ninaikkatha neramethu - 45 in Tamil Love Stories by EKAA SREE books and stories PDF | நினைக்காத நேரமேது - 45

Featured Books
Categories
Share

நினைக்காத நேரமேது - 45

நினைவு-45

அன்பைப் பொழியும் பிறந்த வீடு, புகுந்த வீட்டோடும், நண்பனாக நேசத்தையும் பாசத்தையும் கொட்டும் கணவனோடும் திவ்யாவின் குடும்ப வாழ்க்கை பயணிக்க ஆரம்பித்தது.

அவளின் உணர்ச்சிகளை தனதாக்கிக் கொண்டு எப்போதும் அவளை அடைகாக்கும் கோழியாக கண்ணுக்குள் நிறைத்துக் கொண்டு நடமாடினான் சத்யானந்தன்.

அவ்வப்பொழுது அலுவலக வேலைகளையும் மனைவியின் வசம் ஒப்படைத்து மனதளவில் அவள் சோர்வடையாமல் பார்த்துக் கொண்டான். இத்தனைக்கும் மத்தியில் அவனது அலுவலக வேலைகளும் வியாபார நிமித்தங்களும் அவனது கழுத்தை நெறுக்கிப் பிடித்தன.

அன்று காலை மங்கையர்க்கரசியின் நச்சரிப்பால் வேண்டுதல் என்று இருவரும் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் அன்னதானம் முடித்து திரும்பி இருந்தனர்.

“இந்த மாதிரி என்னை இழுத்துப் பிடிக்கிற வேலையை இனிமேட்டு வச்சுக்காதேம்மா! எந்த நிலமையில நான் சுத்திட்டு இருக்கேன்னு தெரியாம இருக்கே நீ!” என்று தாயிடம் கோபித்துக் கொண்டு ஓய்வெடுக்க தங்களின் அறைக்கு சென்று விட்டான்.

மதிய உணவு முடித்துக் கொண்ட திவ்யாவும் தங்களின் அறைக்கு வந்து சிறிது நேரம் கணவனோடு பேசிக் கொண்டிருந்து விட்டு தூக்கம் வருவதாகக் கூறி, அமர்ந்திருந்த சோபாவிலேயே படுக்க முற்பட்டாள்.

“இந்த அலைச்சல் எல்லாம் உனக்கு ஒத்துவராதுனு சொன்னாலும் நீயும் கேட்டுகிறதில்ல... மாமியாருக்கு ஜால்ரா தட்டுற மருமகளாவே இரு!” என்று முறைத்தவன்,

“ஒழுங்கா கட்டில்ல போயி தூங்கி ரெஸ்ட் எடு! எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு...” என்று தனது லாப்டாப்பை எடுத்துக் கொண்டு வேலையில் அமர்ந்தான்.

நல்ல உறக்கத்தில் ஏதோ உடையும் சப்தம் கேட்டதும் திவ்யா திடுக்கிட்டு விழித்து கண்ணைக் கசக்கியபடி சுற்றிலும் பார்க்க, சத்யா வைத்திருந்த லாப்டாப் கீழே விழுந்து கிடந்தது.

கை தவறி விழுந்திருக்குமோ என்று தான் முதலில் நினைத்தாள். ஆனால் நெருப்புப் பந்தாக சிவந்து ஜொலித்த சத்யாவின் முகத்தைக் கண்டதும் லாப்டாப் தவறி விழவில்லை என்று புரிந்தது.

‘இத்தனை கோபம் வருமா இவனுக்கு?’ என்ற திகைப்புடனே எழுந்தாள். கோபத்திற்கான காரணத்தையும் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.

பதட்டமாக எழுந்து சோபாவை நெருங்கியவள் "என்னாச்சு கண்ணா?" என்று கேட்க,

ரௌத்திரமான கண்களுடன் நிமிர்ந்த சத்யானந்தன், “அந்த பிளடி ராகவன்  எல்லாத்தையும் குளோஸ் பண்ணிட்டான் தியா... கம்பெனி, புராடக்ட், கன்ஸ்ட்ரக்ஷன்னு ஆனந்த் குருப்ஸ் பேரை நாறடிச்சுட்டான்." என்றவனின் குரலில் இது வரையில் திவ்யா கண்டிராத சோகமும் கோபமும் கலந்து ஒலித்தது.

உடலும் மனமும் ஒருங்கே அதிர்ந்து போனது. விழிகள் சட்டென்று நிரம்பிவிட அவளையும் அறியாமல், "என்ன சொல்றீங்க கண்ணா?" என்று அரற்றியது குரல்.

நயவஞ்சகத் துரோகியான ராகவனை வேலை நீக்கம் செய்து ஒழித்துக் கட்டியதில் புதிதாய் அவனும் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருந்தான். முன்னர் விசுவாசமாய் உளவு சொன்ன நிறுவனத்தின் உதவியோடு மீண்டும் தனது திருகுதாளங்களை செய்யத் தொடங்கியிருந்தான் ராகவன்.

