NINAIKKATHA NERAMETHU - 12 in Tamil Love Stories by EKAA SREE books and stories PDF | நினைக்காத நேரமேது - 12

Featured Books
Categories
Share

நினைக்காத நேரமேது - 12

நினைவு-12

"ம்ம்மாஆஆ... என்னம்மா இது?" வீடே அலறுமாறு கத்திக் கொண்டே இருந்தாள் திவ்யா.

"ஏன்டி இப்படிக் கத்துற?" பட்டுப் புடவையின் மடிப்பை நீவியவாறேக் கேட்டுக்கொண்டு சரஸ்வதி வர,

"ஏம்மா… வெறும் சாம்பார மட்டும் வச்சுட்டுப் போனா எப்படிம்மா சாப்டறது? பொட்டோட்டோ ஃப்ரை எங்கம்மா?" ஆத்திரத்துடன் கேட்க,

"அடத் தீனிப் பண்டாரமே… இதுக்கா இப்படிக் கத்துன? ஏற்கனவே அந்த சைஸ்ல தான இருக்க? இதுல எப்பப்பாரு உருளைக்கிழங்கு ஃப்ரை கேக்குது." என்று கன்னத்தில் இடித்தார்.

"வெறும் சாம்பார் சோத்த எப்படிம்மா சாப்டறது, தொட்டுக்க ஒன்னுமில்லாம?"

"சாப்பிடும் போது அப்பளம் போட்டுக்க… ஃப்ரிட்ஜ்ல தயிர் இருக்கு. ஊறுகா எடுத்துக்க… ஏழு கழுத வயசாகுது இன்னும் வெளிய கிளம்பினா எல்லாம் செஞ்சு வச்சுட்டுப் போக வேண்டியதா இருக்கு." என்று பேச்சோடு பேச்சாக நொடித்துக் கொண்டார் சரஸ்வதி.

"அப்பா... இங்க பாருங்கப்பா... குழம்ப மட்டும் வச்சுட்டுப் போறாங்க, கேட்டா நீயே செஞ்சுக்கனு சொல்றாங்கப்பா." என்று கிளம்பித் தயாராகி வந்த தந்தையிடம் புகார் சொல்ல,

"ஏன் சரசு? புள்ள என்ன கேக்குதோ செஞ்சு வச்சுட்டு கிளம்பலாம்ல." மகளுக்கு வக்கலாத்து வாங்கினார் கேசவன்.

"ஏங்க… ஏற்கனவே லேட்டாயிருச்சுனு அவசரமாக் கிளம்பிட்டு இருக்கோம். கல்யாணம் வேற உங்க வழி சொந்தத்துல... எதுடா குறைனு தேடுவாங்க. இப்பப்போயி உருளைக்கிழங்கு ஃபிரை கேக்குறா!"

"ஒரு உருளக்கிழங்கு ஃப்ரைக்கு இத்தனை அக்கப்போரா? அதுக்கு ஏம்மா அப்பா வழி சொந்தத்தை எல்லாம் இழுக்கற?" என்று தந்தைக்கு கோடிட்டுக் காட்ட,

"அவ அப்படிதாம்மா… என்னமோ இவங்க வீட்டாளுக எல்லாம் லேட்டா போனா எதுவுமே சொல்லாத மாதிரி..."

"ம்ம்… அவங்கள எல்லாம் எனக்கு சமாளிக்கத் தெரியும். உங்க வீட்டு ஆளுங்ககிட்டதான் வாயே தொறக்க முடியாதே?"

"பாரு திவிம்மா, உங்கம்மா வாய்க்கும் பூட்டு போட ஆளிருக்காங்க." விடாமல் கேலி பேசினார் கேசவன்.

