நினைவு-21
மறுநாள் வழக்கம்போல் வேலைகள் நடக்க, எழுந்து வந்தவளைப் பார்த்தவன், அவளது முகத்தில் சிறுவாட்டத்தைக் கண்டான். கல்லூரி கிளம்பும் அறிகுறி அவளிடமில்லை.
"திவ்யா! இன்னைக்கு காலேஜ் கிளம்பலயா?" எனக் கேட்டான் கண்ணன்.
"இல்ல கண்ணன்... போர்ஷன் முடிச்சுட்டாங்க! இனி படிக்கிற வேலை தான். அது தான் பிள்ளைகளுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு லீவு போட்டுட்டேன்!" என்று சோர்வாக கூறியவள், சமையலில் உதவ அடுக்களை சென்றுவிட்டாள்.
எனினும் அவள் முகத்தில் பழைய சுரத்தையில்லை என்பதைக் கவனித்தான் கண்ணன். பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பியதும், கண்ணனும் கடைக்கு கிளம்பினான்.
அனைவரும் கிளம்பியவுடன், திவ்யாவும் செல்லாத்தாளை உடன் அழைத்துக்கொண்டு வெளியே சென்று வந்தாள். மதியம் வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு, சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்தான்.
பவளமல்லி திட்டில் திவ்யா அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், சாமான்களை உள்ளே வைத்து விட்டு அவ்விடம் வந்தான்.
அவள் முகத்தைப் பார்க்க ஏதோவொரு மாற்றம். ஆனால் நன்றாக இருந்தது.
உற்றுப் பார்க்க அவள் மூக்கில் மின்னிய ஒற்றைக்கல் மூக்குத்தி, அவளை இன்னும் அழகாகவும், அதே சமயத்தில் கொஞ்சம் குழந்தைத்தனத்துடன் முதிர்ச்சியாகவும் காட்டியது. ஆனால் சிவந்து சற்று வீங்கியிருந்தது.
"திவ்யா!" அவன் வந்தது கூடத் தெரியாமல் யோசனையில் இருந்தவளை அழைக்க,
"ம்ம்…" என்று நிமிர்ந்து பார்த்தாள்.
"இப்ப எதுக்கு மூக்கு குத்தியிருக்க? வலிக்கலையா?!"
"நல்லா கேளு கண்ணு! நாங்கூட வலி தெரியாம குத்தலாம்மானு எவ்வளவோ தடவை சொன்னேன். ஆசாரிகிட்ட போயி இன்னைக்கே போடணும்னு குத்திகிருச்சு இந்தப் பொண்ணு" என்று அங்குவந்த செல்லாத்தாள் சொல்ல,
"பார்லர் போனா வேற ஸ்டட் வச்சு கன்ஷாட் பண்ணி விடுவாங்! இது எங்கம்மாவோட மூக்குத்தி... இன்னைக்கே போடணும்னு தோணிச்சு. அதனாலதான் ஆசாரிகிட்ட போயி போட்டுகிட்டேன்." என்று காரணம் கூறினாள் திவ்யா.
பெற்றோரின் ஞாபகம் இன்று அதிகமாக வாட்ட, அவர்களது பொருட்களை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தவள், அம்மாவின் நகைகளூடே மின்னிய ஒற்றைக்கல் வைர மூக்குத்தி கண்ணில் பட்டது.
"திவ்யா... மூக்குத்தி போட்டுக்கோயேன்! உன் முகத்துக்கு இன்னும் அழகாயிருக்கும்." எத்தனையோ முறை அம்மா சொல்லியும் கேட்கவில்லை அவள்.
இன்று ஏனோ அதைப் பார்த்தவுடன் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் எனத் தோன்ற, செல்லாத்தாவை துணைக்கு அழைத்துச் சென்று மூக்கு குத்தி வந்தாள்.
லட்சுமியம்மாவின், தாயார் இறப்பு இவளுக்கு அன்னையின் நினைவை அதிகபடுத்தி இருப்பதாக எண்ணிக் கொண்டான்.
மறுநாள் விடிந்து வெகு நேரமாகியும் திவ்யாவின் அறைக்கதவு திறக்கபடாமல் இருந்தது. அதைப் பார்த்தா கண்ணன், "தேவி! இங்கே வா!" என்று அழைத்தவன், திவ்யாவின் அறைக்கதவை திறக்கச் சொன்னான்.
