நினைவு-47
நாட்கள் வழக்கம் போல நகரத் தொடங்கின. எந்தவொரு காரியத்தையும் மிக ஜாக்கிரதையாக செய்ய ஆரம்பித்திருந்தான் சத்யானந்தன். அதன் விளைவாய் ஏகப்பட்ட கெடுபிடிகள்... பல முஸ்தீபுகள் என அவனை நெருங்குவதற்கே அனைவருக்கும் மூச்சு முட்டிப் போயிற்று!
ஒரே இடத்தில் வேலை செய்தாலும் கடமையாக சிரித்துக் கொள்ள முடியாத இக்கட்டான வேலைப்பளுவில் இருவருமே மாட்டிக் கொண்டு முழித்தனர். திவ்யா கேட்டதைப் போல சத்யாவில் புதைந்திருந்த கண்ணனை வெளிக்கொணர அவனால் முடியவே இல்லை.
ஆனால் அதற்கு பதிலாக மனைவிக்காக பல காரியங்களை செய்து அவளை தன்பக்கம் இழுக்கத் தொடங்கினான். அவளுமே அவனுக்கு தோதாக மயங்கத் தொடங்கினாள்.
அலுவலகத்திலிருந்து வரும்போது அவளுக்காக எதையாவது வாங்கிக் கொடுத்து அவள் சந்தோஷமாக விழிவிரித்து வாங்கிக் கொள்வதைப் புன்னகையுடன் ரசிப்பான்.
"ஏன் பகல்ல கூட தள்ளித் தள்ளிதான் நிக்கணுமா? யாருமில்லாத நேரத்துல என்கிட்டே வந்து பேசலாம்ல தியா?” என்று சலுகையாகப் பேசி மனைவியை தன் கை வளைவிற்குள் இழுத்துக் கொண்டு அவளை சங்கடப்பட வைத்தான்.
‘அருகில் நின்றாலே அவன் மீது வரும் வாசனை என்னை செயலிழக்க வைக்கும் போது அவனது அணைப்பில் இருந்தால் தாக்குப் பிடிக்க முடியுமா?’ தனக்குத் தானே சோதித்து தோல்வி அடைந்தவளாக,
“இல்ல கண்ணா... இது ஆபீஸ்... இங்கே வேலைக்கு மட்டுமே முன்னுரிமை” என்று அவனின் முகம் நோக்காமல் சமாளித்தாள்.
அவளின் முகம் பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ, "நான் வேணா நமக்குன்னு ஒரு பிரைவேட் ரெஸ்ட் ரூம் அரேன்ஜ் பண்ணவா?” என்று குறும்புத்தனமாய் கேட்க,
"அய்யோ அதெல்லாம் வேணாம் கண்ணா... ப்ளீஸ் அந்தப் பேச்சை விடுங்களேன்!" என்றவளிடம் முதல்முறையாக ஆசைகள் புதைந்த மனைவியின் சிவந்த முகத்தைக் கண்டான். அவளின் வெட்கமுகம் அவனுக்குப் புதுமையாக இருந்தது.
வேறொரு நாள் அப்படித்தான். காலையில் சீக்கிரமே சத்யானந்தன் கீழே சென்றுவிட, யாருமில்லை என்ற எண்ணத்தில் குளித்துவிட்டு மார்பில் முடிந்த துண்டுடன் வெளியே வந்தவளை சோபாவில் அமர்ந்திருந்தவன் தான் வரவேற்றான்.
முதலில் இருவரும் அதிர்ந்தாலும் பார்வைகள் சில நிமிடங்கள் பின்னிக் கொண்டன. சிரமப்பட்டுப் பார்வையைத் திருப்பியவள் "ஸாரி, யாருமில்லைனு அப்படியே வந்துட்டேன்.” என்றவளை சீழ்க்கை ஒலியெழுப்பி ரசித்தான்.
"பரவால்ல... நானும் கதவு திறந்திருக்கவும் அப்படியே வந்துட்டேன்" என்று கூறினான்.
“நல்லா சமாளிக்கிறீங்க கண்ணா!”
“உண்மை தெரிஞ்சும் கேட்டா நானும் என்னதான் செய்றது?” என்றுவிட்டு பாவமாக பார்த்தவனை இழுத்தணைத்து முத்தமிடத் தோன்றியது பெண்ணவளுக்கு! ஆனால் அதற்கு நேரமும் சூழ்நிலையும் ஒத்து வரவில்லை.
