நினைவு-27
மகனது திடீர் திருமணத்தை அறிந்து மங்கையர்க்கரசி முதலில் அதிர்ந்தாலும், அவனது விருப்பமே முக்கியமென்று சமாதானம் ஆகிவிட்டார். அவரைப் பொறுத்தவரை மகன் கிடைத்ததே போதும் என்றிருந்த நிலையில் அவனது ஆசையும், செயலும் பெரிதாகத் தெரியவில்லை.
மறுநாள் அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடாக அனைத்து டெஸ்ட்டுகளும் எடுக்கப்பட்டு, அதிகாலை அறுவை சிகிச்சை செய்வதற்கு நேரமும் குறிக்கப்பட்டது.
அது விஐபி அறை என்பதால் அனைவருமே அங்கிருந்தனர். சற்று நேரத்தில், பிள்ளைகள் தனியாக இருப்பார்கள் என சண்முகமும், லட்சுமியும், காலை வருவதாகக் கூறி விட்டுக் கிளம்பினர்.
"சத்யா... நானும் ஆன்ட்டியும் போய் சாப்பிட்டு வர்றோம். வரும்போது சிஸ்டர்க்கு வாங்கிட்டு வந்துர்றோம்." என்று கூற,
மங்கையர்க்கரசியும் விஷ்வாவுடன் கிளம்பி விட்டார். சத்யாவுக்கு எளிமையான மருத்துவமனை உணவு வழங்கப்பட்டது.
அவன் பெட்டில் அமர்ந்திருக்க, திவ்யா அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சேலையை மாற்றிவிட்டு சுடிதாரில் வந்திருந்தாள்.
"தியா..."
"ம்ம்ம்…"
"இப்பவும் எதுவுமே பேசாம என்னை சோதிக்கிறே! என் முடிவு பிடிக்கலியா?" என்றவனிடம்,
"புருஷன் முடிவு தான் பொண்டாட்டி முடிவுனு சொல்லியாச்சே! அதான் கல்யாணமே முடிச்சு மறுவீடு வந்திருக்கோமே... அப்புறம் என்ன?" என்றாள்.
"ஆஹாங்! உனக்கிது மறுவீடா? அப்படினா... அடுத்தது எப்ப தியா?" பெட்டில் அமர்ந்தவாறு அவன் புன்னகையுடன் கேட்க,
"இதுக்கு தான் உங்ககிட்ட தனியா சிக்கக்கூடாது. ஏதேதோ பேசுறீங்க?" என்று சிணுங்கினாள்.
"ஹேய்! நான் அடுத்ததுன்னு சொன்னது மாமியார் வீட்டு விருந்து. நீ எதை நெனச்ச?" என்று கேட்டு கண் சிமிட்டியவனை, அவளால் கோபமாக முறைக்க மட்டுமே முடிந்தது.
"ஓகே! ஓகே! கொஞ்சம் மூடியா இருந்த... அதனாலதான் கொஞ்சம் ஜில் பண்ணலாம்னு பாத்தேன்." என்று இழுக்க,
"நீங்க பாத்த வரைக்கும் போதும்!" என்றாள் உதடு சுழித்து.
"ஏய்... நான் எதுவுமே பாக்கல!"
"கண்ணா! வேண்டாம்…"
"தியா... நமக்கு இப்ப என்ன நேரம் தெரியுமா? பேச்சுக்குக் கூட தடை போட்டா எப்படி? நான் பாவமில்லயா!"
"யாரு... நீங்க பாவமா? கண்ணை மூடி நின்னவளுக்கு தாலி கட்டிட்டு, அடுத்து மாமியார் வீட்டு விருந்தும் கேக்குறீங்களே... நீங்களா பாவம்?" எனக் கேட்டாள்.
"எங்கே? இதுல உனக்கு சந்தோஷம் இல்லைனு சொல்லு பாக்கலாம்."
"உண்மைய சொல்லணும்னா நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் கண்ணா!" என்றவளை நோக்கி தனது வலது கையை நீட்ட, கரம் பிடித்தவள் எழுந்து வந்து அவனருகில் பெட்டில் அமர்ந்தாள்.
"எனக்கும் தெரியும். பெத்தவங்களும் இல்லாம, நானும் உனக்கு கிடைப்பேனாங்கற குழப்பத்துல இன்செக்யூரா ஃபீல் பண்ணின. உன்னை எப்படி தெளிய வைக்கிறதுன்னு தெரியல? அதனால தான் இந்த அதிர்ச்சி வைத்தியம்."
"வைத்தியம் பண்றதுல நீங்க கை தேர்ந்தவங்க தான்!"
