I AM LEAVING THIS COUNTRY in Tamil Moral Stories by K D books and stories PDF | இந்த நாட்டை விட்டுப் போறேன் !

The Author
Featured Books
  • अनोखा विवाह - 10

    सुहानी - हम अभी आते हैं,,,,,,,, सुहानी को वाशरुम में आधा घंट...

  • मंजिले - भाग 13

     -------------- एक कहानी " मंज़िले " पुस्तक की सब से श्रेष्ठ...

  • I Hate Love - 6

    फ्लैशबैक अंतअपनी सोच से बाहर आती हुई जानवी,,, अपने चेहरे पर...

  • मोमल : डायरी की गहराई - 47

    पिछले भाग में हम ने देखा कि फीलिक्स को एक औरत बार बार दिखती...

  • इश्क दा मारा - 38

    रानी का सवाल सुन कर राधा गुस्से से रानी की तरफ देखने लगती है...

Categories
Share

இந்த நாட்டை விட்டுப் போறேன் !

கே.தினகர்

“ஏலே! செருக்கிவுள்ளே! எந்திரிலே!”

இலுப்படியான் குடிசை வெளியே உள்ள மரத்தடியில் சுருண்டு படுத்துக்கிடந்த சுடலையை காலால் எட்டி உதைத்தான்.

தினம் இந்த கொடுமைதான். இலுப்படியான் சாவுக்கு தப்பு அடிக்கும் குலத்தொழில் செய்பவன்.சின்ன கிராமம் ஆரம்பிச்சு பக்கத்துல உள்ள டவுன் வரைக்கும் சாவுக்கு இலுப்படியானைத்தான் கூப்பிடுவாங்க. அவன் வித்தியாசமான ஒரு வித டண்டணக்கா தப்பு அடிச்சா செத்துப் போன பிணமே எழுந்து ஆடும்.

இலுப்படியான் பொண்டாட்டி சமுத்திரம்.சுடலைப் பயலைப் பெத்து போட்டுட்டு கண்ணை மூடிட்டா.

வாநாள்பூரா இலுப்படியானோட அடியும்,உதையும்,பட்டு சீரழிஞ்சவ சமுத்திரம்.சாதாரணமா இருக்கும்போதே பொண்டாட்டியை துவைச்சு எடுப்பான்.கண்,மண், தெரியாம குடிச்சிட்டா அவளைப் பிழிஞ்சு காயப் போடுவான்.

“ பாதவத்தி! இந்தப் பயலை விட்டு நிம்மதியா போயிட்டா ! கூடவே இவனையும் கூட்டிட்டுப் போகாம விட்டுட்டாளே! “ன்னு ஊர்க்காரங்க பேசாத நாளில்ல.

“ஆத்தாவை முழுங்கிட்டான்” ன்னு சொந்த பந்தம் சொல்லி,சொல்லி அப்பனை பையனுக்கு ஜென்ம விரோதியாக்கிட்டாங்க.

விவரம் தெரிஞ்சு பள்ளிக்கூடம் போயி படிக்கணும்னு ஆசைப்பட்டான் சுடலை. தன்னோட வயித்துக் கஞ்சிக்கு சம்பாதிக்குற காசைப் பூரா குடிக்கும்,கூத்தியாளுக்கும் செலவு பண்ற இலுப்படியான் பையனை எப்படி படிக்க வைப்பான்?

சுடலைப்பையன் பிறவியிலேயே நல்ல அறிவாளி.புத்திசாலித்தனமாகேள்வி கேப்பான்.ஒரு தடவை கோவிலுக்கு போனப்ப அவனை மனுஷப்பிறவியாவே நடத்தாத ஐயரைப் பாத்து கேள்வி கேட்டான்.

“ஏன் சாமி!சாமி படுக்கப் போகும்போது சீலையைப்போட்டு மூடுதியோ?ஆனா சாமி குளிக்கும் போது திறந்து எல்லாரையும் பாக்க வக்கீயளே, அது தப்பு இல்லையா?”

ஐயர் வாயடச்சு போயிட்டாரு.

அவங்கப்பனைக் கூப்பிட்டு “ தப்பு அடிக்கிற பயவிள்ளைக்கு எவ்வளவு வாய்க்கொழுப்பு இருந்தா நாங்க செய்யறது தப்பும்பான்?”னு கேட்டார்.

புளியமரத்து விளாரால சுடலையைப் பிச்சு எடுத்துட்டான் அப்பன்.

ஆனாலும் கொஞ்ச நாள்ல கோவில் வெளியிலே விளையாடிக்கிட்டுருந்த பய மேல ஐயருக்கு அனுதாபம்.