இதன் காரணமாய் சத்யாவின் வேலைகள் எல்லாம் இரட்டிப்பாகியது. ராகவனது துரோகத்தின் பிரதிபிம்பம் எல்லாம் மசாலா கம்பெனியின் மீதே இருக்க, வியாபாரத்தில் பெருத்த அடி விழ ஆரம்பித்தது.

எப்படி, எதனால் என்ற காரணம் தெரியவில்லை. அவற்றை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாய் இறங்கியிருந்தான். கம்பெனியில் இருந்து வியாபாரத்திற்காக சந்தைக்கு சென்ற சரக்குகள் எல்லாம் திரும்பி வந்த வண்ணமாய் இருந்தன.

தயாரிப்பு சரியில்லை, கலப்படம் மிகுந்துள்ளது, முன்னை போன்ற தரமில்லை போன்ற பல குறைகள் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் புரளியாக கிளப்பி விடப்பட்டது. நாள்போக்கில் இதன் காரணமாய் மாசலா வியாபாரத்தில் பெருத்த நஷ்டத்தை சந்தித்தான்.

வஞ்சக ஓநாய் இவன் என்று தெரிந்தாலும் ஆதாரப்பூர்வமாக வெளிச்சப்படுத்தி கையும் களவுமாய் அவனைப் பிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ராகவனின் கை ஓங்கி நிற்க, சத்யானந்தனின் மசாலா தயாரிப்புகள் சந்தையில் படு மோசமான விமர்சனத்தை சந்தித்தன.

இதன் காரணமாய் உணவுப்பொருட்களின் தரத்தை  சோதனை செய்யும் அதிகாரிகளும் தயாரிப்பு இடத்திற்கே வந்து சோதனையும் செய்து விட்டு எல்லாம் சரியாக இருக்கின்றது என சான்றிதழ் கொடுத்து விட்டுச் சென்றனர்.

‘இது போதும் இனி சுலபமாக அனைத்தையும் சரி செய்து விடலாம்’ என்றே தாத்தா தேவானந்தனும் பெருமூச்சு விட்டு நிம்மதி அடைந்தார். உயிரான நட்பிற்கு மரியாதை செய்யும் வகையில் தானாய் பொறுப்பெடுத்துக் கொண்ட தொழில் அல்லவா இது!

‘ஹப்பாடா... உண்மை நிலையை உலகுக்கு உணர்த்தியாகி விட்டது. இனி அந்த கள்ள ஆட்டை மட்டும் கையும் களவுமாய் பிடிக்க வேண்டும்’ என்று சத்யானந்தனும் எண்ணிய வேளையில், தொலைக்காட்சியில் நேரலையாக ஒரு ஹோட்டலில் சோதனை செய்யும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

அதில் சமைத்த உணவுப் பொருட்கள் யாவும் வாயில் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு மோசமாக, ருசியில் தரமற்று இருப்பதாய் வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக புகார் அளித்ததில், அதிகாரிகள் உணவு தயாரிக்கும் இடத்திற்கே சோதனை செய்ய வந்திருந்தனர்.

அந்த ஹோட்டல் நிர்வாகியோ, ‘எல்லாம் சரியாகத் தான் செய்கிறோம். இந்த மசாலாவை உபயோகிக்க ஆரம்பித்த நாளில் இருந்தே தான் நாங்கள் இந்த பிரச்சனையை  சந்திக்கின்றோம்’ எனக் கூறி ஆனந்தன் குருப்ஸ் கம்பெனியின் மசாலா பாக்கெட்டுகளை எடுத்துக் காண்பிக்க அது உலகமெங்கும் தெரிய வந்தது.

சிலர் அதனை உடனே முகநூலில் நேரலையில் பதிவேற்றி தரமற்ற கருத்துகளையும் வசவுகளையும் அளித்த வண்ணமாய் இருந்தனர்.

இன்ஸ்டா, யூ-டியூப், வாட்ஸ்-அப், லோக்கல் சானல்ஸ் என எல்லா தகவல் தொடர்பு தளங்களிலும் ஹோட்டல்காரர் சொல்வது திரிக்கப்பட்ட பொய் என்றும் இதுதான் உண்மை நிலை என்றும் மாசலா பற்றிய கருத்துகளைக் கூறி முடிவில் ஆனந்தன் குருப்ஸ் நிறுவனத்தையே குறை கூறத் தொடங்கி இருந்தனர்.

