ninaikkatha neramethu - 26 in Tamil Love Stories by EKAA SREE books and stories PDF | நினைக்காத நேரமேது - 26

Featured Books
Categories
Share

நினைக்காத நேரமேது - 26

நினைவு-26

ஒருவழியாக கண்ணனின் அறுவைசிகிச்சை முடிந்திருந்தது. தீவிரசிகிச்சை பிரிவில் வெளியே அனைவரும் காத்திருந்தனர்.

அனைவரிடமும் பதற்றத்துடன் கூடிய அமைதியே நிலை கொண்டிருந்தது. சண்முகமும், லட்சுமியும் இருபுறமும் அமர்ந்திருக்க, திவ்யா அவளவன் கண் விழிக்கும் நேரத்திற்காகக் காத்திருந்தாள்.

மங்கையர்க்கரசியும் திவ்யாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். மகனின் அதிரடி முடிவு அவருக்குமே ஆச்சரியம்தான். நேற்று வரை மகனுக்கு உதவிய பெண்ணாக நினைத்துக் கொண்டிருந்தவள், இன்று அவனின் மனைவியாக, தனக்கு மருமகளாக மாறியிருந்தாள். அவள் மீது மகன் கொண்ட காதலின் தீவிரம் அப்பட்டமாகப் புரிந்தது.

‘எதிர்பாராததை எதிர்பாருங்க அம்மணி!’ என்று முன்தினம் இரவில் திவ்யாவிடம் கூறியவன், அடுத்து எடுத்த முடிவுகளெல்லாம் அதிரடிதான்.

விடிந்தவுடன் அவரவர் வேலையை முடித்துக் கொண்டு, பிள்ளைகளும் கிளம்பிவிட, திவ்யாவை கைபிடித்து இழுத்து கொண்டு சண்முகம் மற்றும் லட்சுமியின் முன் வந்தவன்,

"ம்மா… நான் திவ்யாவை விரும்புறேன்… அவளும் தான்!" என்றான் தடாலடியாக.

இருவரும் அதிர்ச்சியுடன் திவ்யாவைப் பார்க்க, "அவளை ஏன் பாக்குறீங்க? நேத்துல இருந்து அம்மணி குழப்பத்துல இருக்காங்க!"

"எதுக்கு?" என்று ஏற்கனவே கண்ணன் கொடுத்த அதிர்ச்சியில் இருந்தவர், புரியாமல் கேட்க,

"புதுசா மேடம் தகுதி அதுஇதுன்னு பேசுறாங்க!" என்றான்.

அவன் கூறிய விதமே, திவ்யா மேல் அவன் கொண்ட விருப்பமும் திவ்யாவின் பயமும் இருவருக்கும் புரிந்தது.

"நியாயம் தானேப்பா! எங்களுக்கே இது அதிர்ச்சியா இருக்கு. இருந்தாலும், தன்னோட வாழ்க்கையை முடிவு பண்ற உரிமை அந்த பிள்ளைக்கு தான் இருக்கு. கேசவன் இருந்தாலும் தன் மகளோட விருப்பத்தை தான் பாத்திருப்பார். ஆனா திவ்யாவோட வாழ்க்கையில எங்களுக்கும் அக்கறை இருக்கு!" என்று சண்முகம் கூறினார்.

"அப்ப நான் திவ்யாவுக்கு பொருத்தம் இல்லைனு சொல்றீங்களா?" கண்ணன் கோபத்துடன் கேட்க,

"மனசு ஒத்துப்போன பின்னாடி பொருத்தம் என்னப்பா வேண்டி இருக்கு? பொருளாதாரம் தான் கொஞ்சம் இடிக்குது." என்றார் சண்முகம்.

"பொருளாதாரம் பாத்து தான் என்னை கூட்டி வந்தீங்களா?" என்றான் சற்றே குரல் உயர்த்தி.

"உதவி வேற... வாழ்க்கை வேற கண்ணா!" என்று லட்சுமி கூற,

"நீங்களும் இப்படி பேசுவீங்கேனு நான் எதிர்பாக்கலம்மா!" என்றான் சற்று உள்வாங்கிய குரலில்.

"அதிகநாள் உன்னோட பழகலை கண்ணா! ஆனா திவ்யாவுக்கு உன்னை விடப் பொருத்தமானவனை நாங்க பாக்க முடியாது. இருந்தாலும் எதார்த்தம் பாத்தவங்க நாங்க. நாலையும் யோசிக்க வேண்டியிருக்குப்பா!" என்று சண்முகம் கூறினார்.

இவ்வளவும் கேட்டுக் கொண்டு திவ்யா அமைதியாக நின்றிருந்தாள். 