இலுப்படியான்கிட்டே போராடி பயலை லோக்கல் பள்ளியிலே சேத்தாரு.பீசையும் அவரே கட்டினாரு.

பள்ளிக்கு ஒழுங்கா போனான்.லீவுல அப்பா கூட சாவு வீட்டுக்கு தப்பு அடிக்கப் போவான்.

கொஞ்ச நாளைக்கு முன்னால கல்லிடைகுறிசிக்குப் போன ஐயர் திரும்பலை.அங்கேயே மாரடிப்பால மண்டயைப் போட்டுட்டாரு.

அந்தகாலமா ஐயர் பையன் அப்பன் தொழிலைச் செய்ய?

பையன் ஈஸ்வரன் நல்லாப் படிச்சு அரசியல்ல சேந்து டில்லியில கட்சியில பெரிய பதவியில இருக்கான்.

அப்புறம் யார் சுடலைக்கு பீஸ் கட்டுறது?

படிக்க வேண்டாம்னு அப்பா கத்த படிச்சே தீருவேன்னு பையன் கத்த தினம் சண்டைதான்.“ ஏலே! கோடாரங்குளம் சங்குமுத்து ஐயா போய் சேந்துட்டாவளாம். போய் தப்பு அடிக்கனும் கிளம்புன்னு காலால எட்டி உதைச்சான் இலுப்படியான்.“நான் வரலை!ஸ்கூலுக்குப் போறேன்!” சுடலை முனங்குனான்.“ஏலே!மூதி! ஐயரு போயிட்டாவோ! இனிமே யார்ல உனக்கு பீசைக்கட்டுவா?”

அதுக்கப்புறம் விழுந்த அடியில ஓடிப்போயி தப்பைத் தூக்கிக்கிட்டு தள்ளிப் போய் நின்னான் சுடலை.

சன்னதித்தெரு.தோள்ல ஸ்கூல் பைக்குப் பதிலா தப்பை தொங்க விட்டுட்டு நடக்கப்போறோமேன்னு மனசுக்குள்ள கவலை.

“ஸ்கூலுக்கு வரலியா?எதிர வர்ற பசங்க கேட்டாங்க. “வரலை”ன்னு சோகமா தலையாட்டுனான்.

போற வழியில ஒரு புது வீடு கிரஹப்பிரவேசம் .வீட்டுக்குள்ள இருந்து ஒரு பசு மாட்டை கூட்டிட்டு வந்தாங்க. நல்லா அலங்காரம் பண்ணி கழுத்துல மாலை போட்டு ஒரு புது மணப்பெண் போல இருந்துச்சு.

வீட்டு முதலாளிங்க கூட ஒரு ஒரு வெள்ளைக்காரன்-வெள்ளைக்காரி வந்தாங்க. வெள்ளைக்காரன் கேமராவுல படம் பிடிச்சுக்கிட்டே வந்தான்.பக்கத்துலே இங்லீஷ்ல பேசிக்கிட்டு ஐயர் மகன் ஈஸ்வரன்.

இலுப்படியான் எதாவது காசு கிடைக்காதான்னு நின்னான்.

“என்னலே! இலுப்படியான்! எப்படி இருக்கே?”ஈஸ்வரன் கேட்டான்.

“இருக்கேன் சாமி! இவ்வோ வெளிநாட்டுல இருந்து வந்துருக்காவாளோ ? “

“ ஆமல! இவா அமெரிக்காவுல டிஸ்கவரி சேனல்ல ஒர்க் பண்றா ! இந்தியா பூரா சுத்தி நம்ம நாட்டு கலாச்சாரத்தை படம் பிடிக்க வந்துருக்கா! இப்ப தமிழ் நாட்டை கவர்பண்ண வந்துருக்கா! டீச்சர் வைச்சு நல்லா தமிழ் கத்துண்டுட்டா !”

ஈஸ்வரனைக்கூப்பிட்டு வெள்ளைக்காரங்க இங்லீஷ்ல ஏதோ பேசுனாங்க.

ஈஸ்வரன் கிட்ட வந்தான்.

“ஏலே…..நீ அடிக்கிற தப்பைப் பத்திக் கேட்டா !சொன்னேன். அதையும் படம் பிடிச்சு உன் கிட்டே இண்டர்வியூ எடுக்கணுங்கறா.இப்போ எங்க போறே ? “

“கோடாரங்குளத்துல ஒரு சாவு சாமி”

“கேள்விப்பட்டேன்!பழய எம்.பி.சங்குமுத்துதானல்ல?”

“ஆமாங்க!”