உள்தாழ்ப்பாள் போடாமல் வெறுமனே கதவு சாத்தப்பட்டிருந்தது. கதவை தேவி திறக்க, அங்கே கட்டிலில் போர்வையை இழுத்துப் போர்த்தி தூங்கிக் கொண்டிருந்தாள் திவ்யா.
'கும்பகர்ணி மாதிரி தூக்கத்தைப் பாரு!' என்று எண்ணியவன்,
"அக்காவ எழுப்பு தேவி!" எனக் கூறினான், அறைக்கு வெளியே நின்றுகொண்டே.
"திவிக்கா…! திவிக்கா..!" என்று தேவி எழுப்பியும் அவளிடம் அசைவில்லை.
பதற்றத்துடன் உள்ளே சென்றவன், போர்வையை விளக்கிப் பார்க்க, முகம் விடியவிடிய அழுது வீங்கி சிவந்திருப்பது தெரிந்தது. தயக்கத்துடன் தலையில் கைவைத்து பார்க்க காய்ச்சல் கொதித்தது. உடம்பில் சிறுநடுக்கமும் தெரிந்தது.
"ஆத்தா யாரையாவது கூட்டி வா தேவி!" என அவளை அனுப்பியவன், நடுக்கத்தின் காரணமாக கழுத்தடியில் வைத்திருந்த அவளது கையை இழுத்தான், தேய்த்து விடுவதற்காக!
கையோடு சேர்த்து பிடித்திருந்த கைபேசியைப் பார்த்தான். அதன் திரையில் தெரிந்த ஃபோட்டோவைப் பார்த்தவன், அதிலிருந்த தேதியை பார்க்க,கண்கள் தானாக அவள் முகம் வருடியது. அவனது கண்களும் சிவந்து கசிந்தது.
"திவ்யா…!" என்று மென்மையாக கன்னம் தட்டியெழுப்ப, மெதுவாகக் கண் திறந்தாள்.
"ஹேப்பி பெர்த்டே திவிம்மா!" என்றான்.
"தேங்ஸ்ப்பா!" என்றாள் சுரணையற்று, தந்தையின் அழைப்பாக எண்ணிக் கொண்டே பிதற்றி இருந்தாள்.
இன்று அவள் பிறந்தநாள். சென்ற வருட பிறந்தநாள் கொண்டாடிய ஃபோட்டோவைத் தான் அவன் திரையில் பார்த்தது. அவளின் முகவாட்டத்திற்கு காரணம் அதுவே. சென்ற வருடம் பெற்றோர் நள்ளிரவு தன் பிறந்தநாளுக்கு பரிசு கொடுத்து வாழ்த்தியது நினைவில் வந்து அவளை ஏங்க வைத்தது.
தனக்கென்று உரிமையாக யாருமில்லை என்ற எண்ணத்தோடு, கண்ணன் பால் தன் மனம் வெகுவாக இழுக்கப்படுவதே அவளின் கலக்கத்திற்கு காரணம்.
அவனை நேசிக்க மனம் ஏங்கியது. ஆனால் வேறு யாராவது உரிமையுடன் வந்து விடுவார்களோ என்ற பயம் ஒவ்வொரு நிமிடமும் அவளை எச்சரித்தது.
அறிவுக்கும், மனதிற்கும் இடைப்பட்ட போட்டியில், அவன்தான் வேண்டுமென மனது ஜெயிக்க, அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் துவண்டு விட்டாள்.
அடுத்து வரவிருக்கும் மாதாந்திர அந்த மூன்று நாளுக்கான முன்னறிவிப்பாக மனஉளைச்சலும் சேர்ந்துகொள்ள, கழிவிரக்கத்தில் விடிய விடிய அழுதவளுக்கு காய்ச்சல் வந்து விட்டது.
"என்னாச்சு கண்ணா?" எனக் கேட்டவாறு பாப்பாத்தி வர,
"திவ்யாவுக்கு காய்ச்சலடிக்குது ஆத்தா.! சுடுதண்ணி கொண்டு வாங்க... முகம் கழுவிட்டு ஏதாவது சாப்பிட்டு மாத்திரை போடட்டும்," எனக் கூறினான்.
"இதோ எடுத்துட்டு வர்றேன்!" என்று அவர் சென்றுவிட,
அவள் கட்டிலின் அருகில், அறையில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவன், அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.
"திவ்யா!" என்றழைத்தவன், அவள் அசைவற்றிருக்க மீண்டும் குரலில் மென்மையைக் குழைத்து, "தியா..." என்றழைத்தான்.
"ம்ம்…" என்ற முனகல் அவளிடம்.
