ninaikkatha neramethu - 23 in Tamil Love Stories by EKAA SREE books and stories PDF | நினைக்காத நேரமேது - 23

Featured Books
  • ભીતરમન - 30

    હું મા અને તુલસીની વાત સાંભળી ભાવુક થઈ ગયો હતો. મારે એમની પા...

  • કાંતા ધ ક્લીનર - 50

    50.કોર્ટરૂમ ચિક્કાર ભર્યો હતો. કઠેડામાં રાઘવ એકદમ સફાઈદાર સુ...

  • ઈવા..

    ઈવાએ 10th પછી આર્ટસ લઈને સારી સ્કૂલમાં એડમિશન મેળવ્યું હતું....

  • ખજાનો - 21

    " ભલે આપણને કોઈને યાદ નથી કે આપણે અહીં કેમ આવ્યા છીએ તેમ છતા...

  • ભાગવત રહસ્ય - 53

    ભાગવત રહસ્ય-૫૩   પ્રથમ સ્કંધ –તે અધિકાર લીલા છે. જ્ઞાન અનધિક...

Categories
Share

நினைக்காத நேரமேது - 23

நினைவு-23

கையில் இருந்த சாம்பார் வாளி தெறித்து கீழே விழுந்து சிதறி இருந்தது.

கண்ணன் அதிர்ச்சியில் கன்னத்தைப் பிடித்தவாறு எதிரில் நின்றவரைப் பார்க்க, மங்கையர்க்கரசியோ எரிமலைக் குழம்பாய் கொதித்துக் கொண்டிருந்தார். மனதின் படபடப்பு இன்னும் அடங்கவில்லை அவருக்கு...

‘எங்கிருக்கிறானோ… எப்படியிருக்கிறானோ…’ என்று தெரியாமல் இத்தனை நாட்களாக தவித்த தவிப்பு, மகனை நேரில் கண்டவுடன் கோபமும் அழுகையுமாக வெளிப்பட்டது. 

காரை விட்டு இறங்கி, உள்ளே நுழைந்தவரின் கண்களில் பட்டது, உணவுக்கூடத்தில் தோளில் சிறு துண்டும், சாதாரண கைலி டிசர்ட்டில், சாம்பார் வாளியுடன் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்ப, லட்சுமிக்கு உதவிக் கொண்டு இருந்த தன் மகனைத் தான்!

துக்க வீட்டிற்கு சென்றவர்கள் இன்று காலையில் தான் வந்தனர். திவ்யாவும் கல்லூரிக்கு செல்லக் கிளம்பி அப்பொழுது தான் வெளியே வந்தாள். அவர்களின் பரபரப்பான தினசரி ஆரம்பமாகி இருந்தது. அந்த நேரத்தில் தான் இந்த களேபரம்.

"என்னடா சத்யா இது... பிச்சைக்கார வேஷம்?" தாளமுடியாமல் கோபத்துடன் கேட்டார் மங்கை.

கோர்ட்டும் சூட்டுமாக, கண்களில் கூலர்ஸும், கையில் ரோலக்ஸும், கால்களில் டாப்மோஸ்ட்‌ ப்ரான்ட் ஷுவுமாக, கம்பீரமாக காரில் பவனி வந்த மகனை சாம்பார் வாளியோடு பார்த்தவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இதுவே இப்படியிருக்க அடுத்து அவன் கேட்ட கேள்வியோ, தனக்குக் கிடைத்த தகவல் சரிதானா என ஒரு நிமிடம் அவரையே யோசிக்க வைத்தது.

"யார் நீங்க? எதுக்கு என்னை அடிச்சீங்க?" என்றவனைப் பார்த்த‌ மங்கையர்ககரசியோ, 'இவன் நம்ம மகன் தானா? அல்லது அவன் ஜாடையில் இருக்கும் வேறு யாருமா?' என்று ஒரு நொடி குழம்பித்தான் போனார். அதெப்படி பெற்றவளுக்கு தெரியாதா? பிள்ளை யாரென்று!

