நினைவு-29
இப்பொழுதெல்லாம் மகனை சற்று உன்னிப்பாய் கவனிக்கிறார் மங்கையர்க்கரசி. அவருக்கு தான் தெரியுமே... திவ்யா, ராமநாதன் ஆஃபிஸில் தான் வேலை பார்க்கிறாள் என்று! அவளை சந்தித்த பின் மகனின் மனநிலை என்னவென்று கூர்ந்து கவனிக்கிறார்.
மனதை அலைபாய விடாமல் இருக்க எப்பொழுதும் ஏதாவது ஒரு வேலை இருப்பது போல் ஏற்பாடு செய்து கொண்டான் சத்யானந்தன். ஆனாலும் இரவு என்று ஒன்று வருமே! குளிர்நிலவும், வாடைக்காற்றும் தன்னியல்பு மாறி எதிர்மறையாக வேலை செய்து நெடுநல்வாடையாகிப் போகும் என்றா நினைத்தான்!
விஷ்வாவிடம் இது பற்றி பேசலாம் என்றால், அவன் மனசாட்சியை விட கேவலமாகத் திட்டுவானே என்று எண்ணிக் கொண்டான். அடக்க நினைப்பது தான் ஆணவம் கொண்டு ஆடும். எனவே அதை கடக்க நினைத்தான் சத்யா.
அவளை நினைக்கக் கூடாதென்று எண்ணியே எந்நேரமும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை அறிந்தான். இனிமேல் இங்கு வரக்கூடாது என்றவனது, வைராக்கியம் பிரசவ வைராக்கியமாக மாறி அடுத்த வாரத்திலேயே அவனை அலுவலகம் வரச் செய்தது.
எத்தைத் தின்றால் பித்தம் தீரும் என்று அலுவலகம் வந்தவனுக்கு, அவள் நிமிர்ந்தும் தன்னைப் பார்க்கவில்லை என்பதே கோபத்தை உண்டாக்கியது. 'அப்படியென்ன சின்சியரா வேலை பாக்குறாங்களாமா?' என்று நினைத்தவன் அவளை இன்டர்காமில் உடனே அழைத்தான்.
அனுமதி கேட்டு உள்ளே வந்தாள். "குட்மார்னிங் சார்." என்றவளை நிமிர்ந்து கூட பார்க்காமல், தனது கைபேசியில் பார்வையைப் பதித்திருந்தான்.
"விஷ் பண்ணனும்கற மேனர்ஸ் எல்லாம் தெரியுமா?" என்றான் நிமிர்ந்து பார்க்காமலேயே..
"சார்..." என்றாள் குழப்பமாக.
"அப்ப… நான் வரும்போது கவனிக்கலியோ?" என்றான்.
இப்படியெல்லாம் சில்லியாக வேலை பார்ப்பவர்களிடம் கேள்வி கேட்பவன் கிடையாது. அவள் பார்வை தரிசனம் கிடைக்காத கோபம் அவனுக்கு!
"சார்... உங்க தாத்தா தான் உங்க சின்சியாரிட்டிய வேலையில மட்டும் காமிங்கனு சொன்னாங்க!" என்றாள்.
"அவரு அந்தக் கால மனுஷன். பெருந்தன்மையா சொல்லியிருப்பாரு!" என்றான்.
'இவரு கேக்கறது தான் அந்தக்கால மனுஷங்க மாதிரி இருக்கு.' என்று நினைத்தவள், "சாரி சார்!" என்றாள்.
அப்பொழுது கதவு தட்டப்பட, "யெஸ்." என்றான்.
கதவைத் திறந்து கொண்டு ராகவன் உள்ளே வந்தான். "குட்மார்னிங் சார்." என்றான்.
"மார்னிங் ராகவன்... உட்காருங்க!" என்றவன், "நீங்களும் தான்!" என்றான், இன்னும் நின்று கொண்டிருந்த திவ்யாவைப் பார்த்து.
"குட்மார்னிங் திவி!"
ராகவன் அவள் பக்கமும் பார்வையை ஓட்டியவாறே கூற, சரியாக இருந்த துப்பட்டாவை சரிசெய்து கொண்டே சிறு தலையசைவைப் பதிலாக அளித்தாள்.
ராகவனின் ‘திவி’ என்ற அழைப்பில் முகம் இறுகியதென்னமோ சத்யாவிற்கு தான். அவனது முகமாற்றத்தைப் பார்த்தவாறு அமர்ந்தவள், 'ஒருவேளை நம்ம தலைய மட்டும் அசைச்சதால இதுக்கும் மேனர்ஸ் இல்லைனு திட்டுவாரோ?' என நினைத்தாள்.