"கண்ணு முழிச்சு பாரும்மா! இப்படி பாக்க கஷ்டமாயிருக்கு தியா!" என்றவனின் குரலும் காரணமே இல்லாமல் கரகரத்தது.
"ப்ளீஸ் கண்ணா... என்னை அப்படி கூப்பிடாத! எல்லாம் உன்னால தான். என் மனசு எம் பேச்ச கேக்க மாட்டேங்குது. உன்னைத் தான் தேடுது!" என்று அவனது குரலைக் கேட்டவள் காய்ச்சலின் வீரியத்தில் சுயநினைவின்றி மனதிலுள்ளதை அவனிடம் உளறிக் கொண்டிருந்தாள்.
கையோடு கை கோர்க்கவில்லை. கண்ணோடு கண் பார்க்கவில்லை. முகம் நாணவில்லை. கால்விரல் கொண்டு தரைக்கோலம் போடவில்லை. ஆனால் பெண்ணவள் தன் காதலைச் சொல்லி விட்டாள்.
ஆளை அசத்தும் அன்பளிப்பு இல்லை. கொஞ்சும் காதல் வார்த்தைகள் இல்லை. நீ இன்றி நான் இல்லை. நான் இன்றி நீ இல்லை என்ற பிதற்றல்கள் இல்லை. ஆனால் பெண்ணின் மனதை வென்றிருந்தான், அன்னையின் அரவணைப்பாய்... தந்தையின் அக்கறையாய்!
இதுவரை நீருக்குள் நீந்தும் மீனாக ஓசையற்று இருந்த அவனது காதலும் பெண்ணவளின் வாய்மொழி கேட்டு டால்ஃபின் மீனாய் குதித்து குதியாட்டம் போட்டது. பெண்ணின் மனதை வென்ற கர்வம் ஆணாய் அவனுக்குள்ளும்!
அவளது கைகளை கோழிக் குஞ்சாய் தன் கரத்தினுள் பொதிந்து கொண்டான். எப்பொழுதும் விடமாட்டேன் என்பவனைப் போல். அக்கணத்தை அணுஅணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான்.
கலைந்த கூந்தலும், காய்ச்சலினால் துவண்ட முகமும், வறண்ட இதழ்களுமாய் அவனவள். எனினும் வாடியமலரின் வாசமாய் அவள் அழகு. குறுகிய நாள்கணக்கில் ஒருவருக்கொருவரின் பிணைப்பு அவனுக்கே ஆச்சரியமாய் இருக்க, காதலிக்க நாள்கணக்கோ, மாதக்கணக்கோ தேவையில்லாத ஒன்று என்பதை யார் சொல்வது அவனுக்கு.
கண்டதும் காதல் வரும். வருடக்கணக்கே ஆனாலும் வாய்ப்பே இல்லாமல் போகும். பார்த்தவுடன் தனக்கான நபரை உள்ளம் கண்டு கொள்ளும். மூளை தான் அதை கிரகிக்க கொஞ்சம் காலம் கடத்தும். காதலின் நியதிகள் இன்னதென்ற வரைமுரைகளால் தொகுக்கப்படாதவை.
‘விபத்தினால் வந்த பந்தமா... அல்லது, அவள் தன் மீது காட்டிய அக்கறையா? அடுத்தவன் பார்க்கும் பொழுது வந்த பொறாமையா!’ என்று பலவாறு யோசித்தவனுக்கு ஒன்று மட்டும் உறுதியானது. இவள் எனக்கானவள் என்பது.
"சுடு தண்ணி இந்தா கண்ணு! எழுப்பி முகங்கழுவ சொல்லுப்பா!" என்றவாறு பாப்பாத்தி வர, அவளை விட்டு எழுந்து கொண்டான்.
"நீங்களே எழுப்புங்க ஆத்தா!"
"திவ்யா… திவிம்மா…" என்று அவர் கன்னம் தட்டி எழுப்ப, மெதுவாக இமை பிரித்தவள், சோம்பலாக எழுந்து அமர்ந்தாள்.
"ஏம்மா… உடம்பு சரியில்லைனா கூப்பிடக் கூடாதா? இப்படியா ஒத்தையில கெடந்து அல்லாடுவ?" உரிமையுடன் கண்டித்தார் ஆத்தா!
"அப்படியெல்லாம் இல்ல ஆன்ட்டி! நான் நல்லாதான் இருக்கேன்!"
"ஆமா... ஆமா... ரொம்ப நல்லாயிருக்க! பார்த்தாலே தெரியுது." என்ற அவனது நக்கல் பதிலில், அவனை முறைத்தாள்.