"என்ன பண்றது? எத்தன வயசானாலும், பொறந்த வீட்டுல காட்டுற சலுகைய, புகுந்த வீட்டுல காட்ட முடியறது இல்லைல்ல…" என்று சரஸ்வதி அங்கலாய்க்க, 

"அதுக்குதாம்மா நான் இன்னும் கொஞ்சநாள் பொறந்த வீட்லயே இருக்கறேனு சொன்னா யாரு கேக்குறாங்க?" என்று வேகமாக இடையிட்டால் திவ்யா.

"இவ வேற… நானே நம்ம வீட்ல இன்னும் கல்யாண சாப்பாடு போட நேரம் வரலியேனு கவலைப்பட்டுட்டு இருக்கேன்"

"ம்மா… நானே அந்த ஜோஸியருக்கு தாங்க்ஸ் சொல்லிட்டு இருக்கேன். இன்னும் ரெண்டு வருஷத்துக்கு கல்யாணத்தைத் தள்ளிப் போட்டதுக்கு."

திவ்யா கல்லூரியின் இறுதி ஆண்டில் இருக்கும் போதே சரஸ்வதி ஜாதகக் கட்டைத் தூக்கிக் கொண்டு ஜோசியர் வீட்டுக்கு படையெடுத்து விட்டார். அவளது ஜாதக கட்டங்களை அலசி ஆராய்ந்து பார்த்த ஜோஸியர்கள் எல்லாம், “இப்பக் கல்யாண யோகம் கூடி வரவில்லை” எனக்கூறி விட்டனர்.

இன்னும் இரண்டு வருடம் கழித்து செய்தால் நன்றாக இருக்கும். அதற்கு முன்பே செய்தாலும் பிரிந்துதான்‌ இருக்க வேண்டி வரும் எனக் கூறிவிட, சரஸ்வதி ஜாதகக் கட்டை கீழே வைத்துவிட்டார். திவ்யாவிற்கும் அதுவே சாதகமாகிப் போயிற்று. சற்றும் தாமதிக்காமல் அடுத்த டிகிரிக்குப் புத்தகக் கட்டைத் தூக்கி விட்டாள்.

"ஏன் சொல்ல மாட்ட? இப்பவே ஒரு சைஸாப் போய்க்கிட்டு இருக்க. இதுல வாயக்கட்டுறது இல்ல. பேசுறதுக்குனாலும் சரி, திங்கறதுக்குனாலும் சரி வாய் காது வரை நீளுது." மகளை வகையாக கொட்டினார் சரஸ்வதி.

"புள்ளய கண்ணு வைக்காத சரசு. ஜாடை உன்னை மாதிரிதான்னாலும் உடல்வாகு எங்க அம்மா மாதிரி கொஞ்சம் பூசுன உடம்பாப் போச்சு…"

அவளும் என்ன தான் செய்வாள். எவ்வளவு தான் வாயைக் கட்டுப்படுத்தினாலும் பசி வந்தால் பறக்கும் பத்தில், உணவுக்கட்டுப்பாடு முதலிடம் பிடித்து விடுகிறது.

"அதுக்குத்தான் கொஞ்சம் வாயக் கட்டு, குனிஞ்சு நிமிர்ந்து வேலையப் பாருன்னு சொல்றது. இவ என்னடான்னா, அப்பளம் போட்டுக்க சொன்னதுக்கே உங்ககிட்ட புகார் வாசிக்கறா. நீங்களும் அவளுக்கு சப்போர்ட் பண்றீங்க!"

"அம்மா, நான் என்ன உடம்பை ஃபிட்டாக்கி மாடலிங்கா பண்ண போறேன்?" தாயுடன் மல்லுக்கு நின்றாள் திவ்யா.

"அதானே, குடும்பப் பொண்ணுக்கு எதுக்கு ஃபிட்னஸ்? எம்பொண்ணு இப்படி இருந்தாதான் அழகு. அமுல்பேபி மாதிரி... அதொன்னுமில்ல திவிமா… என்னதான் நீ அவ ஜாடையில‌ இருந்தாலும், உன்னளவுக்கு இல்லாம வத்தலும் தொத்தலுமா இருக்காள்ல... அதுதான் அவளுக்கும் கொஞ்சம் பொறாமை."