"சார்… இன்னைக்கு போக வேண்டிய லோடோட டீடெய்ல்ஸ்... அப்புறம் இருக்கிற ஸ்டாக் டீடெய்ல்ஸ்ம் இருக்கு. இன்னும் நமக்கு ஆட்கள் தேவைப்படுறாங்க சார். நீங்க வந்த பின்னால ஆர்டர்ஸ் அதிகமாகியிருக்கு. பேக்கிங் ஆளுங்க கம்மியா இருக்காங்க சார்." என்றான் ஃபைல்களை அவனிடம் நீட்டியவாறே.
அதை திவ்யாவிடம் கொடுத்தவன், "இதையெல்லாம் சிஸ்டம்ல ஏத்திருங்க! அப்புறம் ஆள் எடுக்கவும் ஏற்பாடு பண்ணிருங்க." என்றான்.
"ஓகே ராகவன், நீங்க போகலாம்." என்றான் அவன் பார்வை மீண்டும் அவள் மீது படிவதை விரும்பாதவனாய்.
"ஓகே... சார்!" எனக் கூறிக் கொண்டு ராகவன் வெளியேற,
அவன் சென்றவுடன், "சார்! இதுக்கும் திட்டாதீங்க. அவருக்கெல்லாம் தலையை மட்டும் ஆட்டினதே பெரிய விஷயம். அதுக்கும் மேனர்ஸ் எங்கேனு கேக்காதீங்க!" என்றாள் வேகமாக.
"இப்ப நான் அதைப் பத்தியே கேக்கலியே... இவரு இப்படித் தான் எல்லோருடைய பேரையும் சுருக்கி கூப்பிடுவாரா?" புருவம் சுருக்கி சத்யா கேட்க,
"ஏன் சார்? சுருக்கக் கூடாதா!" காரணம் அறியும் ஆவல் அவளுக்குள் குறுகுறுப்பாக எழுந்தது.
"அது உரிமைப்பட்டவங்க மட்டும் தான் அப்படிக் கூப்பிடணும். மத்தவங்க மரியாதை கொடுத்து கூப்பிடணும்." என்றான்.
ராகவன் தன்னை அவ்வாறு அழைத்தது பிடிக்கவில்லையோ என்று நினைத்தவளுக்கு அந்த நினைவே தித்திப்பாயிருக்க,
'ம்க்கும்... இதுக்கேவா? ஓவரா இமாஜின் பண்ணாதே!' என்று மனசாட்சி தலையில் தட்டி நினைவூட்டியது.
"அடுத்த வாரம் ஆடிட்டிங் இருக்குனு தெரியும்ல? ஆனா இன்னும் நிறைய ஃபைல்ஸ் டேலி பண்ணாம இருக்கே?" என்றான் தனது லேப்டாப்பில் பார்வையை ஓட்டியவாறே.
"அதுக்குள்ள முடிச்சுரலாம் சர்!"
"எப்படி முடிப்பீங்க? நிமிரக் கூட நேரமில்லைங்கற மாதிரி வேலை பாக்குறீங்க... ஆனா இன்னும் இவ்ளோ பென்டிங் இருக்கு. ஆனா மத்தவங்களுக்கு தலையை மட்டுமாவது ஆட்டணும்னு தெரிஞ்சிருக்கு."
'இப்ப இவரோட பிரச்சினை என்ன? இவருக்கு விஷ் பண்ணாததா? அவனுக்கு தலையாட்டினதா? இல்ல... வேலை பென்டிங் இருக்கறதா? சந்தைக்கு போணும்... ஆத்தா வையும்ங்கற ரேஞ்சுலயே முதலிலிருந்து ஆரம்பிக்கறாரே!' என்று மண்டை காய்ந்தாள்.
அவளிடம் பதில் இல்லாமலிருக்க, நிமிர்ந்து பார்த்தவன், "எக்ஸ்ட்ரா டைம் எடுத்தாவது இன்னும் ரெண்டு நாள்ல முடிச்சிருங்க!" என்றான்.
"யெஸ் சார்!" என்று எழுந்தவளிடம்,
"அடுத்தவங்களை அதிக உரிமை எடுத்துக்க விடாதீங்க.. உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்." என்றான்.
'அதுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாது. இவரு என்னடான்னா ஒரு தடவைக்கே காண்டாகுறாரு!' என்று நினைத்தவள், சட்டென
'ஆஹா! எங்கேயோ லைட்டா புகையுதே... தான் ஆடாட்டாலும் தன் தசையாடும்கற மாதிரி, பொண்டாட்டி நினைப்பு இல்லைனாலும், அடுத்தவன் பார்வை படும்போது பொறாமை வருதே!' என்று சந்தோஷப்பட்டாள்.
"பொதுவாகச் சொன்னேன்." என்றான், அந்த சந்தோஷத்தை நீட்டிக்க விடாமல்.