“பொணத்தை இன்னிக்கே எடுத்துருவாளா? “

“இல்லீங்க !வெளிநாட்டுல இருந்து பிள்ளைங்க வாராவோ.நாளைக்கு காலையிலதான் எடுப்பாவோ !”

“சரி!நான் சாயங்காலமா இவாளைக் கூட்டிண்டு வாரேன்!”

“சரிங்கையா ! “

இலுப்படியான் முன்னால நடந்தான்.சுடலை கூட நடந்தான்.

“ஏப்பா!அது என்ன வீட்டுக்குள்ளே இருந்து மாட்டைக்கூட்டிட்டு வாரவோ?”

“அவ்வோ புதுசா வீடு கட்டுதாவள்ளா? அந்த வீட்டுக்குள்ளே ஒரு பசு மாட்டைக் கூட்டிட்டு போனா, குடும்பத்துக்கு நல்லது.அது மட்டுமில்ல

கோமியத்தை மா இலையில எடுத்து அங்கங்கே தெளிப்பாவோ ! நல்லா பணம் வந்து சேரும்ல!”

“கோமியம்னா?”

“மாட்டு மூத்திரம்ல !”

“மாட்டு ஒண்ணுக்கா?”

“ஏலே…..என்ன முகத்தைச் சுழிக்கே? மாட்டு மூத்திரத்தை பாட்டில்ல அடைச்சு விக்காவ,,,,வெளிநாட்டுக்கெல்லாம் அனுப்புதாவ ன்னு ஒரு தடவை ஈஸ்வரன் ஐயா சொல்லியிருக்காவ….”

சுடலைக்கு ஒண்ணுமே புரியலை.

ஊருக்கு வெளியே கீத்துக்கொட்டகையில ஒரு சின்ன ஹோட்டல்.

வெளியிலே உக்காந்தாங்க அப்பாவும்,பிள்ளையும். டீக்கு ஆர்டர் கொடுத்துட்டு பீடியைப் பத்த வைச்சான் இலுப்படியான்.

எதிர இருந்த பெஞ்ச்சுல 2,3 பேரு தட்டுல ஏதோ ஒரு கறியைக் கடிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.இலுப்படியான் அவங்க சாப்பிடுறதை பசியோட பாத்துக் கிட்டு இருந்தான்.கடைக்காரன் டீயைக் கொடுத்துட்டு , “கறி வேணுமாலே?” ன்னு கேட்டான்.

“இப்ப காசு இல்ல பாய்!ராத்திரி வாரேன்”னான் இலுப்படியான்.

“புரியுதுல்ல… எழவு வீட்டுக்காசுல நல்லா ஏத்திக்கிட்டு வருவே..ஒண்ணு குடி…குடிச்ச உடனே பயலை அடி….இதாம்ல உன் லைஃபு “

இவங்க பேசுறதைக் காது கொடுத்து கேக்காமலயே சுடலை ஓட்டல் தூண்ல, ஒரு அட்டையில “மாட்டுக்கறி-20 ரூபா”ன்னு எழுதியிருந்ததைப் பாத்தான்.

ஹோட்டல்ல இருந்து நடக்குற வழியில ,” என்னப்பா மாட்டுக்கறி விக்காவ?”ன்னு சுடலை கேட்டான்.

“என்ன கேக்கே? நம்ம ஊர்லன்னு இல்லல…இந்த நாடு பூரா மாட்டுக்கறி விக்காவ…எவ்வளவு பேரு சாப்பிடுதாவ.ரொம்ப டேஸ்ட்டா இருக்குமில்ல !…. மூதி நீ சைவம்தான் சாப்பிடுவேங்கே..உனக்கு மாட்டுக்கறியோட அருமை எங்கல தெரியும்?”

சுடலைக்கு மாடைத் தெய்வமா கும்பிட்டதும்,மாட்டுக்கறி போர்டும், அதைத் திங்குற மனுஷங்களும், மனக்கண்ணுலே மாறி,மாறி வந்துச்சு.

எழவு வீடு.மூணு தடவை எம்.பி.யா இருந்த சங்குமுத்து ஒரு தடவை கூட தமிழுக்காக குரல் கொடுத்தது இல்லை. ஆனாஅவரைச் சுத்தி நிக்கிற கட்சித் தொண்டங்க நல்லாக் குடிச்சிட்டு ,“தமிழே செத்துருச்சு” ன்னு குரல் கொடுத்துக்கிட்டுருக்காங்க.

சுடலை அப்பாவைத் தேடுனான்.அவனைக் காணோம்.கொஞ்ச தூரத்துல ஒரு கிழவன் தப்பை தீயில காமிச்சுக்கிட்டு இருந்தான்.

