நினைவு-17
தேவானந்தன் முடிந்த அளவிற்கு தனது பதட்டத்தை வெளிக்காட்டாமல் இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார், தனது பதட்டம் மருமகளை பாதித்து விடக்கூடாது என்பதற்காக!
தாலிக்கொடி உறவை இழந்தபின் தொப்புள் கொடி உறவையே பற்றுக்கோலாகக் கொண்டு வாழ்பவள். தனக்கும் அதே நிலைமை தான், எனினும் பதறிய காரியம் சிதறும் என்ற அனுபவ அறிவு கொண்டு நிதானமாக நிலைமையைக் கையாள முயல்கிறார்.
மங்கையர்கரசி மகனைப் பற்றி விசாரிக்கும் பொழுதே, ஆறுதலாக பதிலுரைத்தாலும், பொறுப்புணர்ந்த பேரன், 'இத்தனை நாட்கள் தொடர்பு கொள்ளாமல் இருக்க மாட்டானே!' என்ற எண்ணம் தோன்றத் தான் செய்தது.
எனினும் பேரன் வருடத்தில் ஒருமுறையோ, இரண்டு முறைகளோ இவ்வாறு செல்வது வழக்கம் தானே. முன்பெல்லாம் தனியாக இதற்கென திட்டமிட்டு செல்பவன், தாத்தா மற்றும் அன்னையின் தவிப்பு காரணமாக வியாபார நோக்கமாக செல்லும் இடங்களிலேயே, தனது ரோட் ட்ரிப்பை வைத்துக் கொள்கிறான்.
எப்பொழுதும் வியாபாரம் பற்றியே சிந்திப்பவனுக்கு கொஞ்சம் மாற்றமும் தேவை தானே என்று தேவானந்தனும் பேரனுக்கு சுதந்திரம் கொடுத்திருந்தார்.
மற்ற பணக்கார வீட்டு வாரிசுகள் போல் பார்ட்டி, மது, மாது என்று சுற்றாமல் தனது பேரன், எளிமையாக தன் வசமிழக்கும் சூழலில் இருந்தும், சுய கட்டுப்பாட்டோடு இருப்பதை நினைத்து தாத்தாவுக்கு எப்பொழுதும் பெருமைதான். அதற்காக சாமியார் மாதிரியும் அல்ல!
‘ஐயோ! இங்க சாமியார் மாதிரி எனக் குறிப்பிட்டால் வேறு அர்த்தம் வந்து விடுமோ? அட! போரிங் பெர்சன் இல்லைங்க! சத்யாவிற்கு நட்புகளும் உண்டு. நட்புகளோடு கலகலப்பும் உண்டு. கலகலப்போடு பார்ட்டிகளும் உண்டு. அவற்றிற்கெல்லாம் ஒரு எல்லைக்கோடும் உண்டு அவனிடம்.
இம்முறையும் செல்லும் பொழுதே தனது பயணத் திட்டங்களை கூறிவிட்டுத் தான் சென்றான். சூரத் சென்று விட்டு, சென்ற வேலை முடிந்த பிறகு, அங்கிருந்து இரயில் பயணமாக புனே செல்வதாகச் சொல்லி இருந்தான். புனேவிலிருந்து மும்பைக்கு ரோட் ட்ரிப் என கூறிவிட்டுச் சென்றான்.
அதே போல் சூரத்திலிருந்து தனது அன்னைக்கும், தாத்தாவுக்கும் ஃபோன் செய்து இரண்டு வாரம் ஆகும் எனக் கூறியவன், ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான்.
"ஏன்டா ஃபோனை ஆஃப் பண்ணி வைக்கிற?" என்ற அன்னையின் கேள்விக்கு,
"ஃபோன் ஆஃப் பண்ணலைனா, ட்ரிப்பை என்ஜாய் பண்ண முடியாதும்மா... ஃபோன் அட்டென்ட் பண்ணத் தான் சரியா இருக்கும். ட்ரிப் போறதே அதுகிட்ட இருந்து தப்பிக்கத் தான்." என்பதே எப்பொழுதும் அவன் பதிலாக இருக்கும்.
ஆனால் இம்முறை அவன் பயணத்தின் கால தாமதம் தாத்தாவை சற்று கலங்கச் செய்தது. அவன் சென்ற வேலைக்கான ஆர்டர் மெயில் எல்லாம் வந்து சேர்ந்து விட்டது. அவன் கூறிச் சென்ற காலமும் கடந்து விட்டது.