காலையில் இருந்தே அலுவல் அழைப்புகளையும் இணைய தளத்தையும் நாடாமல் கோவில் தரிசனம், அன்னதானம் என்று சுற்றிய சத்யானந்தன், மடிக்கணிணியை உயிர்ப்பித்து இணையத்தை சொடுக்கியதும் அவனுக்கு வந்த நோட்டிஃபிகேசன்கள் எல்லாம் இவனது நிறுவனத்தின் அவல நிலையை சொல்லி விட்டுச் சென்றன.

இரவு பகலென்றும் பாராமல் வயோதிகத்தை சட்டை செய்யாமல் தாத்தா உருவாக்கித் தந்ததை வைத்தே மென்மேலும் வளர்த்து அழகு பார்த்து வந்தவனுக்கு இத்தகைய அவப்பெயரும், அவலநிலையும் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.

கோபத்தில் ஆவேசமாக லேப்டாப்பை தட்டிவிட, அது கீழே விழுந்து ஜீவனை இழந்திருந்தது. அந்த சத்தம் கேட்டுத்தான் திவ்யாவிற்கும் முழிப்பு தட்டியிருந்தது. அதே சமயத்தில் அலுவலகத்தில் இருந்து வந்த எமெர்ஜென்சி கால் சொன்ன செய்தியில் முழுதாய் ஆடிப் போய்விட்டான்.

“நம்ம கம்பெனியில கொடுத்த ஆர்டர் எல்லாமே கேன்சல் ஆகிடுச்சு சார்! எல்லாரும் ஃபோன் பண்ணி பிசினெஸ் டீல் முடிச்சிக்கலாம். உங்களோட வியாபாரம் பண்ண இஷ்டமில்லைன்னு ஓரே மாதிரி சொல்லிட்டாங்க சார்!” அலுவலகத்தில் இருந்து வந்த செய்தியில் குற்றுயிராய் சமைந்தான் சத்யானந்தன்.

அவனது உணர்வுகளும் கோபமும் வார்த்தைகளில் வெடிப்பதை விட உணர்வுபூர்வமாய் நேரில் பார்ப்பதற்கே  மிக பயங்கரமாக வலித்தது. சட்டென்று பயந்து பின்னனடைந்து பின் தானாய் சுதாரித்தாள் திவ்யா.

"ஒன்னுமில்லை கண்ணா... எல்லாம் சரி பண்ணிடலாம்" என்று அணைத்து ஆறுதல்படுத்தத் துடித்த கைகளை இறுக்கி வைத்துக் கொண்டு வெறுமென நின்றிருந்தாள். அவன்தான் இவள் அருகில் வரும்போதே வராதே என்று கையை நீட்டி தலையை மறுப்பாய் அசைத்து தடுத்து விட்டானே!

"காலையிலேயே நான் ஆபீஸ் கால் அட்டென்ட் பண்ணியிருந்தா எப்படியாவது இந்த நிலைமை வர விடாம தடுத்துருப்பேன். கொஞ்சநாளா மறைஞ்சு நின்னு வேலை பார்த்து இன்னைக்கு முதுகுக்கு பின்னாடி குத்திட்டான் அந்த ****! இப்ப என்ன செய்ய? தாத்தா கிட்ட என்ன பதில் சொல்லப் போறேன்?” என்றவன் கையை விரித்து அதில் முகத்தைக் கவிழ்த்தான்.

திவ்யாவின் மனதைப் போலவே வாயும் ஊமையானது. தன்மேல் வைத்த ஆசையால் ராகவன் ஆடிய ஆட்டத்திற்கு பதிலடி கொடுக்கச் சென்று, அவன் துரோகத்தை வெளிச்சப்படுத்தி அவனை தண்டித்ததற்கு இப்பொழுது பழி வாங்கிக் கொண்டிருக்கிறான் ராகவன்.   

‘ஆக பிரச்சனையின் பிறப்பிடம் தன்மேல் ராகவன் வைத்த ஆசைதான்’ என எண்ணும் பொழுதே முழுதாய் உடைந்து போனாள்.

சத்யாவின் நிலையை விட திவ்யாவின் நிலை படுமோசமானது. நடந்தவைக்கு காரணமே அவள் எனும்போது ஆறுதல் கூற எப்படி முடியும்? சட்டென்று மாமியார் உன்னால் தான் எல்லாம் எனப் பேசிவிட்டால் என்னவென்று சொல்லி சமாதனம் கொள்வாள்?

ஆனாலும் மனைவியாக கணவனின் நிலையைப் பார்த்து அவள் மனம் துடித்தது. நெருங்கலாமா? வேண்டாமா? என்ற தவிப்பே இதயத்தை இறுக்கிப் பிசைய மெதுவாக அவனை நெருங்கி குனிந்திருந்த கணவனின் கேசத்தில் தனது விரல்களை வைத்தாள் மவுனமாக...

ஆனால் சத்யாவிற்கு அதுவே போதுமானது போல் சட்டென நிமிர அவளின் கை தோளுக்கு வந்தது. தோளில் இருந்த அவளது கையை எடுத்து தனது நெஞ்சில் வைத்துக் கொண்டான்.