இருவரும் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டார்களேத் தவிர, அவன் வெளியே போகவும் இல்லை. இவள் உள்ளே போகவும் இல்லை. அப்படியே அவரவர் இடத்தில் நின்றிருந்தனர்.
திவ்யா தான் முதலில் கால்கள் பின்னப் பின்ன மெல்ல நகர்ந்து தனது உடைகள் இருக்கும் அலமாரியைத் திறந்து உடைகளை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு மீண்டும் குளியலறைக்குச் சென்றாள்.
‘நான் உன் கணவன்!’ என்ற மிதப்போடு சத்யா அப்படியே தான் அமர்ந்திருந்தான். என்னவென்று புரியாத உணர்வில் மென்மையான தென்றல் வந்து தீண்டியது போல் தேகம் சிலிர்க்க அமர்ந்திருந்தான்.
ஏனோ அன்று முழுவதும் இருவரின் கேலிப் பேச்சும் கிண்டல் தொணியும் காணாமல் போனது. முகம் பார்த்துப் பேசாமல் இலக்கற்று எதையாவதுப் பார்த்துப் பேசினர்.
திவ்யாவின் பெண்மை விழித்துக் கொண்டு கணவனை நேருக்குநேர் காணவிடாமல் செய்தது. அவளின் இந்தப் பார்வைத் தடுமாற்றம் அவனை முதலில் குழப்பியது. பிறகு ஏதோப் புரிவது போல் இருந்தது. தங்கள் வாழ்வில் வசந்த காலத்திற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டான்.
ஒருநாள் மாலை மழைத்தூரலும் சாரலும் அதிகமாக இருக்க, மழையை ரசித்தபடி பால்கனியில் அமர்ந்திருந்தாள் திவ்யா. மெல்லிசையான பாடல்கள் வழக்கம் போல் அவளது ப்ளுடூத் வழியாக வழிந்து கொண்டிருந்தது.
மனைவியைத் தேடி மாடிக்கு வந்தவனின் காதில் பெண்ணின் விரகத்தைச் சொல்லும் அந்த பாடல் கேட்க, அதை ரசித்து கண் மூடியிருந்த திவ்யா பார்வையில் பட்டாள்.
அவள் முகத்தையே பார்த்தவனுக்கு அவளின் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொல்வது போலிருந்த அந்த பாடலைக் கேட்டதும் மனமும் முகமும் ஒன்றாக இறுகியது. ‘பேதைப்பெண்ணை அணைத்து சுகப்படுத்த முடியவில்லையே!’ என்று மனதிற்குள் நொந்து கொண்டான்.
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது
வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
காதல் ஆசைக்கும் இசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா
தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா!
கணவனின் துளைக்கும் பார்வை மனைவியின் மனதைத் தீண்டியதில் வேகமாக எழுந்தவள் என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தாள். பாடலை நிறுத்த வேண்டுமென்று தோன்றினாலும் செய்வதற்கு மூளை சண்டித்தனம் செய்தது.
அவனது பார்வையில் மெல்லத் தலை குனிந்தவளை கூர்ந்தவன், "உன்னோட இந்த தடுமாற்றம் ரொம்ப வித்தியாசமா இருக்கே தியா? என்னாச்சு?" வார்த்தையிலும் கேள்வி, பார்வையிலும் கேள்வி!
இதற்கு மேலும் தலைகுனிந்து தன் நிலை மறைக்க முடியாதென தோன்றியது. "இல்ல... சாங் நல்லாருந்தது. அ... தான்" இன்னும் தெளிவடையாத குரலில் கூறினாள்.
அதிகமாக ஒரு வார்த்தை கேட்டாலும் கொட்டிவிடுவேன் கண்ணீரை என மிரட்டும் விழிகளுடன் பேசியவளைப் பார்க்க எப்படியிருந்ததோ! "ம்ம்... நல்ல சாங், ராஜா சார் மியூசிக்... எனக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனா இப்படி மழை சாரல்ல உட்கார்ந்து கேட்டா கோல்ட் தான் பிடிக்கும். என் ஆசை பொண்டாட்டி மூக்கால பிடில் வாசிப்பா... கேக்க சகிக்க முடியாது. எழுந்து உள்ள வா!" என்று சிரிப்போடு கூறிவிட்டு அவன் செல்ல, இவள் பின்தொடர்ந்தாள்.
