ninaikkaatha neramethu - 10 in Tamil Love Stories by EKAA SREE books and stories PDF | நினைக்காத நேரமேது - 10

Featured Books
Categories
Share

நினைக்காத நேரமேது - 10

நினைவு-10

அலுவலகம் வந்த இருவரும், ஏற்கனவே ஒரு மணி நேர‌ பெர்மிஷன், ஒன்றரை மணிநேரமாகிப் போனதில், வந்ததும்‌ வேலையில் கவனமாயினர்.

திவ்யாவை அழைத்த‌ மேனஜர், “நீ வந்ததும் உடனே எம்.டி உன்னை வந்து பார்க்கச் சொன்னாரும்மா!” என்று தகவல் கூறினார்.

முன்தினமே தேவானாந்தன் தன்னிடம் ஆடிட்டிங் பற்றிக் கூறியிருந்ததால், அது சம்பந்தப்பட்ட சில ஃபைல்களை எடுத்துக் கொண்டு, எம்.டி‌ அறை‌ நோக்கிச் சென்றாள்.

அறைக்கதவை தட்டி விட்டு, "எக்ஸ்கியூஸ்மீ சர்!" எனக் கேட்டுக்‌ கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

"யெஸ்... கம் இன்!" ஆணவனின் கம்பீரக் குரல் கேட்டு, சட்டென அவள் இதயம் இயங்க மறுத்தது.  

இல்லை... இவ்வளவு நாட்களாக இயந்திரமாக இயங்கிய இதயம், இக்குரல் கேட்டுத் தன் இயக்கத்தை மீட்டெடுத்ததா? கனவா? கற்பனையா? அல்லது நிகழ்காலத்தில் கரையும் நிகழ்வுகளா! 

எத்தனை நாள்‌ ஏக்கம்... தவிப்பு! வேண்டுதல், எதிர்பார்ப்பு, இந்த‌ நொடிக்காக! சமீப காலமாகவே இப்படியொரு சந்திப்பு என்றாவது ஒருநாள் நிகழும்‌ என‌ எதிர்பார்த்தது தான். அந்த நாளுக்காக மனமும் ஏங்கித் தவித்தது தான். ஆனால், அது நிகழும் பொழுது, அந்த நிமிடத்தின் கனத்தைத் தாங்கும் சக்தியை இழந்து விட்டாள் திவ்யா.

அவளின் இதயம் தாளம் தப்பி ஒலித்தது. ரயிலின் தடதடப்பு. இதயத் துடிப்பின் வேகம் கழுத்து நரம்புகளை அழுத்த, காதுகளும் காற்றடைத்து செயலிழந்த உணர்வு.

கண்களும் மங்கியது. கையிலிருந்த ஃபைல்களை நெஞ்சோடு இறுக்கிப் பிடித்து அழுத்திக் கொண்டாள். கண்கள் மட்டும் அவளவன் முகம் விட்டு அகலவில்லை. எவ்வளவு மாற்றங்கள். இல்லையில்லை இது தானே நிஜம். 

வலதுகாலை லேசாக மடக்கி, டேபிளில் சாய்ந்து நின்றவாறு, கையிலிருந்த ஃபைலில் பார்வையைப் பதித்திருந்தான். அவனின் தோரணை, கண்ணன் குழலூதும் பொழுது நிற்கும் தோற்றத்தை நினைவூட்ட, 'என் கண்ணன்.' என பெருமிதமாய் எண்ணிக் கொண்டாள். அவளை இன்னும் அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை. 

‘நிமிர்ந்து பார்த்து விடாதே கண்ணா! உன் கண்களைச் சந்திக்கும் நான், சிந்திக்கும் ஆற்றல் அற்றுப் போய் விடுவேன்!’ என்று வேண்டிக் கொண்டாள்.

பாதாதி கேசம் முடியத் தன் கண்ணனின், ஆளுமை நிறைந்த கம்பீரத்தை, இத்தனை நாள் ஏக்கதாகத்தைத் தீர்க்கும் தண்ணீராகக் கண்களால் பருகிக் கொண்டிருந்தாள். மழை நீருக்காகக் காத்திருந்த சாதகப் பறவை போல...

இந்த நிமிடம்

இந்த நிமிடம்

இப்படியே உறையாதா

இந்த நெருக்கம்

இந்த நெருக்கம்

இப்படியே தொடராதா

இந்த மௌனம்

இந்த மௌனம்

இப்படியே உடையாதா

இந்த மயக்கம்

இந்த மயக்கம்

இப்படியே நீளாதா….

கன்னியவள் தன் கண்ணன் அவனை, தன் கண்களால் ஆசை தீர சிறிது நேரம் கண்டு களிக்கட்டுமே! 