"இவ என்னைத் தவிர இன்னொருத்தனை மனசாலும் நினைக்க மாட்டா! நானும் அப்படித்தான்!" என்றான் உறுதியான குரலில்.

"கண்ணனா உன்னோட முடிவு சரிதான். ஆனா சத்யானந்தன் என்ன சொல்லுவாரோ தெரியலியே?" என்றார் லட்சுமி.

"என்ன இவளும் அதைத் தான் சொல்றா... நீங்களும் அதையே சொல்றீங்க! கண்ணனோ, சத்யாவோ திவ்யா தான் என் மனைவி. இதுதான் என்முடிவு. புருஷன் முடிவுதான் பொண்டாட்டி முடிவாகவும் இருக்கணும்! எந்த மாற்றமுமில்லை." என உறுதி கலந்த தொனியில் கூறிக் கொண்டிருக்க,

"சத்யானந்தன் மெல்ல வெளிய வர்ற மாதிரியிருக்கே." என்றவாறே விஷ்வா உள்ளே வந்தான்.

"அங்கிள் அவன் முடிவு பண்ணிட்டா யாராலும் மாத்த முடியாது. உங்களுக்கு எந்த குழப்பமோ பயமோ வேண்டாம்." என்றவன்,

"சிஸ்டர்! நீங்க என்ன சொல்றீங்க?" என்று விஷ்வா, திவ்யாவைப் பார்த்து கேட்க,

"அதுதான் அவங்களே சொல்லிட்டாங்களே! புருஷன் முடிவுதான் பொண்டாட்டி முடிவுனு! எனக்கும் எந்த மாற்றமும் இல்லை!" என்றாள் அவனை கீழ்பார்வை பார்த்துக் கொண்டே...

"அப்படி போடு! இதுக்கு மேல நாம பேசுறதுக்கு ஒன்னுமில்ல!" என விஷ்வா கூறினான்.

"கடவுள் சித்தம் அதுதான்னா நாங்க என்ன சொல்ல முடியும்? நடப்பது நடக்கட்டும். திவ்யாவைப் பாக்கும் போதெல்லாம் நமக்கு ஒரு பையன் இல்லையேனு நினைச்சிருக்கேன். கண்ணன் அந்த குறைய தீக்க வந்த மாதிரி இருக்கு எங்களுக்கு." என்று லட்சுமி கூறினார்.

"சத்யா! கிளம்பலாமா? அம்மா நேரா ஹாஸ்பிடல் வந்துர்றதா சொல்லிட்டாங்க." என்ற விஷ்வாவிடம்,

"தாத்தா எப்படியிருக்கார்?" என்று கேட்டான் கண்ணன்.

"வயசாயிருச்சுல்ல... உனக்கு ஆக்சிடன்ட்னு கேள்விப்பட்டதும் தாங்க முடியாம நெஞ்சுவலி வந்துருச்சு. சின்னதா ஒரு ஹார்ட் ஆப்ரேஷன் பண்ணியிருக்கு. நேத்தே கண்ணு முழிச்சுட்டாரு. நீ இருக்கிற இடம் தெரிஞ்சுருச்சு, சீக்கிரம் வந்துருவான்னு சொல்லியிருக்கோம். வேற எதுவும் சொல்லல." என்று விளக்கம் கொடுத்தான் விஷ்வா.

"விஷ்வா ஒரு சின்ன வேலையிருக்கு." என்றவன்,

லட்சுமியிடம், "ம்மா... ஹாஸ்பிடல் போகுறதுக்கு முன்னாடி நான் திவ்யாவை கோயிலுக்கு கூட்டிட்டுப் போகலாம்ணு இருக்கேன்.'' என்றான்.

இந்த பேச்சிற்கு லட்சுமி சண்முகத்தைப் பார்க்க, அவரின் பார்வை ஒப்புதலில் அவரும் சம்மதித்தார்.

"ம்ம்… என்னமா பார்வையாலேயே பேசிக்கிறாங்க? நமக்கு வாச்சதும் தான் இருக்கே... மனுஷ மனசு படுறபாடு தெரியாம வாட்டியெடுத்துகிட்டு." என்று அலுத்துக் கொள்ள,

"உன்னை விட்டுக் கொடுக்க முடியாம அவ படுறபாடு தெரியலியா கண்ணா?" என்று லட்சுமி கேட்டார்.

"அதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் ம்மா!" என்றான்.

கோவிலில் கண்மூடி தன்னவனுக்காக அம்மனிடம் மனம் உருக வேண்டிக் கொண்டிருந்தாள். அவளவனோ அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான். கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றதினால் புடவையில் கிளம்பி வந்திருந்தாள்.