"நோட்டீஸ் போர்டுல போட்டுறவா சார்!" என்றாள் அவளும் கடுப்பாகி...
அவன் புரியாமல் பார்க்க, "இப்ப நீங்க பொதுவாகன்னு சொன்னதை எல்லாரும் தெரிஞ்சுகிட்டுமேனு கேட்டேன்." என்றாள்.
தன் மீது அக்கறை காட்டுகிறான் என்று அவள் நினைத்திருக்க, அவன் பொதுவாக என்று கூறியதும் மிளகாயின் நெடியாக கோபம் மூளைக்குள் சுருசுருவென ஏறியது.
‘யாரு... பொண்டாட்டியாக்கும்!’ மனசாட்சி கெத்து காட்டியது.
அதே கோபத்தோடு வெளியே வந்தவள், தன் எரிச்சலைக் கணினி தட்டச்சுப் பலகையில் தடதடவென காண்பித்தாள்.
அனைவரும் அலுவலக நேரம் முடிந்து கிளம்ப, "திவி! கிளம்பலயா?" நந்தினியின் குரல்.
"இல்லப்பா! இன்னும் கொஞ்சம் டேலி பண்ண வேண்டியது இருக்கு!" எனக் கூற,
"நான் வேணும்னா இருக்கவா? வேலை முடியவும் கிளம்பலாம்!"
"ஏன் நந்து? இன்னைக்கு தான் வீக் என்டுனு அண்ணன் உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க... நீ என்னடான்னா எனக்காக வெயிட் பண்றேன்கறே?" எனக் கேட்டு திவ்யா சிரிக்க,
"இல்லப்பா... நீ தனியா இருக்கியேன்னு பாத்தேன்..."
"நீ கிளம்பு நந்து... இந்த ஒரு ஃபைல் தான். சீக்கிரம் முடிச்சுட்டு நானும் கிளம்பிருவேன். மீதியை நாளைக்குப் பாத்துக்கலாம்."
"அப்ப சரி... நான் கிளம்பறேன்!" என்று நந்தினி கிளம்பி விட்டாள்.
தன் வேலையில் கவனமாக இருந்தவளை ராகவனின் குரல் கலைத்தது.
"என்ன திவி! இன்னும் கிளம்பலையா? கீழே உங்க ஸ்கூட்டியைப் பாத்தேன்." என்றான்.
அவளது வண்டியைப் பார்க்கிங்கில் பார்த்தவன், திவ்யா தனித்து இருப்பாள் என எண்ணிக் கொண்டு வந்தான்.
ஆனால் எம்.டி. அறையில் சத்யா இருப்பதும் கண்ணாடிக் கதவு வழியாகத் தெரிந்தது. இவள் இன்னும் கிளம்பவில்லை எனத் தெரிந்து அவனும் கிளம்பவில்லை.
ஆர்வக் கோளாறில் ராகவனுக்கு, திவ்யாவின் ஸ்கூட்டி தெரிந்தது பார்க்கிங்கில் நின்றிருந்த சத்யாவின் கார் தெரியவில்லை. சந்தர்ப்பம் தேடி வந்தவனின் வேகம் எம்.டி. அறையைப் பார்த்ததும் குறைந்தது.
வேலை முடிய தனது மேஜையை ஒதுங்க வைத்தவாறு எழுந்தவள், கதவு வழியாக சத்யாவின் பார்வை தங்களையே கவனிப்பது தெரிய,
"நீங்க இன்னும் கிளம்பாம என்ன பண்றீங்க ராகவன்?" என்றாள் சற்றே சிரித்த முகமாக.
"இப்பத் தான் மிளகாய் லோடு வந்தது. அதை சரிபார்த்து குடவுன்ல இறக்கிட்டு வர்றேன்." என்றவன், அவளின் மில்லி மீட்டர் சிரிப்பிற்கே, தனது பல்வரிசை அத்தனையும் காட்ட, திவ்யாவோ அவனை நான்காம் நாள் விருந்தாளியைப் போல் வேண்டா வெறுப்பாகப் பார்த்து வைத்தாள்.
உள்ளிருந்து பார்த்தவனுக்கோ, அவளது மூளைக்குள் அவன் ஏற்றிய மிளகாய்க்காரம், இப்பொழுது அவன் கண்களில் காந்தியது.
அவனும் விரைவாக தனது பேக்கை எடுத்துக் கொண்டு வெளிவர, மூவருமே சேர்ந்தே வெளியேறினர். பார்க்கிங்கில் தனது காரின் அருகில் சென்றவன், திவ்யா தனது ஸ்கூட்டியைக் கிளப்பும் வரை சற்று நிதானித்தான்.