"நான் இந்த பலமான அடியை எதிர்ப்பார்க்கலை தியா... தாத்தாக்கிட்ட எப்படி சொல்ல?” என்றவனின் குரல் மேலும் உடைந்து போக, திவ்யா இன்னும் நெருங்கி அவனது தலையை இழுத்து தனது தோளில் சாய்த்துக் கொண்டாள்.

சொற்பநொடிகளே என்றாலும் கணவனின் கசந்த கண்களை பார்க்கும் போது அவளின் உயிரையே வதைத்தது. "சொன்னா அவர் எப்படி எடுத்துப்பார்னு தெரியலையே... ஆனாலும் அவர்கிட்ட தெரியப்படுத்தியே ஆகணும் இல்லையா?” எதையாவது சொல்ல வேண்டுமே என்று சொன்னாள்.

"எப்படிப்பட்ட சூழ்நிலையா இருந்தா என்ன திவ்யா? பகைன்னு வந்துட்டா எதிர்த்து நின்னு முறியடிக்கணும்னு தாத்தா எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாரு. அதை சரியா செஞ்சு முடிப்பேன். பழிக்குபழி வாங்கறதுல நான் எப்பேற்பட்ட மோசமானவன்னு தெரியாம அந்த நாய் என் காலை கவ்விடுச்சு! என்னை சீண்டினவங்களுக்கு முடிவு ரொம்ப மோசமா எழுதுவேன்னு அவனுக்குப் புரியாமலேப் போயிருச்சு!" சோகம் போய் ஆத்திரமாக ஒலித்தது சத்யாவின் குரல்.

சட்டென்று அதிர்ந்து போனாள் திவ்யா. இத்தனை ஆவேசம், ஆக்ரோசம் எல்லாம் இவனை மட்டுமல்ல இவனைச் சார்ந்த மற்றவர்களையும் பதம் பார்த்து விட்டே தானே அடங்கும்!

“அமைதியா இருங்க கண்ணா... யோசிப்போம், எப்படி அவனை பிடிக்கிறதுன்னு தாத்த்தகிட்டையும் கேப்போம். அவசரத்துல செய்யுற எதுவும் சரியா இருக்காது”

“இல்ல தியா... நான் இப்பவே கேஸ் ஃபைல் பண்ணப் போறேன்” என்றுபடி எழுந்து நின்றக அவனை தடுத்தாள்

“இப்ப செய்ய வேண்டிய காரியம் அது இல்ல கண்ணா... நம்ம ஆபீசை போய் பாருங்க! டீலர்ஸ் மீட் வச்சு பேசுங்க! ராகவன் விசயத்தை கொஞ்சம் நிதானமா கையில எடுக்கலாம்” என திவ்யா தன்மையாக சொன்ன நேரத்தில்,

தேவானந்தனும் இன்டர்காமில் அழைத்து, “கீழே வா சத்யா... உனக்கு விசயம் தெரியுமா, தெரியாதா?” என்ற கோபத்துடன் அழைத்தார்.

அடுத்த நிமிடமே இருவரும் கீழே சென்று நிற்க மங்கையர்க்கரசியும் அங்கே இருந்தார்.

“என்னடா நடக்குது? என் மாமனார் உயிரை கொடுத்து வளர்த்து விட்ட தொழிலை எல்லாம் இப்டி மண்ணை கவ்வுர அளவுக்கு இறக்கி வைச்கிருக்கியே?” என்று கோபமுடன் அன்னை கேட்க, பதில் பேசாமல் இருந்தான் சத்யானந்தன்.

தாய் புரிந்து கொள்ளாமல் பேசுகிறாள் என்ற கோபம் இருந்தாலும் அதை சொல்லிக் காட்டும் நேரம் இதுவல்ல என்று பொறுமையுடன் அமைதி காத்தான்.

தேவானந்தன் முகத்திலோ எதைப் பற்றியும் யோசிக்காத இறுக்கம் குடி கொண்டிருந்தது. மருமகளை பேச வேண்டாமென்றும் சொல்லவில்லை. அதே சமயத்தில் பேரனை தனது வாய்மொழியால் நிந்திக்கவும் இல்லை. அழுத்தமாய் அவனைப் பார்த்தார்.

“என்ன செய்யப்போற சத்யா?” என்று அழுத்தமாய் கேட்டார்.

“அவனுக்கு ஒரு முடிவு கட்டாம விட மாட்டேன் தாத்தா!” என்றதும்,

“அப்போ பிசினெஸ்? டீலர்ஸ்... நம்ம கம்பெனிய எப்படி தூக்கி நிறுத்தப் போற?” சராமாரியாக வந்த எதிர்கேள்வியில் திடுக்கிட்டு நின்றான் சத்யானந்தன்.