"டேய்! விளையாடறதுக்கும் ஒரு அளவிருக்கு சத்யா? ஏதோ ஒரு வாரம், ரெண்டு வாரம் அட்வென்ஞ்சர்னு சுத்தலாம். அதுக்காக இப்படியா ஒன்னரை மாசமா நாங்க இருக்கோமா செத்தோமானு கூட தெரியாம இருப்ப? அங்க ஒருத்தர் என்னடான்னா, உனக்கு ஆக்சிடன்ட் ஆகியிருக்குனு தெரிஞ்சவுடனே நெஞ்சைப் பிடிச்சுட்டு விழுந்தவர் தான். இன்னும் கண்ணு முழிக்கல!" என்றவரைப் ஆராய்ச்சியோடு பார்த்தவன்,

‘நம்மைத் தெரிந்தவர்களா?’ என்ற யோசனையோடு,

"யாருக்கு நெஞ்சுவலி?" என்று முகத்தில் இருந்து குழப்ப ரேகையை அழிக்காமலே புரியாமல் கேட்டான்.

"டேய் விஷ்வா! இவனுக்கு என்னடா ஆச்சு? இத்தனை நாள் கழிச்சு பாக்குறான்... ஆனா யார்கிட்டயோ பேசுற மாதிரி பேசுறான்டா! இவன் தாத்தாவுக்கு பதிலா எனக்கு‌ நெஞ்சுவலி வந்திருக்கலாம்டா!" என்று தனதருகில் நின்றவனிடம் கூறினார் மங்கையர்க்கரசி.

அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அலுவலகம் சென்று வரும் பொழுதே அம்மா என்று அழைத்தவாறே உள் நுழைபவன், இத்தனை நாள் கழித்து பார்த்தும் இன்னும் தன்னை அம்மாவென்று அழைக்கவில்லை என்பதை அவரால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.

இந்த ஒன்றரை மாதங்களில் அவர் மனதளவில் பட்ட துயரத்தை விட இந்த மூன்று நாளில் அவர் அடைந்த துன்பங்கள் ஏராளம்.

இரண்டு நாட்களுக்கு‌ முன்பு தேவானந்தன் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

"ஹலோ! தேவானந்தன் சார்ங்களா?"

"ஆமா நீங்க?"

"சார் நான் அவினாசியில இருந்து புரோக்கர் பேசுறேனுங்க!"

"எந்த புரோக்கர் ப்பா?"

"என்ன சார் இப்படி கேக்குறீங்க? ஒன்றரை மாசத்துக்கு முன்னாலே நம்ம சத்யா தம்பி வந்து வீட்டை கிரயம் பண்ணுச்சுல்லங்க... அந்த புரொக்கர்தானுங்க!"

கேட்ட தகவலில் சட்டென்று எழுந்தவர், "எந்த வீடு? எப்ப கிரையம் பண்ணினான்?" என்று படபடப்பாகக் கேட்க,

"உங்க பூர்வீக வீடு தானுங்க! வாங்குனவங்களுக்கு ஏதோ பணமுடை போல... வீடு ஏலத்துக்கு வந்துருச்சுங்க! நம்ம தம்பி தான் வந்து வீட்டை வாங்கிக் கிரயம் பண்ணுச்சுங்க... இன்னும் பத்திரம் வாங்க வரலியேனு தான் ஃபோன் பண்ணேங்க. தம்பி ஃபோன் எடுக்கவே இல்லை. அதனால தான் உங்களுக்கு ஃபோன் போட்டேனுங்க!"

எதிர்ப்பக்கம் அவர் கூறிய தேதியை கணக்கிட்ட தேவானந்தன், 'அப்ப அவன் அந்த தேதியில் சூரத்துல இல்லையா? இங்க அவினாசியில தான் இருந்திருக்கான்.' என்று எண்ணியவர் உடனே புரோக்கரிடம்,

"இன்னும் ஒரு மணிநேரத்துல நான் அங்க இருப்பேன். உன் அட்ரஸ் சொல்லு!" என்றவர் உடனே மருமகளை அழைத்துக் கொண்டு அவினாசி கிளம்பினார். மின்னல் வேகத்தில் வந்து சேர்ந்தனர் இருவரும். 