இளம்பச்சை கலரில் புடவையும், இளஞ்சிவப்பு பார்டரும், தலைப்பும் கொண்ட புடவை அவளை கொஞ்சும் கிளியாகவே மாற்றியிருந்தது. முதன்முதலாக தன்னவனோடு வெளியே செல்கின்ற மலர்ச்சி முகத்தில்.

புடவை கட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவளைப் பார்த்தவன், சுற்றம் மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் மேய்ச்சல் பார்வையில் சங்கோஜப்பட்டவள், தலைகுனிந்து கொள்ள,

"டேய் சத்யா! வாட்டர் ஃபால்ஸ் நிப்பாட்டுடா! நீ பாக்கறதைப் பாத்தா எனக்கே ஒரு மாதிரியா இருக்குடா... சிஸ்டர் பாவம்டா!" என்று அவன் காதருகினில் கிசுகிசுக்க,

"அதை அங்க சொல்லுங்க விஷ்வா! நான்தான் பாவம். அடுத்து எதை நினச்சு‌ குழம்புவான்னு தெரியாம தவிச்சுகிட்டிருக்கேன்."

"சரி நான் போய் காரை ரிவர்ஸ் எடுக்கறேன். ரெண்டு பேரும் வாங்க." என்று கூறிவிட்டு சென்றான்.

"திவிம்மா! பூவை வச்சுக்க!" என்று 

நெருக்கக் கட்டிய முல்லைச்சரத்தை அவள் கைகளில் தந்துவிட்டு லட்சுமி சென்று விட்டார். 

ஹேர்பின் எடுக்க அவள் அறைக்குள் செல்ல, பின்னால் சென்றவன், அவளை இடையோடு சேர்த்து அணைத்திருந்தான். கஸ்தூரி மஞ்சளும் பூலாங்கிழங்கு மற்றும் பன்னீர் ரோஜாவும் கலந்த குளியல்பொடியின் வாசனை பின்கழுத்தில் முகம் புதைத்தவனை பித்தம் கொள்ளச் செய்ய,

"ஐயோ! கண்ணா என்னயிது? யாராவது வரப்போறாங்க!" என்றாள் பதற்றத்துடன்.

"ஏய் தியா! இப்படி கிளாமரா ட்ரெஸ் பண்ணிட்டு என் முன்னாடி வராதே! யார்‌ இருக்காங்க இல்லைன்னு எல்லாம் பாக்க மாட்டேனாக்கும்!" காதோடு இழைந்தது அவன் குரல்.

"கண்ணா ப்ளீஸ்! புடவை உங்களுக்கு கிளாமர்‌ ட்ரெஸ்ஸா.... விடுங்க சேலை கசங்க போகுது."

"அப்ப சேலை கசங்கறது தான் உனக்கு பிரச்சினையா? அதுக்கு‌ ஒரு தீர்வு இருக்கு... சொல்லட்டுமா? என்று காதருகினில் அடிக்குரலில் கிறக்கமாக குழைய, 

"கண்ணா ப்ளீஸ்…" என்று அவளும் அடிக்குரலில் கெஞ்ச,

"நீ ப்ளீஸ்னு சொல்றது தான் என்னைய என்னமோ பண்ணுது. ஏதேதோ பண்ணச் சொல்லுது." என்று குழைந்தவனின் கைகளை வலுக்கட்டாயமாகத் பிரித்தவள்,

"சொல்லும்… சொல்லும். முதல்ல வெளியே போங்க! யாராவது வந்துட்டா சங்கட்டமா போயிரும் கண்ணன்." என்றவளின் நிலைமையை‌ உணர்ந்தவன், அவசரமாக கன்னத்து முத்தமொன்று கள்வனாய் பதித்து விட்டுத்தான் வெளியேறினான்.

கன்னத்து நாணச்சிவப்பு இன்னும் மிச்சமிருக்க, கண்மூடி நின்றிருந்தவள், "தியா…" என்ற தன்னவனின் அழைப்பில் கண்திறந்தாள். 

கண் திறந்தவளின் கண் கலந்தவன், தன் கையிலிருந்த தாலிக்கயிற்றை அவள் கழுத்தில் கட்டினான்.

"டேய் சத்யா!" என்று அருகில் நின்றிருந்த விஷ்வா அதிர்ச்சியாக,

"விஷ்வா எதுவும் சொல்லிறாதீங்க! உனக்கும் தான் தியா!" என்றவன்‌ மூன்று முடிச்சிட்டு, தோளோடு அணைத்துக் கொண்டான். அதிர்ச்சி மாறாமல் அவனது முகம் நோக்கி அவள் அண்ணாந்து பார்க்க,

"விஷ்வா இப்படியே ஒரு ஃபோட்டோ எடுங்க!" என்று கூற, அந்த அழகிய காட்சியை அவனும் தன் கைபேசியில் படம் பிடித்தான்.

