைப் பேச்சும் முறைக்கும் பார்வையும் மனைவியின் பதிலாக வர அதுவும் சமயத்தில் சுகமாகத் தான் இருக்கிறது காதல் கணவனுக்கு!