ஸ்கூட்டியில் சாவி நுழைத்து முடுக்க, அது என்னவோ செல்ஃப் ஸ்டார்ட் ஒர்க் ஆகாமல் மக்கர் பண்ணியது. சரி கிக்கரில் ஸ்டார்ட் செய்யலாம் என முயற்சி செய்ய அதுவும் அவளிடம் சில உதைகள் வாங்கியும் போக்குக் காட்டியது.
அதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சத்யா, அவளையே நோட்டம் விட்ட ராகவனை முந்திக் கொண்டு திவ்யாவின் அருகில் வந்தான். ராகவனும் சற்று நெருங்கினான்.
சத்யா அருகே வரவும் அவளும் வண்டியை விட்டு ஒதுங்கிக் கொண்டாள்.
"இவ்ளோ பழைய மாடல் வண்டினு தெரியுதுல்ல... சர்வீஸ்க்கு விட்டு வச்சா என்ன? இதைக் கூடக் கவனிக்காம உங்க ஹஸ்பன்ட் என்ன பண்றார்?" எனக் கோபமாகக் கேட்டான்.
அவனுக்கு அவள் மாற்றான் மனைவி என்பதைத் தன்மனதில் ஆழப்பதிய வைக்க வேண்டியுள்ளது. அவள் நினைப்புதான் அவனுக்குள் பத்து தலை இராவணனாய் தலைவிரிக்கிறதே!
இது அவளது அம்மாவின் வண்டி. ஸ்கூட்டி-ஈ.எஸ். அன்னையின் நினைவாக வைத்துள்ளாள். பேட்டரி வீக்காகி செல்ஃப் ஸ்டார்ட் ஒர்க் ஆகாமல் மக்கர் பண்ணியது. சத்யா உடனிருந்த வரை அவன்தான் அவளது வண்டியை சர்வீஸ் பார்த்து வைப்பான்.
சத்யா கேட்டவுடன், அருகில் நின்ற ராகவன், "அவங்க ஹஸ்பன்ட் தான் வெளிநாட்டுல இருக்காரே சார்... அதனால தான் வண்டி சர்வீசுக்கு விடாம வீணாப் போய்கிட்டு இருக்கு." கூறியவன் இதழில் இழிவாய் ஒரு இழிப்பு.
அவன் கூறியதன் உள் அர்த்தத்தை உள்வாங்கியவனோ, ராகவனை முறைத்துக் கொண்டே ஒரே உதை உதைக்க வண்டி உடனே ஸ்டார்ட் ஆகியது.
அவளிடம் வண்டியைக் கொடுத்தவன், "நீங்க கிளம்புங்க!" என்றான் சற்று சீரலாய்.
அவன் கண்களில் தெரிந்த கோபம் சற்று அவளைப் பயமுறுத்தினாலும், அடுத்தவன் தன்னை நெருங்குவதை விரும்பாத, அவனது உள்மன உணர்வைப் புரிந்து கொண்டவள், தன் கண்ணன் மடிசேரும் காலம் தொலைவில் இல்லை எனத் தெரிந்து கொண்டவளாய் உல்லாசமாய்க் கிளம்பினாள்.
அருகில் நின்ற ராகவன் தோள் மீது கை போட்டவன், "மிஸ்டர் ராகவன்... இது லேடீஸ் அதிகமா வேலை பாக்குற கம்பெனி. பேசும்போது வார்த்தையை பாத்துப் பேசுங்க... எழுத்துப் பூர்வமா கம்ப்ளைன்ட் வந்தா தான்னு இல்ல. ஏதாவது தப்பா தெரிஞ்சா தனிப்பட்ட முறையிலும் ஆக்ஷன் எடுக்க வேண்டியிருக்கும். இது உங்களுக்கு ஃபர்ஸ்ட் வார்னிங்!" என்று பொறுமையாகக் கூறியவன் அவன் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு சென்றான்.
கூறியது என்னவோ பொறுமையாகத் தான். ஆனால் அதில் அவன் கொடுத்த அழுத்தம் வேறொரு அர்த்தம் கொடுத்தது.
இந்த மாதிரி ஆட்கள் எங்கும் இருப்பார்கள். உடனே வேலைவிட்டு நீக்கினால் இதே வேலையை இன்னொரு இடத்தில் தொடரப் போகிறார்கள். இவ்விடத்திற்கு வரும் இன்னொருவனும் இதே வேலையைச் செய்ய மாட்டான் என்பது என்ன நிச்சயம்.
அதற்காக எதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா. அதனாலயே ராகவனை எச்சரித்து அனுப்பினான். சாம, பேத, தான, தண்டம் என சொல்லி வைத்திருக்கிறார்களே... எனவே பொறுமையாகவே எச்சரித்துச் சென்றான்.