"நான் கண்ணனா, சத்யாவா? உனக்கு தகுதியிருக்கா, இல்லையா? இப்படி என்ன வேணா நினைச்சுக்கோ. உன்னைய இப்படியே விட்டா ஏதாவது ஒன்னு நினச்சு குழப்பிகிட்டு தான் இருப்பே! எந்த சூழ்நிலையிலும் உன்னை இழக்க முடியாது தியா!" என்றான்.

அதிர்ச்சியடைவதா? இல்லை இவன் தனக்கு உரிமையாகி விட்டதை நினைத்து ஆனந்தப்படுவதா என்ற நிலையில், தன் கழுத்தில் இருந்த தாலிக்கயிற்றை எடுத்துப் பார்த்தாள். கண்கள் தானாய் ஆனந்தக் கண்ணீரைச் சிந்தின.

அதில் மாங்கல்யத்திற்குப் பதிலாக, அவன் விரலிலிருந்த மோதிரம் கோர்க்கப்பட்டிருந்தது.

"இதுவும் தாலித் தங்கம் தான். அன்னைக்கி அம்மா சொன்னது கேட்டேயில்ல. அவங்க தாலியில செஞ்ச மோதிரம்னு சொன்னாங்கள்ல. அதனாலதான் அதையே கோர்த்தேன்."

"டேய்! இதை எல்லார்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல. யாரும் மறுத்து பேசியிருக்க மாட்டாங்கடா. திவ்யாவுக்கு கூடத்தெரியாம எதுக்குடா இப்படி?"

"நான் அவளுக்காக தான் இந்த முடிவு எடுத்ததே விஷ்வா. அவளுக்கு நான் உரிமையாகணும். மத்த எதைப் பத்தியும் சிந்திக்கல... எனக்கு அவளோட நிம்மதி தான் முக்கியம்."

அவள் மனமும்‌ இப்பொழுது அப்படித்தான் இருந்தது. 'நீ யாரா வேணா இருந்துட்டுப் போ! இந்தப் பொழுதில் இருந்தே  நீ என் கணவன். நான் உன் மனைவி... அதுபோதும்.' என்று மனம் அமைதியடைந்தைப் போல் இருந்தது.

"என்ன கண்ணா இது? எதுக்கு இந்த திடீர்‌ முடிவு? யாரும் எதிர்ப்பு சொல்லலியே? ஏன் அவசரப்பட்டே?" என்று வீடு திரும்பியவர்களிடம், அதிர்ச்சியில் சண்முகம் மேன்மேலும் கேள்விகளை சற்று கோபமாகவே தொடுக்க,

"திவ்யாவோட பயத்தைப் பார்த்து நேத்து நைட்டே நான் எடுத்த முடிவு மாமா! அன்னைக்கே திவ்யாவோட சொந்தக்காரங்க சொன்னாங்கள்ல... துக்கம் நடந்த வீட்ல ஒரு நல்லது நடக்கணும்னு. அதான் இது!"

"என்னது மாமாவா?" என்று சண்முகம் வியப்படைய,

"ஆமா… இது வரைக்கும் உங்களை முறைவச்சு கூப்பிடல... ஏன்னு நானும் யோசிக்கலை. நேத்து அம்மா உங்களை அண்ணன்னு கூப்பிட்ட பின்னாடி தான் எனக்கும் மாமானு தோணிச்சு. திவ்யாவுக்கு அப்பா ஸ்தானமும்கூட." என்றான்.

"அப்ப என்கிட்ட கேக்காம எப்படி கல்யாணம் பண்ணினே?" தந்தையின் உரிமையைக் சண்முகம் காட்ட,

"நான் காலையிலயே புருஷன் பொண்டாட்டினு தான் சொன்னேன். அது வார்த்தைக்காக சொன்னதில்லை. இந்த தாலி அதற்கான அடையாளம். அவ்வளவு தான். இது கூட மத்தவங்களுக்காகவும் திவ்யாவுக்காகவும் தான். நான் இங்கிருந்து போகும்போது திவ்யாவும் என் மனைவியா என்கூட உரிமையா வரணும்." என்றான்.

அதன்படியே மருத்துவமனைக்கு அவளை தன்னுடன் அழைத்தும் சென்றான். அவளின் நன்மையைக் கருதியே அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்தான். ஆனால் விதி அவர்களை பிரிக்க வேண்டுமென்று முடிவெடுத்து விட்டால் யாரால் தடுக்க முடியும்?