"எது... அந்த பவளமல்லி செடித்திட்டு வைத்தியத்த சொல்றியா?" என்று குறும்புடன் கேட்டவனை, பார்க்க முடியாமல் முந்தைய நாள் நினைவில் கன்னம் சிவக்க, தலை குனிந்தாள்.
விரல்கொண்டு தாடை தொட்டு அவள் முகம் நிமிர்த்தியவன், தன்னவளின் கண்களில் தெரிந்த நாணத்தில் கட்டுண்டவனாக, "தியா... இப்ப உன்னைப் பாக்க எப்படியிருக்கு தெரியுமா? ஆப்ரேஷனும் வேணாம், ஒன்னும் வேண்டான்னு உன்னைய அப்படியே தூக்கிட்டு யாருமில்லாத இடத்துக்கு ஓடணும் போல இருக்கு!"
அவளவன் முகத்தில் தெரிந்த வேட்கையில், பயம் கொண்டவள் மிரட்சியுடன் வாய் திறக்கும் முன், "கண்ணா ப்ளீஸ்..."
“அதுதானே...” என்றான் சிரிப்போடு.
"தியா… நான் தாலி கட்டியது உனக்காக மட்டுமில்லை. பழைய ஞாபகம் வந்தாலும் சரி. இல்ல, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்னு ஆனாலும் சரி... என்னோட தியாவை இழந்திடக் கூடாதுங்கறதுக்காக சுயநலத்துல கட்டியது. கண்ணனோ, சத்யாவோ! நீ எனக்கு மட்டும் தான். எப்பவும் உனக்கு நான் கண்ணன் தான். நான் எப்பவும் காதல் சுயநலவாதியாகவே இருக்க விரும்பறேன்." என்று கூறியவன் இரு கைகளையும் விரித்துக் காட்ட தாய்மடி சேரும் பறவைக்குஞ்சாய் அவன் நெஞ்சத்தில் மஞ்சம் கொண்டவளை, இருகை கொண்டு ஆதுரமாய் தழுவிக் கொண்டான்.
மோகமற்ற மோனநிலையில் சிறிது நேரம் கழிய, திவ்யாவின் கைபேசி அழைத்தது. அழைப்பை ஏற்க, "சிஸ்டர் சாப்பாடு வாங்கிட்டு நானும், ஆன்ட்டியும் வந்துகிட்டிருக்கோம்." என்றான்.
"வாங்க விஷ்வா..." என்றவள் அழைப்பை துண்டிக்க,
"விஷ்வா சூப்பர்ல." என்றான்.
"ஆமாமா! உங்களுக்கேத்த ஆளுதான். ஏன்? இங்கேயே சாப்பாடு வரவைக்க முடியாதாக்கும்." என்றாள் கண்ணனின் திவ்யா.
***
எப்பொழுது என்று அனைவரும் காத்திருந்த நேரமும் வந்தது. அறுவை சிகிச்சை முடிந்து கண்களைத் திறந்திருந்தான் சத்யானந்தன்... அவன் கண் விழித்ததை மருத்துவருக்கு அறிவிக்க செவிலி வேகமாகச் சென்று விட,
தானிருக்கும் அறையைச் சுற்றி பார்வையை ஓட்டியவன், தன்னைச் சுற்றியிருந்த உபகரணங்கள் மூலம் மருத்துவமனை என்பதை மூளை கிரகிக்க சற்று நேரம் பிடித்தது.
என்ன நடந்தது என்று யோசித்தவனுக்கு, விபத்து நடந்ததும் தான் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டதும் நினைவுக்கு வந்தது. ஆழ்ந்த மயக்கமா, அல்லது அறுவை சிகிச்சையின் பலனோ ஏதோ ஒன்று அவனின் நினைவுகளை மீட்டிருந்தது.
மருத்துவர் வந்து சோதிக்க, அதுவரை அமைதியாகவே இருந்தான். அவனின் தாயையும், நண்பனையும் மட்டும் முதலில் உள்ளே அழைத்தார்.
உலகிலுள்ள அனைத்து தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு மங்கையர்க்கரசி உள்ளே வந்தார். அமைதியாகவே அமர்ந்திருந்தான்.
"தம்பி! எப்படிப்பா இருக்க?" தழுதழுத்த அன்னையின் குரலை காதில் வாங்கியவன், சற்று யோசித்து,
"ம்மா! தாத்தா எங்கேம்மா? என்றான்.
மகன் மீண்டுவிட்ட சந்தோஷம் அன்னையின் முகத்தில்.
மீண்டும் யோசித்தவன், தாயின் அருகிலிருந்த நண்பனைப் பார்த்து, "டேய் விஷ்வா! ஆக்சிடன்டான இன்னொரு கார்ல இருந்தவங்களுக்கு என்னடா ஆச்சு?" என்று கேட்க, என்ன சொல்வதென்று மருத்துவரைப் பார்க்க, அவர் கண்ணால் அமைதி காட்டினார்.