***

கன்னியவளின் பார்வை‌ முழுதும் தன் கண்ணன் மீதே படிந்திருக்க, ஃபைலில் பார்வையைப் பதித்திருந்தவன், அறையின் காற்றில் கலந்திருந்த ரூம் ஃப்ரெஷ்னரின் வாசனையையும் தாண்டி, அவள் சூடியிருந்த ஜாதிமல்லியின் வாசனையோடு, வாசனைச் சந்தனமும், தாழம்பூ குங்கும வாசனையும் கலந்து, தன் நாசியைத் தீண்டிய நறுமணத்தில், 'என்ன‌ வாசனை இது?' என எண்ணியவாறு நிமிர்ந்து பார்த்தான்.

அவன் பார்வை எதிரில் நின்றிருந்தவள் மீது படிந்தது. பதினொரு மணி வெயிலில் வண்டி ஓட்டி வந்தவளின் முடிகள், ஆங்காங்கே சிலிப்பி இருக்க... அதில் ஒருசில முடிகள் நெற்றி மற்றும் கன்னத்து வியர்வையில், தூரிகையின் ஒற்றைத் தீற்றலாய் படிந்து அவளின் அழகை மெருகேற்றிக் காட்டியது.

அவனைக் கண்ட பதட்டத்தில் லேசாக நீர் பூத்து சிவந்திருந்த கண்களும், ஃபைலை இறுகப் பற்றி, பதட்ட மூச்சு வாங்க நின்றிருந்தவளின் தோற்றம், அவனைத் தன்னிலை மறந்த மோன நிலைக்கு இட்டுச் சென்றது.

நெற்றிக் குங்குமமும் மஞ்சளும் மகரந்தத் தூளாய் உதிர்ந்து, மூக்கின் மீது படிந்திருந்ததைக் கண்டவனது வலது கை, அதைத் துடைப்பதற்காக, ஃபைலிலிருந்து தானாக மேலெழும்பியது.

பார்வையும் மேலெழுந்து அவள் நெற்றி வகிட்டில் படிய… வகிட்டில் குங்குமத்தைக் கண்டவனது கரம், தீச்சுடர் தொட்டக் குழந்தையாய் சட்டெனப் பின்‌வாங்கியது.

அவன் பார்வை கழுத்திற்கு இறங்க, கழுத்திலிருந்த மஞ்சள் கயிறு சுட்டியது அவள் திருமதி என்பதை. சட்டெனத் தன்னிலைத் திரும்பியவனுக்கு, தான் செய்யத் துணிந்த காரியத்தின் வீரியம் புரியவே, சில கணங்கள் பிடித்தது.

'நானா இப்படி?' என ஒரு நிமிடம் திகைத்தவன், பதட்டம் தணிக்க தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான். புருவத்தை இரு கைகளாலும் நீவி, முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்.

அவன் அசைந்ததில் தன்னிலை வரப்பெற்ற, திவ்யாவும் மூச்சை இழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு,  "சர்..." என அழைத்தாள், கண்ணா என அழைக்க எழுந்த நாவினை அடக்கி.

தற்சமயம் எதையும் ஆலோசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. 

"நீங்க போயிட்டு கொஞ்நேரம் கழிச்சு வாங்க... இப்ப நான் வேற ஃபைல்ஸ் பாக்க ஆரம்பிச்சுட்டேன். எப்ப வரச் சொன்னா... எப்ப வந்து நிக்கறீங்க?" என்றான் தானாகவே வரவழைத்துக் கொண்ட கோபத்தோடு!

இது அவள் மீது வந்த கோபமல்ல... தான் செய்யத் துணிந்த காரியத்தை எண்ணித் தன்மீது வந்த கோபம்.

"சர்... நேத்தே பெர்மிஷன்...” என்று அவள் விளக்கம் கூறுவதற்குள்,

"இப்ப நான் வேலையப் பாக்கவா? இல்ல... உங்க விளக்கத்தைக் கேட்கவா?" என்றான் இயல்பாய் மூண்ட எரிச்சலுடன்.

அவனது உஷ்ணப் பேச்சில், முகம் கூம்பியவளாக, "சாரி சர்...'' என்றவாறு திரும்ப வெளியேறினாள்.

அவள்‌ அவ்வாறு சோர்ந்து வெளியேறியதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. தான் செய்ய நினைத்ததை மீண்டும் ஒரு‌முறை நினைத்துப் பார்த்தவனுக்கு, தன் சுயம் மறந்ததன் காரணம் மட்டும் விளங்கவில்லை.