இன்னும் வரவில்லை என வெளிப்படையாக பேரனை தேடத் தொடங்கவும் முடியாது. தொழில் வட்டாரங்களில் பதில் சொல்ல வேண்டி வரும். அரசனில்லாத படை மாதிரி, தொழிலில் தொய்வு ஏற்படும்.
ஒரு நாட்டின் அரசன் இறந்து விட்டால் உடனடியாக அறிவிக்க முடியாது. முதலில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அடுத்த வாரிசை முடிவு செய்ய வேண்டும். பிறகு தான் அறிவிக்க முடியும்.
இப்பொழுது அதே நிலைமை தான் பெரியவர் தேவானந்தனுக்கு! வெளிப்படையாக புகார் கொடுக்காமல், ரகசியமாக தேடலை சூரத்தில் ஆரம்பித்திருந்தார். தொழில் வட்டாரங்களில் பேரன் வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறினார்.
மங்கையர்கரசியும் மகனுக்கு என்ன ஆனதோ என்ற கவலையில் கோவில், பூஜையறை என இருக்க தொடங்கினார்.
எப்பொழுதும் நாம் தேடுவது நம் கையருகினில் தான் இருக்கும். நம் பார்வையின் தேடல் எப்பொழுதும் தூரப்பார்வை கொண்டுதான் தேடிக் கொண்டிருக்கும். அதுபோல் தான், பேரன் தனதருகே கோவைக்கு மிக அருகினில் இருக்க, அவர் தேடலோ தொலைதூரத்தில் சல்லடை போட்டுக் கொண்டிருந்தது. இதைதான் விதி என்பதோ!
****************
"என்னங்கம்மா! யாரை எதிர் பார்த்துட்டு இருக்கிங்க?" லட்சுமியின் பார்வை வாசலை நோக்கி அடிக்கடி செல்வதைக் கண்டு கண்ணன் கேட்க,
"அவரைத் தான் கண்ணா எதிர்பாக்குறேன். திவ்யா வீட்டுக்கு பாப்பாத்தி ஆத்தாவைக் கூட்டிட்டுப் போகணும். வந்து கூட்டிட்டுப் போறேன்னு சொன்னாரு. இன்னும் வரக்காணோம்."
"ஏம்மா, ஏதும் முக்கியமான விஷயமாக போகணுமா? அவங்களுக்கு ஏதும் உடம்புக்கு முடியலையா?" என்று கேட்டான் அவளின் தனிமை நிலையை அறிந்தவனாக,
அக்கறையுடன். அவன் இங்கு வந்த பிறகு, அவள் இங்கு வந்து சென்ற இரண்டு மூன்று தடவைகளிலும், அவன் கவனித்தது அவளின் ஒட்டுதலற்ற தன்மையைத் தான். பெற்றவர்களை இழந்தவளின் நிலை என எண்ணிக் கொண்டான்.
"இல்லை கண்ணா, நாளைக்கு திவ்யாவோட பெத்தவங்களுக்கு முப்பதாம் நாள் சாமி கும்பிடு. நாளைக்கு தான் அவங்க சொந்தகாரங்க எல்லாம் சும்மா பேருக்கு வருவாங்க. நிறைய வேலையிருக்கும். அந்தப் பிள்ளைக்கு என்ன தெரியும்?" என்று லட்சுமி வருத்ததுடன் சொல்ல,
'ஓ! ஆக்சிடன்டாகி ஒரு மாசமாயிருச்சா! இன்னும் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஒரு தகவலும் வரலியே? ஒரு வேள நாம எங்கேயாவது போனாப் போதுங்கற மாதிரி இருந்திருப்போமோ?' என்று எண்ணிக் கொண்டிருக்க… லட்சுமியின் கைபேசி அழைத்தது.
சண்முகம் தான் அழைத்திருந்தார்.
"சொல்லுங்கங்க!"
"லட்சுமி நான் வர லேட்டாகும். ஆட்டோ பிடிச்சு ஆத்தாவ அனுப்பி வச்சுரு." என எதிர்முனையில் கூற, "சரிங்க." என்று கூறி இணைப்பைத் துண்டித்தார்.
என்ன என்பது போல் கண்ணன் பார்க்க, "ஆட்டோவுல அனுப்பி வைக்க சொன்னார்ப்பா... தேங்கா, வாழைப்பழம் எல்லாம் நம்ம தோட்டத்துல வெளஞ்சது கிடக்கு. அதையும் எடுத்துட்டுப் போகணும்,'' என்று கூற,
"சரிங்கம்மா! நான் போய் ஆட்டோ கூட்டிட்டு வர்றேன். நீங்க ஆத்தாவை கிளம்பச் சொல்லுங்க!"