"என்னது... நானா... வத்தலும் தொத்தலுமாவா? என்று பொங்கியவர், 

"திவி… தண்ணி கொண்டு வா!" என மகளை உள்ளே அனுப்பியவர்,

கணவனின் அருகில் நெருங்கி, "எம்பொண்ணுக்கு அம்மா மாதிரி இல்லடி, அக்கா மாதிரி ஃபிட்டா இருக்கேனு சொல்லுவீங்கள்ல, அப்ப வச்சுக்கறேன் உங்கள..." என்று மகளுக்குக் கேளாமல் கிசுகிசுத்தார் சரஸ்வதி.

பள்ளி செல்லும் நாட்கள் தவிர வேறு எங்கு சென்றாலும், கிளம்புமுன் மகளோ அல்லது மனைவியோ அவருக்குத் தண்ணீர் தருவது வழக்கம். அதைக் காரணம் காட்டி மகளை உள்ளே அனுப்பினார்.

"ஏன்டி... அதெல்லாம் ஒரு மூடுல சொல்றது. அதெல்லாமா சொல்லிக் காட்டுவ?" என்று தன்னைச் சீண்டிய கணவரை முறைத்துக் கொண்டிருந்தார்.

"என்னப்பா பார்வையே சரியில்ல… அனல் பறக்குது." என்று சொம்பில் தண்ணியோடு வந்தவள் கேட்க,

"என்னம்மா பண்றது? தமிழ் டீச்சரா இருந்தா காதல், கவிதைனு இருக்கும். நமக்கு வாச்சதுதான் பயாலஜி ஆச்சே... அதுதாம்மா அனல் பறக்குது."

"அப்பா தமிழ் எப்பவும் கற்பனைக்கு அழகு. பாயோலஜிதான் ப்ராக்டிகலுக்கு உதவும்." என்று தந்தையிடம் கூறிவிட்டு, சிரிப்போடு தாயைப் பார்த்து கண் சிமிட்ட,

"கர்மம்... கர்மம்." என்று தலையிலடித்துக் கொண்டவர், "கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா? வயசு வித்யாசமில்லாம, யாருகிட்ட எதைப் பேசணுங்கற விவரமிருக்கா… உனக்கு வாய்க்கொழுப்பு கூடிப் போச்சு. எல்லாம்‌ இவர் கொடுக்குற இடம்." என்று சரஸ்வதி தன் அர்ச்சனையை ஆரம்பிக்க…

"எதுவா இருந்தாலும் அம்மா அப்பாகிட்ட ஃப்ரியா பேசுனு சொல்ல வேண்டியது. ஏதாவது சொன்னா விவஸ்தையில்லைனு திட்ட வேண்டியது." என்று திவ்யா ‌தனக்குள் முனங்க,

"என்னடி அங்க முனங்கற?"

"ம்ம்… ஒன்னுமில்லம்மா, யாரோ இங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி லேட்டாச்சுன்னு ஆளாப் பறந்தாங்க... ஆனா என்னைத் திட்டறதுனா மட்டும் அவங்களுக்கு நேரம் போறது கூடத் தெரியாதே!"

"இவ கூடப் பேசுனா, முகூர்த்தத்துக்குப் போக முடியாது. பந்திக்குத் தான் போகணும்." என்று கூறியவர் மகளுக்கு ஆயிரம் முன்னெச்சரிக்கைகள் செய்துவிட்டு கிளம்பினர்.

“கதவை நல்லாப் பூட்டிக்கோ! ஃபோனப் பக்கத்துலயே வச்சுக்கோ! எந்தச் சத்தம் கேட்டாலும் தேவையில்லாமல் கதவைத் திறக்காத. முடிஞ்சளவுக்கு இருட்டறதுக்குள்ள வந்துருவோம்.” இப்படி பல பத்திரங்கள் சொல்லி விட்டுக் கிளம்பினர்.