"வாங்க சர்! உட்காருங்க!" என்றவனது உபசரிப்பைக் கவனிக்கும் நிலையில் அவர்கள் இல்லை.

"இங்க சத்யா எப்ப வந்தான்?" என்றார்‌ படபடப்பாக.

"போன மாசம் முதல் வாரம் சார்... வேலை முடிய சாயங்காலம் ஆகிப்போச்சு. வீடு வித்தவங்களுக்கு சாப்பாடு போடணும்னு, பெரிய ஹோட்டலுக்கு தம்பி கூட்டிட்டுப் போச்சுங்களே!"

வீடோ, நிலமோ, விற்கும் பொழுது, வாங்குபவர்கள், விற்பவர்களது வயிற்றை குளிர்வித்து அனுப்ப வேண்டும் என்பது சம்பிரதாயம்.

"அவன் எதுல வந்தான்?"

இவர்கள் கேள்வியின் போக்கு புரியாமல் புரோக்கர் சந்தேகமாகப் பார்க்க, சுதாரித்த தேவானந்தன்,

"இல்லப்பா... அவன் இதைப் பத்தி என்கிட்ட எதுவும் சொல்லல.‌ அதான் கேட்டேன். பூர்வீக வீடுங்கவும் நானே வந்தேன்." என்றார் சற்று நிதானமாக.

"அதுங்களா சார்… சத்யா தம்பி தான் உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னாருங்க! இந்த வீடு ஏலம்னு கேள்விப்பட்டவுடனே, வில்லங்கம் போட்டதுல உங்க பேரெல்லாம் வந்தது. உங்க மாதிரி பெரிய பெரிய ஆளுங்க தான் என்னோட கஸ்டமர்ஸ் சார்."

அதை அவரது அலுவலகமே கூறியது. வாங்க முடியாத இடத்தையும் எங்கெங்கு பேசி எப்படி வாங்குவது என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார் அந்த புரோக்கர். இந்த பணிவெல்லாம் அவரது தொழில்துறை அவதாரம். தொழிலதிபர்கள் விரும்பும் இடங்களை, ஒன்றுக்கு ரெண்டு மூன்றாக பேசி எப்படியும் முடித்துத் தருபவர். 

அவினாசி வீடு ஏலம் அறிவிப்பு வந்ததும், இவ்வளவு பெரிய வீடாச்சே, யாருடையது என்று வில்லங்கச்சான்று பார்க்க, அதில் தேவானந்தன் பெயரைப் பார்த்தவர், சத்யாவிற்கு ஃபோன் செய்து விபரம் கூறினார். நேரில் வந்தவன் வீட்டை சுற்றிப் பார்த்தான். அந்தக் காலத்தில் பர்மா தேக்கு கொண்டு கட்டப்பட்ட தொட்டிக்கட்டு வீடு.

தன் மூதாதையர்கள் வாழ்ந்த வீடு. தனது பூட்டனின் சினிமா மோகத்தால் கை விட்டுப்போன வீடு என்பது தெரியும். அடிக்கடி தாத்தா இவ்வீடு பற்றிக் கூறக் கேட்டு இருக்கிறான். 

"இந்த வீடு ஏலம் போகக் கூடாது. பார்ட்டி யாருனு பாத்து, லோன் ப்ராஸஸ் எல்லாம் முடிச்சுட்டு, உடனே கிரயத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க! இது தாத்தாவுக்கு தெரிய வேண்டாம். அவரோட எழுபதாவது பெர்த்டேக்கு என்னோட சர்ப்ரைஸ் கிஃப்ட்... முடிச்சுட்டு ஃபோன் பண்ணுங்க!" என்று கிளம்பி விட்டான்.