"நீ எப்படிப்பா..." என லட்சுமி இழுக்க,
"அம்மா! கால் வலியெல்லாம் நல்லா கொறஞ்சிருச்சு. போனவாரம் டாக்டர்கிட்ட போனப்பவே ஒரு வாரத்துல கட்டப் பிரிச்சறலாம்னு சொல்லிட்டாங்க. என் உடம்புலயும் எந்தப் பிரச்சினையும் இல்ல. கவலைப்படாதிங்க." என்று கூறிவிட்டு ஆட்டோ பிடிக்க சென்று விட்டான்.
தேங்காய், வாழைத்தார் இவற்றோடு வாழையிலையும் லட்சுமி ஆட்கள் மூலம் எடுத்து வைத்திருந்தார்.
"அம்மா, நானும் ஆத்தா கூடப் போயி இதெல்லாம் இறக்கி வச்சுட்டு வரவா?" எனக் கேட்டவனை லட்சுமி மறுக்கவில்லை. ஒரே இடத்தில் இருக்கிறான். சற்று வெளியே போய்விட்டு வரட்டும் என நினைத்தார்.
திவ்யாவின் வீடு... உள்ளும் புறமும் செடிகொடிகளோடு ரம்யமாக காட்சியளித்தது. ஆட்டோ சத்தம் கேட்டு வெளியே வந்தாள். லட்சுமி இவர்களை அனுப்பி விட்டு, திவ்யாவிற்கு ஃபோனில் தகவல் சொல்லியிருந்தார். வந்து கேட்டைத் திறந்தவள், "வாங்க ஆன்ட்டி… வாங்க கண்ணன்." என வரவேற்றாள்.
ஆட்டோவை விட்டு இறங்கியவன் பார்வை அவளது முகத்தில் படிய, சிவந்து கன்றியிருந்த அவளது முகம் அழுதிருப்பதைச் சொன்னது.
அவன் ஒவ்வொன்றாக இறக்கி வைக்க, திவ்யா அவற்றை உள்ளே எடுத்து வைத்தவள், "எதுக்கு இவ்ளோ கொடுத்து விட்டுருக்காங்க. நானென்ன கடையா வைக்கப் போறேன்?" எனக் கேட்க,
"நாளைக்கு தேவைப்படுமோ என்னவோ?" என்றான்.
"ஆமாங்கண்ணு! நாளைக்கு சமையலுக்கு, சாமி கும்பிடன்னு தேவைப்படும்." என்று பாப்பாத்தி கூறினார்.
வாழை இலைக்கட்டை தூக்கியவன் பார்வை ஏதேச்சையாக பக்கத்து வீட்டு மாடிக்கு போக, அங்கிருந்து ஒருவன் திவ்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான். இவன் பார்த்ததும் சட்டென்று உள்ளே சென்று விட்டான்.
வீட்டில் தனியாகத் தானே இருக்கிறோம் என்று லாங் ஸ்கர்ட்டும், டிஷர்ட்டும் அணிந்திருந்தவள், ஆட்டோ சத்தம் கேட்டவுடன் துப்பட்டா போடாமல் வெளியே வந்து விட்டாள்.
"திவ்யா! நீங்க உள்ள போங்க! நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்."
"இல்ல கண்ணன்... உங்களுக்கு கால் வலிக்கும். நீங்க போய் உக்காருங்க... நானும் ஆன்ட்டியும் பாத்துக்கிறோம்."
"எனக்கு கால் ஒன்னும் ஒடிஞ்சு தொங்கல. இப்ப என்னால நல்லாவே நடக்க முடியும். ஆத்தாவக் கூட்டிட்டு உள்ள போங்க." என்று அவன் கோபமாகக் கூற,
'இப்ப என்ன சொல்லிட்டோம்னு, இந்தக் கத்து கத்துறாங்க? ஒருவேள நாம அவரால நடக்க முடியாதுனு சொன்னத தப்பா நினைச்சுட்டாங்களோ?' என எண்ணியவாறே உள்ளே சென்று விட்டாள்.
காலைக் கொஞ்சம் தாங்கியவாறே நடந்து எல்லாவற்றையும் எடுத்து வைத்தான். மாடி வீட்டுக்காரனின் பார்வையால் வந்த கோபம் கால்வலியை மறக்கச் செய்திருந்தது.