கல்லூரி வாழ்க்கையிலும் சரி, அதற்குப் பிறகும் சரி… அவன் கடந்து வராத பெண்களா? அப்பொழுதெல்லாம் அந்தந்த வயதிற்குரிய குறுகுறுப்போடு பார்த்ததோடு சரி. மனம் சலனப்பட்டதில்லை. 

சலனப்படுத்த நினைத்த‌ பெண்களுக்கும், 'எட்டி நில்! எச்சரிக்கிறேன்!' என்கிற பார்வை தான் அவனின் பதிலாக இருக்கும். ஆனால் இப்பொழுது, அதுவும் திருமணமான பெண் மீது... அதை நினைத்துப் பார்க்கவே‌ மனது கூசியது. 

ஆனால் அந்த முகம், வேற்றுமையாக எண்ணத் தோன்றவில்லை. ஒரு பெண்ணைப் பார்த்தால் இவள் எனக்கானவள் என்று உள்மனது சொல்ல‌ வேண்டும் என ஆசைப்பட்டவன். அவளைப் பார்த்ததும் கை உரிமையாக மேலெழுந்ததே ஒழிய… தடுமாற்றம் இல்லை.

அந்தக் கண்கள் அவனை ஆழிச் சுழலாக உள்ளிழுத்ததே... ஒருவேளை‌ நாம் இவளைத் தாமதமாக சந்தித்து விட்டோமோ? எனப் பலவாறாக குழம்பித் தவித்தவன், நாற்காலியில் பின்புறமாக தலையைச் சாய்த்து ஆழ்ந்து மூச்சு விட்டான். 

உள்ளுணர்வு அவளை உன்னவள் என்று அடையாளம் காட்டும் முன் அறிவு விழித்துக் கொண்டு, ஏன் என்று கேள்வி கேட்டது.

மனதிற்கு தெரிந்தது இரண்டே விஷயங்கள் தான். விருப்பு மற்றும் வெறுப்பு.  அறிவு அப்படி இல்லை. ஏன் என்று கேள்வி கேட்கும். விவாதம் பண்ணும். ஆராய்ச்சி செய்யும்.‌ சில சமயங்களில் நம்மைக் குழப்பி விட்டு, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க‌ வைக்கும்.

அறிவு தோற்கும் இரண்டே இடங்கள். தாய்மை மற்றும் காதல். 

'சத்யா... பி ஸ்டெடி! இதுக்குத் தான் தாத்தா சொன்ன மாதிரி காலாகாலத்துல கல்யாணம் பண்ணனும்கறது... பூவும் புடவையுமா ஒரு பொண்ணப் பாத்ததும் மனசு அலைபாயுது பாரு!' என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டான்.

அப்பொழுதும் அவன் உள் மனது இது சபலம் இல்லை என அடித்துச் சொல்லியது. அவளை வெளியே போகச் சொன்னானே ஒழிய, அந்த முகம் மட்டும் மனக்கண்ணை விட்டு நீங்கவில்லை.

அவள் முகத்திலும்‌ சிறு தடுமாற்றம் இருந்ததே. ஒருவேளை தாத்தாவை எதிர்பார்த்து வந்தவள், என்னைப் பார்த்ததும் வந்த தடுமாற்றமாக இருக்கும் என‌ எண்ணிக் கொண்டான்.

அவனுக்குத் தெரியவில்லை. இது மனதின் அலைபாயல் இல்லை. சலனம் இல்லை. சபலம் இல்லை. ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் அவனவளுக்கான வேட்கை என... மனதை முயன்று ஒரு நிலைப்படுத்தினான். எண்ணக் குவியல் செய்தான். வேலையில் கவனமாகினான்.

அவனைப் பார்த்து விட்டு, வெளியே வந்தவளுக்கோ இன்னும் படபடப்பு அடங்கவில்லை. தனது கேபினுக்கு வந்தவள், வாட்டர் பாட்டில் எடுத்து நிதானமாக நீரைப் பருகினாள்.

அவனைப் பார்த்ததினால் மேலெழுந்த ஞாபகங்களை மீண்டும் உள் அழுத்தும் விதமாக... ஆனால் அதுவோ காற்றடைத்த பலூனாக மேலெழும்பியது.

சிறிது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், வெயிலில் வந்ததும், அவளவனைக் கண்ட எதிர்பாரா சந்திப்பும் அவளுக்கு தலை‌பாரத்தை உண்டு பண்ணியது.

சூடாகக் காஃபி குடித்தால் நன்றாக‌ இருக்கும் எனத் தோன்ற, நந்தினியைத் திரும்பிப் பார்த்தாள். அவள் வேலையில் மும்முரமாக இருக்க, இன்டர்காம் அழைத்தது. 