"எல்லாம் முடிச்சுட்டு ஒரே மாசத்துல சொன்னேனுங்க... வந்து பத்திரம் பதிஞ்சுட்டு போனவரை, நான்தான் டாக்ஸி புடுச்சு அனுப்பி வச்சேனுங்க!"

விபரம் கேட்டு வீடு வந்தவர்கள், புரோக்கர் சொன்ன தேதியில் சத்யா, சூரத்தில் இல்லை எனத் தெரிந்து கொண்டனர்.

"மாமா! இங்க தேடாம நாம அவனை வெளிய தேடி இருக்கோம். இப்பவாவது இங்க விசாரிக்க சொல்லுங்க! எனக்கென்னமோ பயமாயிருக்கு." என்ற மருமகளைப் பார்த்தவர், அதன் பின் சிறிதும் தாமதிக்கவில்லை.

தனக்கு கிடைத்த விபரம் கொண்டு டாக்ஸி ஸ்டான்ட், அவன் கிளம்பிய நேரம் முதலியன கொண்டு ரகசிய விசாரணை நடத்த, அவருக்குக் கிடைத்த விபரமோ அத்தனை நிம்மதியைக் கொடுக்கவில்லை.

அந்த தேதியில் அன்றிரவு ஒரு டாக்ஸியும் காரும் மோதிக் கொண்ட கோர விபத்தும், அதில் இருந்தவர்கள் அந்த இடத்திலேயே இறந்து விட்டதாகவும், ஒருவர் மட்டும் சீரியஸ் கண்டிஷன்ல ஹாஸ்பிடல் தூக்கிட்டுப் போயிருக்காங்க... அவரைப் பத்தின தகவல் விசாரிச்சு சொல்றோம்.' என்ற தகவலும் தான் அவர வந்தடைந்தது.

மனைவியை இழந்து மகனை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்தவர். மகனையும் இழந்த நிலையில் ஒரே பற்றுக்கோல் அவரின் பேரன் தான். அதுவும் உருவிக் கொண்டதோ என்ற சந்தேக எண்ணமே அவரை பலவீனப்படுத்த, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்தவரை, மங்கையர்க்கரசி தான் மருத்துவமனை கொண்டுவந்து சேர்த்தார். தொலைபேசியில் கிடைத்த தகவலை அவர் அறியவில்லை.

மகனைப் பற்றிய விபரமும் தெரியாமல், மாமனாரின் நிலமையோ அவரைப் பயமுறுத்த, வீடே உலகமென்று இருந்தவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவசரப் பிரிவு வளாகத்தின் அமைதியும் தனிமையும் மேலும் அவரை அச்சமூட்டியது.

"ஆன்ட்டி! என்னாச்சு! தாத்தாவுக்கென்ன?" என்று பரபரப்பாக வந்த விஷ்வாவின் குரலில், மருத்துவமனை வராண்டாவில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தவர் சட்டென நிமிர்ந்தார்.

"வாப்பா விஷ்வா! வெளிநாட்டுல இருந்து எப்ப வந்த? நீ இருந்திருந்தா இவ்ளோ தூரம் வந்திருக்காது. எனக்கென்ன பண்றதுனே தெரியலைப்பா!" என்று அவனைப் பார்த்ததும் உடைந்து விட்டார் அந்த பெண்மணி.

அவரை அமர வைத்து ஆசுவாசப்படுத்தியவன், "என்னாச்சு ஆன்ட்டி? நேத்து தான் வந்தேன். சத்யாவ கான்டாக்ட் பண்ண முடியல... அதான் நேர்ல பாக்கலாம்னு வீட்டுக்குப் போனா, நீங்க ஹாஸ்பிடல்ல இருக்கறதா செக்யூரிட்டி சொன்னாங்க!" என்றவன் நடந்த அனைத்தையும் கேட்டறிந்தான்.