சோபாவில் சென்று அமர்ந்தவன் தனது புது லாப்டாப்பை திறந்து வைத்துக் கொண்டு அலுவலக வேலையில் கவனத்தை செலுத்த, இப்போது பாடலை நிறுத்துவதா வேண்டாமா? என்ற குழப்பம் திவ்யாவிற்கு!
அதற்குள் அடுத்தப்பாடல் ஒலித்து அவளை மேலும் சங்கடப்படுத்தியது. பாடலைக் கேட்டு நெளியத் தொடங்கினாள்.
என்னை விட்டால்.... யாருமில்லை
கண்மணியே.... உன் கையணைக்க...
உன்னை விட்டால் வேறொருத்தி....
எண்ணவில்லை நான் காதலிக்க...
முத்து முத்தாய் நீர் எதற்கு...
நானில்லையோ... கண்ணீர் துடைப்பதற்கு!!
பாடல் வரிகளை உணர்ந்து சத்யானந்தன் நிமிரவும் அவனை நோக்கினாள் திவ்யா. அவ்வளவு நேரம் மிரட்டிய விழிநீர் நிஜமாகவே கொட்டிவிட்டது.
அலுவலை அப்படியே நிறுத்தி விட்டு சட்டென எழுந்து மனைவியை நெருங்கியவன், "என்ன தியா இது? நான் என்ன கேட்டேன்னு இந்த கண்ணீர்?" என்றவனின் குரலில் இருந்த அக்கறை இன்னும் அதிகமாக அழத் தூண்டியது.
உதட்டைக் கடித்து கண்ணீரை கட்டுப்படுத்தியவள் கன்னத்து நீர்த்துளியை கையால் துடைத்து விட்டு "ஒன்னுமில்லை... ஸாரி... நீங்க ஒர்க் பாருங்க... நான் கீழ போறேன்" என்று அவசரமாக நகர்ந்தாள்.
"எதுக்கு அழுதேன்னு சொல்லிட்டுப் போ!" என்றவன் அவள் நகராமல் தடுத்து கையைப் பற்றி தன் பக்கமாக இழுக்க, திவ்யா அவனை நெருங்கி நின்றாள்.
கண்ணீர் எதற்கென்று அவளுக்கேத் தெரியாத போது அவனுக்கெப்படி சொல்வாள்! பாடிய பாடல் அவளை பலவீனப்படுத்தியதா? அந்த பலவீனமான தருணத்தில் கணவன் பார்த்த பார்வை அவளைப் பலவீனப்படுத்தியதா? புரியவில்லை.... தெரியவில்லை!
சாய்ந்துகொண்டு அழ தோள் வேண்டுமென்று தோன்ற மறு யோசனையின்றி தன் கண்ணனின் நெஞ்சில் சாய்ந்தாள். கைகள் அவன் இடுப்பை வளைக்க மெதுவாக ஆரம்பித்து சிறு குழந்தை போல் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.
அவனுக்குமே உள்ளுக்குள் ஆற்றாமை பொங்கியது. அவனும் தான் என்ன செய்வான்? ஒரு மலர் மூட்டை வந்து மார்பில் சாய்ந்த சுகானுபவத்தை அனுபவித்தான். ரோஜா மாலையாக அவனது இடுப்பை வளைத்த கைகள், நெஞ்சில் மோதி உறவாடிய அவளது இளமையின் எழுச்சிகள்! உடனடியாக இல்லையென்றாலும் ஒரு நிமிட அவகாசத்தில் அவனுக்குள்ளும் பலவித மாற்றங்கள்!
அவள் கண்ணீரை விட, இறுக கட்டிக் கொண்டிருந்தது தான் அதிக பாதிப்பைக் கொடுத்தது. ‘இவளிடமா உணர்ச்சிகளை அணையிடச் சொன்னோம்? ஐயோ... இப்படித் தவிக்கின்றாளே! இவளுக்கு நல்லதில்லையே மூச்சு முட்டிப் போகுமே...’ என்றெல்லாம் இவன் தவிக்க ஆரம்பித்தான்.