"எல்லாம் என்னால தான்டா. நான் மட்டும் அந்த குடிகாரன் டாக்சியில ஏறாம இருந்திருந்தா அவங்களுக்கும் ஆக்சிடன்ட் ஆகியிருக்காது. அவங்களுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா என்னாலயே என்னை மன்னிக்க முடியாதுடா!" என பேசிக் கொண்டிருக்க,
அதிகமாக யோசித்ததினால் பின் மண்டையில் மின்னலென ஒருவலி உணர்ந்தவன், "ஸ்ஸ்ஸ்…." என பின் தலையைத் தடவினான்.
"மிஸ்டர் சத்யா! இப்போதைக்கு ரிலாக்ஸா இருங்க. இப்பதான் உங்களுக்கு சர்ஜரி பண்ணியிருக்கு. ரொம்ப ஸ்டிரெயின் பண்ணாதீங்க!" என்றார்.
"எனக்கு தலையில மட்டும்தான் அடிபட்டுச்சா? கால்லயும் அடிபட்ட மாதிரி இருந்தது. ஆனா கால் நல்லாயிருக்கே?" என்றான்.
"இப்பத் தானே சொன்னேன். ஓவரா தின்க் பண்ணாதீங்க சத்யா!" என்றார் மருத்துவர்.
நண்பனைப் பார்த்தவன், "டேய்... மச்சா! ஆஸ்ட்ரேலியா போனவன் வர ஒரு மாசத்துக்கு மேல ஆகும்னு சொன்னே! அதுக்குள்ள எப்படா வந்த?"
‘வாங்க விஷ்வா!’ என மரியாதை கொடுத்து விலகி நின்றவன், அவனை பழைய மாதிரி அழைத்தது அவனுக்கு தன் நண்பன் மீண்டு விட்டதை உறுதிப்படுத்தியது.
சத்யானந்தன் மீண்டும் மீண்டு வந்து விட்டானே அதுவே மிகப்பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தது. அதே சமயத்தில் அடுத்து என்னவோ என்ற கலக்கமும் குழப்பமும் ஒன்றாய் சேர்ந்து கொண்டது.
ஆனால் இன்னும் அவன் திவ்யாவைப் பற்றியோ, சண்முகம் குடும்பத்தைப் பற்றியோ விசாரிக்கவில்லை. அவனிருந்த வேகத்திற்கு முதலில் திவ்யாவைப் பற்றி தான் விசாரித்திருக்க வேண்டும். ஆனால் அதற்குரிய அறிகுறி எதுவும் அவன் முகத்தில் இல்லை.
"நீங்க ரெஸ்ட் எடுங்க சத்யா... மெதுவாகப் பேசிக்கலாம்!" என்றார் மருத்துவர்.
மூவரும் வெளியேற, இறை கொண்டு வரும் தாய்ப்பறவைக்காக, ஆவலாகக் காத்திருக்கும் பறவைக்குஞ்சென, அவர்களுக்காக காத்திருந்த திவ்யாவின் முகத்திலிருந்த ஆர்வத்தைப் பார்த்த மங்கையர்க்கரசிக்கோ என்ன சொல்வதென்று புரியவில்லை.
"டாக்டர்! அவன் இவங்களைப் பத்தி ஒன்னுமே கேக்கலியே?" என்றான் விஷ்வா.
"நானும் அதைத்தான் யோசிக்கிறேன். அவரைப் பொறுத்தவரைக்கும் இப்ப ஆக்சிடன்ட்டாகி அட்மிட் ஆனதாத் தான் நினச்சுக்கிட்டு இருக்கார். வேணும்னா இவங்களையும் அவர் பாக்கட்டும். அவருடைய ரியாக்ஷன வச்சு, அவருடைய தற்போதைய நிலமை என்னன்னு பாக்கலாம்." என்றவாறு அவர்களையும் அழைத்துச் செல்ல,
இவர்களைப் பார்த்தவன் முகத்தில் எந்த சலனமுமில்லை.
"இவங்க யாரும்மா?"
வார்த்தை இதயம் கீறுமா? இரத்தமின்றி கீறியது திவ்யாவிற்கு!
அவன் கேட்டதென்னவோ இரண்டே வார்த்தைகள் தான். ஆனால் அவ்வார்த்தைகளின் தாக்கம் அனைவர் முகத்திலும் எதிரொலித்தது. கும்பலாக நின்று இருந்ததினால் திவ்யா பக்கம் அவன் பார்வையே செல்லவில்லை.