"இவ்ளோ கேர்லெஸ்ஸாவா இருப்பீங்க ஆன்ட்டி?"

"இல்லப்பா... அவன் போன இடமெல்லாம் வெளியே தெரியாம விசாரிக்க சொல்லி இருக்கார்ப்பா! ஆனா, அவன் இங்கதான் இருந்திருக்கான். அது தெரிஞ்சிருந்தா எப்பவோ கண்டுபிடிச்சுருக்கலாம். இப்ப என்னாச்சுனே தெரியல... ஃபோன் வந்ததும் நெஞ்சைப் பிடிச்சுட்டு விழுந்துட்டார்ப்பா! எனக்கு ரொம்ப பயமாயிருக்கு."

அதற்கு மேல் விஷ்வா சற்றும் தாமதிக்கவில்லை. தனது நண்பனைப் பற்றி நன்கு அறிந்தவன். இவ்வாறு பொறுப்பற்று அவன் இருக்க மாட்டான் எனத் தெரியும். என்னவாயிற்றோ என்ற அச்சரேகை அவனையும் சூழ, மிக வேகமாக காரியத்தில் இறங்கினான்.

அவர்களுக்குக் கிடைத்த தகவலைக் கொண்டு, விபத்து, மருத்துவமனை, காவல்நிலையம் என அறுபட்ட சங்கிலித் தொடரின் ஒவ்வொரு கண்ணியாகக் கோர்த்துக் கொண்டு வர, ரெண்டே நாளில் அவர்கள் வந்து சேர்ந்த இடம் திவ்யாவின் வீடு. 

அவனுக்குமே நண்பனின் கோலம் ஆச்சரியமே... ஏதோ விபரீதம் என்பது மட்டும் அவனுக்கும் தெரிந்தது. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சண்முகம் தான் முதலில் சுதாரித்தார்.

"திவ்யா! வந்தவங்களுக்கு தண்ணி கொண்டாம்மா!" என்றவர்,

"நீங்க முதல்ல எல்லாரும் உள்ள வாங்கம்மா!" என்று அழைத்தார்.

மங்கையர்க்கரசியும், விஷ்வாவும் உள்ளே வந்து சோஃபாவில் அமர, பின்னோடு கண்ணனும், லட்சுமியும் உள்ளே வந்தனர். திவ்யா தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, அதை மங்கையர்க்கரசி இன்னும் தன்னை விட்டு தள்ளியே நிற்கும் மகனைப் பார்த்தவாறே வாங்கிக் கொண்டார்.

"சொல்லுங்கம்மா! நீங்க யாரு? வெளியே நிக்கிற காரைப் பார்த்தாலே தெரியுது, ரொம்ப பெரிய இடம்னு...‌ எங்க கண்ணனை உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று சண்முகம் கேட்க,

“உங்க கண்ணனா?!” என்று பெற்றவள் ஆற்றாமையில் விழி விரிக்க,

"இவன் பேரு கண்ணனா?" என்று விஷ்வா ஆச்சரியமாகக் கேட்க,

"நாங்க, அவனுக்கு வச்ச பேரு அதுதான்." என்றார் சண்முகம்.

"என்னது நீங்க பேரு வச்சீங்களா? டேய் சத்யா! என்னடா நடக்குது இங்கே?" என்று விஷ்வா‌ மீண்டும் ஆச்சர்யமும் குழப்பமும் அடைய,

"தம்பி, நடந்ததைச் சொல்றோம். முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க!" என்றார் சண்முகம்.

"சார்… நான்‌ இவனொட‌ ஃப்ரன்ட் விஷ்வா... இவங்க அவனோட அம்மா மங்கையர்க்கரசி. அப்புறம்… இவன்… ஆனந்தன் அன்ட் க்ரூப்ஸ் எம்.டி. சத்யானந்தன்!" என்றதும் அங்கிருப்பவர்களின் அனைவரின் கண்களும் ஒரே சமயத்தில் கண்ணனை உற்றுப் பார்த்தது.