உள்ளே வந்தவன் வீட்டில் பார்வையை சுழற்ற, வீடு சுத்தமாக இருந்தது. அவளின் பெற்றோரின் ஃபோட்டோவில் பார்வை படிய, திவ்யா அவங்கம்மா மாதிரி என நினைத்துக் கொண்டான்.
வந்தவர்களுக்கு காஃபியோடு கிட்சனிலிருந்து வந்தாள். முடியைச் சுருட்டி கேட்ச் கிளிப்பில் அடக்கியிருக்க, அதுவும் கிளிப்பிற்குள் அடங்காமல் சிலிப்பி கொண்டு நின்றது அவளது இளமை போல.
அந்த சோர்வான சோக நிலையிலும் பார்வைக்கு லட்சணமாய் இருந்தவளை இமைக்காமல் பார்த்து ரசிக்க வேண்டுமென்று தான் தோன்றியது கண்ணனுக்கு!
'இன்னும் இவங்க ஏன் துப்பட்டா போடாம இருக்காங்க?' என்று எண்ணியவன், கண்ணியமாக பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
பெற்றோரின் கைக்குள் வளர்ந்தவளுக்கு அந்நியர் முன் எப்படித் தோற்றமளிக்க வேண்டுமென்பது இன்னும் பழகவில்லை.
அதோடு வெளியுலகத் தொடர்பென்பது பெற்றோருடன் மட்டுமே என்று இருந்தவளால் சட்டென்று ஆண்களின் வக்கிரப் பார்வையை அறிந்து கொள்வதை அறியாது இருந்தாள். ஏனோதானோ என்றுதான் தாயுடன் புறப்பட்டுச் செல்வாள் திவ்யா.
இதற்குத் தான் அவளது அம்மா அவளை, "இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்காளே?" என்று வருத்தப்பட்டதும், திட்டியதும்!
"என்ன கண்ணன் காஃபி எப்படி இருக்கு?"
"சூப்பரா இருக்குங்க." என்றான், உண்மையைச் சொல்ல முடியாமல்.
"பொய் சொன்னா போஜனம் கிடைக்காதுங்க... நான் போடுற காஃபியப் பத்தி எனக்குத் தெரியாதா?" என்றவளிடம்,
"அப்புறம் ஏங்க... என்கிட்ட கேட்டு, என்னைய பொய் சொல்ல வச்சு, நான் போஜனத்துக்கு கஷ்டப்படறதயும் பாக்கணுமாங்க?" என்று பாவமாகக் கேட்க திவ்யா சிரித்து விட்டாள்.
அழுகையால் சோர்ந்திருந்த அவள் முகத்தில் சிரிப்பைப் பார்த்ததும் அவனுக்கும் சிறு ஆறுதல்.
"காஃபி எப்படியோங்க? ஆனா வீட்டை நீட்டா வச்சுருக்கிங்க."
"எல்லாம் எங்கம்மா ட்ரெயினிங். அதது அந்தந்த இடத்துலே இருக்கணும். இல்ல... அவ்ளோதான்."
"அடி பின்னிருவாங்களோ?" என்றவனை, அவள் யோசனையாய்ப் பார்க்க, "இல்ல… உங்கம்மா டீச்சர்னு சொன்னாங்களே அதுனால கேட்டேன்."
"அட! நீங்க வேற... நீங்க சொன்ன மாதிரி ரெண்டு அடி அடிச்சாக் கூடப் பரவாயில்லைங்க. ஆனா பேசியே காதுல ரத்தம் வரவச்சுருவாங்க."
பெற்றோரைப் பற்றிய பேச்சு எனவும் சுவாரஸ்யமாக அவனுடன் பேச ஆரம்பித்து விட்டாள்.
"உங்க பேரன்ட்ஸ்க்கு லவ் மேரேஜாங்க?"
"இல்லையே! ஏன் அப்படி கேட்டிங்க?"
"உங்கம்மா ரொம்ப அழகா இருக்காங்க. அதான் கேட்டேன்!" என்றான்.
தாயின் சாயலில் இருந்தவளை நேரடியாக, "நீங்க அழகா இருக்கீங்க." என்று சொல்ல முடியாதவனாய்.
"ஆனா லவ் மேரேஜ் பண்ணினவங்க கூட அவ்ளோ அந்நியோன்யமா இருந்திருப்பாங்களானு தெரியாது கண்ணன். ரெண்டு பெரும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் தனியா இருந்ததே கிடையாது. அவங்களோட டெத்து தான் அதற்கு சாட்சி." என்றாள் தன் பெற்றோரின் புகைப்படத்தில் பார்வையைப் பதித்தவாறே!