"உனக்கு ஆக்சிடன்ட் ஆனப்ப ஹெல்ப் பண்ணவங்கடா!" என்று விஷ்வா கூற,
"சார்! இன்னொரு கார்ல் இருந்தவங்க என்ன ஆனாங்க சார்... நல்லா இருக்காங்கள்ல?" என்றான் வேகமாக சண்முகத்தைப் பார்த்து.
தற்பொழுது அவனது கவனமெல்லாம் இன்னொரு காரில் இருந்தவர்களுக்கு என்னவாயிற்று என்பதுதான். அவர் மங்கையர்க்கரசியைப் பார்க்க, அவர் கண்ணால் வேண்டாம் என்று சைகை செய்தார்.
"அவங்களைப் பத்தி தெரியலப்பா... அவங்கள வேற ஹாஸ்பிடல் கொண்டு போயிருப்பாங்களா இருக்கும்." என்று மங்கையர்க்கரசியே பதில் கூறினார்.
"டேய் சத்யா! உனக்கு வேற எதுவும் ஞாபகமில்லையா?" என விஷ்வா கேட்க,
"எதைப் பத்தி கேட்கற விஷ்வா? சூரத் போனதைப் பத்தி கேக்கறியா? அதை முடிச்சுட்டு தான், நேரா நான் அவினாசி வந்தட்டேனே... இந்த தடவை நான் வேற எந்த ப்ளானும் பண்ணலைடா! தாத்தாவுக்கு பெர்த்டே சர்ப்ரைஸ் கொடுக்கணும்கறதுக்காக, நான் ட்ரிப் போறதா சொல்லிட்டுப் போனேன்டா!" என்று அவன் பேசிக் கொண்டிருக்க, திவ்யா அங்கிருந்து வெளியேறினாள்.
மருத்துவர் அறையில் அனைவரும் கூடியிருக்க, "டாக்டர் இப்ப அவன் மனநிலைமை என்ன?" என்று விஷ்வா கேட்க,
"சத்யாவைப் பொறுத்த வரைக்கும் இப்பதான் ஆக்சிடன்ட்டாகி அட்மிட் ஆகியிருக்கார்.
இடையில இவங்க வீட்ல இருந்ததெல்லாம் ஞாபகம் வரல... கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் திரும்பலாம். வராமலும் போகலாம்." என்றதைக் கேட்டவன்,
"டாக்டர் அவன் கல்யாணம் பண்ணியிருக்கான்! ஞாபகம் வரலைன்னா எப்படி?" என்றான் விஷ்வா.
"உடனே நாம ஞாபகப்படுத்த முடியாது. பிரைன் ரொம்ப சென்சிடிவ் பார்ட். ஏன்னா இப்பதான் சர்ஜரி நடந்திருக்கு. எல்லாம் ஹீல் ஆனதுக்கப்புறம் தான் அடுத்து இதற்கான தெரபி ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க முடியும்." என்றார்.
இவர்கள் பேச்சை திவ்யா அமைதியாகவே கேட்டுக் கொண்டிருந்தாள். அனைவரும் வெளியே வந்தனர்.
"திவ்யா பயப்படாதேம்மா... கண்ணன்கிட்ட நடந்ததை சொன்னா புரிஞ்சுப்பான்மா... கண்டிப்பா உன்னை ஏத்துப்பான்மா!" என்ற லட்சுமியை விரக்தியாகப் பார்த்தாள்.
"திவ்யா! நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்." என மங்கையர்க்கரசி கூறினார்.
அவளும் என்னவென்று பார்க்க,
"திவ்யா! நீதான் சத்யாவோட மனைவி. அதுல எந்த மாற்றமும் இல்லை. அவன் எந்தளவுக்கு உன்னை விரும்பியிருந்தா யாரையும் கேட்காம தாலி கட்டியிருப்பான். ஆனா இப்ப அந்த ஞாபகம் கொஞ்சம்கூட இல்ல... காதலும், கல்யாணமும் எவ்ளோ பெரிய விஷயம். அதுவே அவனுக்கு இப்ப நினப்புல இல்ல!" என்று கூறியவரிடம்,
"அதுக்காக என்ன பண்ண சொல்றீங்கம்மா? நாம தான் எடுத்துச் சொல்லி புரிய வைக்கணும்." என்று சண்முகம் ஆவேசப்பட, சூழ்நிலை விபரீதமாகிக் கொண்டிருப்பதை அனைவராலும் உணர முடிந்தது.
பேதைப் பெண்ணின் வாழ்க்கைக்காக எதையும் எதிர்கொள்ளும் துணிவோடு சண்முகம் முறுக்கிக்கொண்டு நிற்க, மங்கையர்க்கரசியோ யாசிக்கும் தோரணையில் கண்ணீரோடு கைகளைப் பிசைந்து கொண்டு நின்றார்.