அவளுக்கு ஆசுவாசம் அளித்திட முனைந்தவனின் முயற்சியில் அவனது ஆண்மை சற்றே விழித்துக் கொண்டு தன் கை வரிசையை காட்டத் தொடங்கியது.
“அழாதே தியா!” என்று கண்கள் கிறங்க அவன் கைகளும் நீண்டு அவள் இடையை வளைத்தன. இதழும் தனது வேகத்தை தெரிவிக்க, முகத்தில் கோலம் வரைந்தான்.
முத்தத்தின் ஒத்தடம் கழுத்தில் இறங்கி முன்னேற நினைத்த அதே நேரம், கண்ணீரை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டாள் திவ்யா.
'அய்யோ எவ்வளவு கேவலமாக நினைப்பான்?' என்ற கேள்வியுடன் கணவனை சட்டென்று உதறிவிட்டு கதவை நோக்கி ஓடியவள், அவன் கண் திறக்கும் முன் காணாமல் போனாள்.
‘ஊப்ஸ்!’ நீண்ட பெருமூச்சு... அவளாத் தான் கட்டிக்கிட்டா? இப்போ ஏன் விலகி ஓடிட்டா? ஏமாற்றம் நிறைந்த கேள்விகள். தளர்ந்த நடையாக சோபாவில் வந்து அமர்ந்தான் சத்யானந்தன்.
வேலையில் கவனம் செல்லவில்லை. அப்படியே கால்நீட்டிப் படுத்தவனின் வலக்கை மார்பை வருடியது. சற்று முன்னர் நடந்த ஆலிங்கனத்தில் மனைவியின் முன்னழகு தனது நெஞ்சைத் தொட்ட நிமிடம் நினைவுகளில் வந்து இம்சித்தது. இயல்பாய் ஒரு இளம் புன்னகை அவன் இதழோரம்.
சட்டையைத் தடவியவன் விரல்களில் ஈரம் பட்டது. திவ்யாவின் கண்ணீர் பதிந்த ஈரத்தை உணர்ந்தான். என்ன நடந்ததென்றே புரியவில்லை? ஏன் அழுதாள்? ஏன் அணைத்தாள்? ஏன் தவிர்த்தாள்?
ஆனால் காரணம் தான் என்று மட்டும் புரிந்தது. கீழே போய் பேசிப் பார்க்கலாமா? என்ன பேசுவது?
அவள் விரல் பட்டதும் வந்த கிளர்ச்சி! மனைவியாக அவளின் தடம் அவன் நெஞ்சத்தில் தடம் பதிந்து விட்டது. ஆனால் அவளோ கண்ணனை எதிர்பார்க்கிறாள். என்ன செய்ய? எதற்கும் பதில் தெரியவில்லை.
எந்த இடத்தில் அவர்களுள்ளான பந்தம் இறுகிப் போயிற்று? அன்று ஒருநாள் தனக்கான ஆறுதலை இவன் தோள்களில் திவ்யா தேடிய போதா? அல்லது... அதிக தலைவலி உணவு வேண்டாம் என்று ஒதுக்கிய ஒருநாள் சாதத்தைக் குழைத்து எடுத்து வந்து, "முடிஞ்ச வரைக்கு சாப்பிடுங்க கண்ணா... அப்பதான் எடுத்துக் கொள்ளும் மருந்து வேலை செய்யும்" என்றாளே அப்போதா?
இல்லை... குளியலறையில் இருந்து வந்து என்னைக் கண்டு பதறாமல் பாதம் பார்த்து நடந்தாளே அன்று தானோ? அல்லது ஒவ்வொருத் தருணமும் என் முகம் பார்த்து மனம் கோணாமல் நடந்து கொண்டாளே அதுவாக இருக்குமோ?
முத்துச் சிப்பியாய் மூடிக் கொண்டிருந்த மனது அவளின் அன்பு அலையாய் அடித்துத் திறந்து கொண்டதோ? தவிப்புடன் புரண்டு படுத்தான். திவ்யாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
பார்க்காமல் பதுங்க வேண்டுமென்றும் தோன்றியது. சுகமான நினைவில் மிதமான உறக்கம் அவனை ஆட்கொள்வது போல் இருக்க... மனைவியின் நினைவுகளில் அமிழ்ந்து அப்படியே கிடந்தான்.