சென்றவர்கள் அறியவில்லை. இதுதான் தங்கள் மகள் தங்களிடம் நடத்தும் கடைசி வாயாடல் என்பதை... பேதையும் உணரவில்லை. இதுதான் தன் அம்மாவிடம் நடத்தும் கடைசி வாய்ச்சண்டை என்பதை!

சட்டென்று நிகழ்விற்கு வந்தாள் திவ்யா. அலுவலகத்தில், தன் மனதில் நிறைந்திருந்தவனைக் கண்ணில் நிறைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவளுக்கு, அதுவரை அழுத்திய மனபாரம், கண்களில் கண்ணீராக வெளியேறியது. 

தன் பெற்றோரின் புகைப்படம் கண்டவளது மனம், அவர்களின் இறுதிநாள் ஞாபகம்வர அனாதரவாய் உணர்ந்தாள். மீண்டும் மழலையாய் அன்னை மடிசேர மனம் ஏங்கியது. 

விதி தன்னவனைக் கொண்டு வந்து சேர்க்க அந்த நாளைத் தேர்ந்தெடுத்ததா? இல்லை, பெற்றோர் இடத்தில்‌ இவன்தான் இனி உனக்கு என்று அவனைக் கொண்டு வந்து சேர்ந்ததா? விதியாடும் விளையாட்டிற்கு விடை யார் சொல்வது?

மடியேந்தியவர்களோ மறைந்த நிலையில், மடிதாங்கியவனோ மறந்த நிலையில். மங்கையவளோ மனம் வெதும்பிய நிலையில் திக்கற்று நிற்கிறாள்!

சண்முகம், லட்சுமி தம்பதியர் எவ்வளவுதான் அவளுக்கு ஆதரவாக இருந்தாலும், வெறுமையை மனம் உணரும் நேரங்களில் மனம் விரும்புவது என்னமோ தன் மணாளனின் தோள்களைத்தான். 

அவன் தோள்சேரவும், அவனை மடிதாங்கவும் மனம் ஏங்கியது.

அந்த நாள்… மகளிடம் வாயாடி விட்டு பட்டுச்சேலை சரசரக்க, இருவரும் சரசமாக பேசியபடி சென்ற பெற்றோரை, மீண்டும் அவள் கண்டது என்னமோ, வெள்ளைத் துணியில் சுருட்டப்பட்ட பொட்டலமாகத்தான்.

திருமணத்திற்கு சென்றவர்கள், திரும்புவதற்குள் இருட்டி விட்டது. மண்டபத்தோடு திரும்ப முடியாமல், கொஞ்சம் நெருங்கிய சொந்தம் என்பதால், மணமக்களோடு வீடுவரை செல்ல வேண்டியதாகி விட்டது. 

"ஏங்க நம்ம திவ்யா கல்யாணத்தையும் இதே மாதிரி பெருசாப் பண்ணனுங்க." மகளைக் கல்யாணக் கோலத்தில் தன் மணக்கண்ணில் கண்டவாறே சரஸ்வதி தன் கணவனிடம் கூற,

"முதல்ல நல்ல மாப்பிள்ளை அமையட்டும். ஜமாய்ச்சுடலாம். புள்ளயும் படிப்ப முடிக்கணும்."

"ஜோசியர் சொன்ன ரெண்டு வருஷத்துல, ஒரு வருஷம் ஓடிருச்சு. இப்பவே பாக்க ஆரம்பிச்சாதான் சரியா இருக்கும்."

"ஒத்தப்புள்ளயா போச்சு... எப்படி விட்டுட்டு இருக்கப் போறோமோ தெரியல சரசு."

"எனக்கும் அத நினைச்சா தாங்க கவலையா இருக்கு. இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கா!"