"இந்தாம்மா சுடு தண்ணி வச்சுருக்கேன். பாத்ரூம்ல போய் முகங் கழுவிட்டு வா! கஞ்சி ஏதாவது குடிச்சுட்டு மாத்திரை போடலாம்."
"இல்ல ஆன்ட்டி! நான் குளிக்கணும். அம்மா அப்பா போட்டோக்கு விளக்கு ஏத்தணும்." என்றாள் தன் பிறந்தநாளுக்கு அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் எண்ணமாக.
"உடம்பு கொதிக்குது. எப்படி குளிப்ப?" என்று அவன் கேட்க,
'எனக்கு உடம்பு கொதிக்கிறது இவங்களுக்கு எப்படி தெரியும்?' என்றவாறு அவனைப் பார்க்க,
"ரொம்ப நேரம் எந்திரிக்காம இருக்கவும், நானும் தேவியும் தான் உள்ள வந்து தொட்டுப் பாத்தோம்" என்றான் அவள் பார்வையின் பொருள் அறிந்து.
"பரவாயில்லை... குளிச்சு சாப்பிட்டு, மாத்திரை போட்டா சரியாயிரும். இது சாதாரண காய்ச்சல் தான்."
"சரி... அப்ப முதல்ல முகங் கழுவிட்டு, சூடா கஞ்சி குடிச்சுட்டு மாத்திரைய போடு! காய்ச்சல் கொறஞ்சதும் குளிக்கலாம்." என்றான் சற்றே கண்டிப்புடன்.
"ஆமாங்கண்ணு! குளிச்ச பின்னால காய்ச்சல் அதிகமாயிருச்சுனா என்ன பண்றது?" என பாப்பாத்தி ஆத்தாளும் கேட்க,
"இல்லைங்க ஆன்ட்டி..." என்று மறுத்து பேச வந்தவள் அவனின் முறைத்த பார்வையைக் கண்டு, "சரிங்க ஆன்ட்டி." என்று வாய்க்குள்ளே முனங்கியவாறே எழுந்து குளியலறை சென்றாள்.
அவளும் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வர, கஞ்சியோடு பாப்பாத்தி வந்தார். வேண்டா வெறுப்பாக கஞ்சியைக் குடித்தவள் கைகளில் மாத்திரையைத் தந்தான்.
"ஐயே மாத்திரையா! கசக்குமே?" என்றாள் சிறுபிள்ளையாக,
"கசக்காம இனிக்குமா? காய்ச்சல் குறைய வேண்டாமா?"
"அம்மா பொடி பண்ணி கரைச்சு தருவாங்க. சீனியைப் போட்டுட்டு இதையும் குடிச்சுருவேன்."
"ஏன் இந்த சங்கெல்லாம் வச்சு ஊத்த மாட்டாங்களா? பாவம் பச்சபுள்ள.. . பொடி பண்ணி ஊத்தணுமாம்." என்று அவளை கேலி பேசியவன், மாத்திரையை சிறு துண்டுகளாக உடைத்து கொடுத்தான்.
"இப்ப போடு! முழுங்க ஈஸியாயிருக்கும்." என்றவனை பாவமாகப் பார்த்து வைக்க,
"இது வேலைக்கு ஆகாது. எந்திரிச்சு கிளம்பு! ஹாஸ்பிடல் போய் ஒரு இன்ஜக்க்ஷன் போட்டுட்டு வந்துறலாம்." என்ற அவனின் அதட்டல் பேச்சில்,
"அய்யயோ! ஊசியா? வேண்டாம். தண்ணிய கொடுங்க! நான் இதையே முழுங்கறேன்!" என்றவள் மாத்திரையை போட்டாள்.
"அப்படியே கொஞ்ச நேரம் படு! காய்ச்சல் விட்டதும் எந்திருச்சுக்கலாம்!" என்றவன், பாப்பாத்தியோடு வெளியேறினான்.
பிள்ளைகள் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு கிளம்பி இருக்க, அவனும் கடைக்கு கிளம்பியவன்.
"ஆத்தா! திவ்யா எந்திரிச்சதும் எனக்கு ஃபோன் பண்ணுங்க! என்றவன், வீட்டு தேவைகள் என்னவென்று கேட்டுக் கொண்டு கிளம்பினான்.
மதியம் அவன் வரும் பொழுது, எழுந்து குளித்து விட்டு வெளியே வந்தாள் திவ்யா. சற்று தெளிவாகியிருந்த அவள் முகத்தைப் பார்த்து சற்று நிம்மதியானான்.
***