அழைப்பை ஏற்றவள், "எஸ் சர்." என பேச ஆரம்பிக்க,

"மிஸஸ் திவ்யா?" 

இந்த அழைப்பு… அதுவும் அவனது குரல் வழி‌ மிஸஸ் எனும் சொல்‌ கேட்டவளுக்கு, நெஞ்சமெங்கும் பூ மழைச்சாரல்!

"எஸ் சர்!"

"ஆஃப்டர் லன்ச், ஐ வான்ட் சி‌ தெ பேக்கிங் செக்ஷன்… ஜாய்ன் வித் மி!" என்றான் உத்தரவாக.

"ஓகே சர்!" என்று இனிமையான குரலில் பதிலளித்தவள்,

'பெரிய மணிரத்னம் பட ஹீரோ… அதிகமாப் பேச மாட்டாரோ?' என‌ நினைத்தவாறு நேரம் பார்க்க மணி பனிரெண்டைத் தாண்டிக் காட்டியது.

லன்ச் டைம் நெருங்குவதால் காஃபிக்கு உகந்த நேரமில்லை என காஃபி ஆசையைத்‌ தள்ளி வைத்தாள். வேலையில் ‌கவனமாகியவளை, சிறிது நேரத்தில் நந்தினியின் குரல் கலைத்தது. 

"திவ்யா!"

"ம்ம்..."

"சாப்பிடப் போலாமா? காலையில் பிரசாதம் மட்டும் சாப்பிட்டது, பயங்கரப் பசி திவி!"

"நந்து மேடம்... பிரசாதம்னு ஏதோ கொஞ்சமா கோயில்ல‌ வாங்கி சாப்பிட்ட மாதிரி சொல்றீங்க! சுண்டல், கொழுக்கட்டை, பொங்கல் அதுவும் பத்தாதுனு ஸ்வீட்டு, பழம் இப்படி எத்தனை வகை? ஒவ்வொன்னையும் ஒரு வாய்‌ சாப்பிட்டிருந்தா கூட ரெண்டு நாளைக்குத் தாக்குப் பிடிக்குமே மேடம்…” என்றாள் தன்‌ முன்னிருந்த கம்யூட்டர் திரையில் கண்களை ஓட்டியவாறே.

"கண்ணு வைக்காத திவி… வயித்துக்கு வஞ்சனை பண்ணக் கூடாது. அது நம்ம பேச்சைக் கேக்காது. நாம தான் அது பேச்சைக் கேட்கணும்னு ஔவையார் பாட்டியே சொல்லியிருக்காங்க தெரியுமா?" 

"அவங்க எப்போப்பா சொன்னாங்க?"

''ஒரு நேரம் சாப்பிடாமப் பொருத்துக்கோனாலும் கேட்க மாட்டேங்கிறே… அடுத்த வேளைக்கும் சேத்து சாப்பிடுனாலும் கேட்க மாட்டேங்கறேனு… அவரே புலம்பி இருக்காரு."

"என்ன மேடம்... இலக்கியமெல்லாம் பேசறாங்க! நல்லாத் தெரியுமா? ஔவையார்‌ தானா?"

"ஔவையாரா? அதியமானா?" என வடிவேலு பாணியில் யோசித்து விட்டு... “யாரா இருந்தா என்ன? சொன்னது கரெக்ட் தான?'' என்றாள்.

"சோறுன்னு வந்துட்டா நீ எல்லா வியாக்கியானமும் பேசுவ... வா போலாம்." எனக் கூறியவளை,

"நீ என்ன வெறும் காத்தும் தண்ணியும் குடிச்சா உயிர் வாழப் போற? இல்லையில்ல... பேசாம வா!" எனக் கூறிய நந்தினியோடு சேர்ந்து, திவ்யாவும் டைனிங் ஹால் நோக்கி சென்றாள்.

திவ்யா சாப்பாட்டில் ஆர்வமில்லாமல் பேருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்க… நந்தினி அவளிடம்,

"திவி... ஏன் பசிக்கலயா? சாப்பிடாம சும்மாக் கிண்டிட்டிருக்க? ஒரு வேள... உன்ற வூட்டுக்காரர் ஞாபகமோ?"

நந்தினி கேட்டது போல் அவளுக்குத் தன்னவன் ஞாபகம் தான். லன்ச் முடித்து விட்டு, அவனோடு பேக்கிங் செஷன் போக வேண்டும். அந்நியப் பார்வை கொண்டு அவன் பார்க்கும் கணங்களை அவள் விரும்பவில்லை. தன்னால் இயலாததும் கூட...