கேசவன் காரோட்ட, மகளின் கல்யாணக் கனவோடு, அவளின் பிரிவைப் பற்றியும் பேசிக் கொண்டே வந்தார்கள்.

"ஏய்! காரை நிப்பாட்டு. குடிச்சிருக்கியா? குடிச்சுட்டு எப்படி நீ டாக்ஸி ஓட்டுற. நானும் இது தெரியாம கார்ல ஏறித் தொலைச்சுட்டேன்" என அதட்டியவன்,

 'சற்றுமுன் தான் குடித்திருக்க வேண்டும். இப்பொழுதுதான் வித்தியாசம் தெரிகிறது.' என்று நினைத்துக் கொண்டே அவன் கூற,

"சர் கவலைப்படாதீங்க... எவ்ளோ குடிச்சாலும் நம்ம வண்டி ஸ்டெடியாப் போகுங்க சர்." என்று வாய் தான் கூறியதே தவிர கார் கொஞ்சம் தடுமாறியது.

"உன் ஸ்டெடியப் பாத்தாலே தெரியுது. முதல்ல நிப்பாட்டு." என்று கூறியவன் தனது பேக்பேக்கை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானான்.

"சர், இந்த எடத்துல எறங்கி எப்படிப் போவீங்க? இருட்டுல எவனும் லிஃப்ட்டு கூடத் தரமாட்டான்."

"நான் நடந்தே கூட கோயம்புத்தூர் போயிக்கிறேன். நீ காரை நிப்பாட்டு."

"இப்ப பாருங்க சர் நம்ம கன்ட்ரோல..." என்று கூறிய கார்டிரைவர், போதையில் வாகனத்தின் வேகத்தைக் கூட்ட, 

"ஏய்ய்ய்…! சைடுல இருந்து ஒரு கார் மெயின் ரோட்டுல ஏறுது பாரு!" என்று உள்ளிருந்து கத்த, அதற்குள், போதையில் இருந்ததினால், டிரைவரும் தன் கட்டுப்பாட்டை இழக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.

கிளைச்சாலையில் இருந்து, இடதுபுறமாகத் திரும்பி, கோயம்புத்தூர் சாலையில் கார் மேலேற, வலதுபுறமாக முழு வேகத்தோடு டாக்ஸி வந்து மோதியதால் கேசவனால் சுதாரிக்க முடியாமல் போய்விட்டது.

மோதிய வேகத்தில் இவர்களது கார் தூக்கி எறியப்பட, காரின் முன்புறம் நசுங்கி இருவரையும் அழுத்த, மகளின் தற்காலிகப் பிரிவையே, ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள், நிரந்தரப் பிரிவை ஏற்றுக் கொண்டது எங்ஙனமோ?

டாக்ஸியும் தடுப்புச் சுவரில் பலமாக மோத முன்புறம் முழுதும் சேதமடைந்த நிலையில், டிரைவரும் பலமாகக் காயப்பட, உடம்பின் இரத்தத்தில் கலந்திருந்த ஆல்கஹால் அவனுக்கு இறுதி முடிவை எளிதாக்கியது.

டாக்ஸி கேசவன் காரோடு மோதிய வேகத்திலேயே, டாக்ஸியில் கதவு சரியாக லாக் செய்யப்படாத காரணத்தால், பட்டென்று திறந்து கொள்ள, உள்ளிருந்தவன் வெளியே தூக்கி வீசப்பட, லாவகம் புரிந்தவன் சட்டென்று உருண்டு ஒதுங்கினான். 

இருந்தும், இடது கால்வலி அவனுக்கு எலும்பு முறிவை உணர்த்திக் கொண்டிருக்க, சாலையை ஒட்டி அமைக்கப்பட்ட அரையடி உயர‌ நடைபாதையில் பின்மண்டை அடிபட மயங்கினான்.