கிட்ட போய் உக்காந்தான் சுடலை.

“ஏலே…..உங்கப்பன் இதை தீயில காட்டச்சொல்லிட்டு தண்ணியடிக்கப் போயிட்டான். உன் தப்பையும் தால…தீயிலகாட்டுதேன்.” கிழவன் சொன்னான்.தன் தப்பைக் கொடுத்துட்டு “ தாத்தா…இந்த தப்பை ஏன் தீயில காட்டுதீயோ?” –சுடலை கேட்டான்.

“ஏ …செத்த பயலுக்கு பொறந்த பயலே !இது கூட தெரியாம எப்படி உங்க அப்பன் கூட தொழிலுக்குப் போரே? இது மாட்டுத் தோல்ல செஞ்சதுல…இதை அப்பப்ப தீயில காட்டுனா விரைப்பாயி நல்லா ஸ்வுண்டு வரும்லே……”

மாட்டுத் தோலா?

மீண்டும் மாடை தெய்வமாக் கும்பிட்டதும் , மாட்டுக்கறி போர்டும், தப்பை தீயில காட்டறதும் காட்சிகளா வந்து,அந்த காட்சிகள் மேலே மாடு ‘அம்மா’ ன்னு கத்துற சத்தத்தோட சுடலைக்கு படமா ஓடுச்சு.

வெள்ளைக்காரங்களை ஈஸ்வரன் கூட்டிட்டு வந்தான்.அவுங்க சாவு வீட்டுல நடக்குற சடங்குகளை படம் பிடிச்சாங்க. தப்பு அடிக்கிற இலுப்படியான் கிட்டே பேட்டி எடுதாங்க.

அதுக்கப்புறம் ரெண்டு நாளா அந்த கிராமத்தைச் சுத்தி, சுத்தி படம் எடுத்தாங்க. கூட மாட உதவிக்கு சுடலைப் பயலைக் கூட்டிக்கிட்டாங்க. கை நிறய இலுப்படியானுக்கு காசு கொடுத்தா அவன் ஏன் சுடலையை அனுப்ப மாட்டேன்னு சொல்லப் போறான்?

ஒரு நாள் காலை.ராத்திரி போட்ட குடி போதையில லேட்டா எழுந்திருச்ச இலுப்படியான் பையனைத் தேடுனான்.

ம்ஹூம்…….வீட்டுல இருந்த சுடலையோட ஸ்கூல் பை,ஒண்ணு ரெண்டு துணி மணிகளைக் கூட காணோம்.

அங்க ,இங்க தேடுனான்.அக்கம் பக்கத்துல கேட்டான்.யாருக்கும் தெரியலை.

“தே………… மவன் !படிக்க விடலைன்னு ஊரை விட்டு ஒடிட்டான். எங்கயாவது போய் சாவட்டும்…. “

சுடலையை அப்பவே மறந்துட்டான் இலுப்படியான்.

அந்த ஊரை விட்டுக் கிளம்பும் டூரிஸ்ட் கார்.டிரைவருக்கு பக்கத்துல முன் சீட்டுல ஈஸ்வரன்.பின் சீட்டுல வெள்ளைக்கார கணவன்-அவன் மனவிக்கு நடுவிலே , மிரள மிரள முழிச்சபடி சுடலை.

ஈஸ்வரன் பேசினான்.

“மிஸ்டர் அண்ட் மிஸஸ் ரொனால்ட்! இந்த பையனோட அப்பாவைக் கேக்காம நீங்கபாட்டுக்கு இவனை எடுக்கப் போறள், அமெரிக்காவுக்கு கூட்டிட்டுப் போறேள்னுசொல்றது சட்டப்படி தப்பு…..”

“நோ ப்ராப்ளம் ஈஸ்வரன்!எங்களுக்குப் பிள்ளை இல்லை. இவன் ரொம்ப ப்ரிலியன்ட் பாய்.இந்த நாட்டை விட்டு எங்க கூட வாரேன்னு சொல்றான்.நாங்க சட்டப்ப்படி இவனை எப்படி அடாப்ட் பண்ணனுமோ அதுபடிதான் கூட்டிட்டுப் போவோம் ‘- ரொனால்ட் பேசி முடித்தான்.

“ இவன் அப்பா என்ன பணம்கேட்டாலும்நாங்க கொடுக்கிறோம்.அப்ப என்ன அப்ஜெக்க்ஷன்?”- சுடலையை ஒரு தாய் மாதிரி தன்னோட அணைச்சபடி மிராண்டா சொன்னாள்.

“பணம் கொடுத்தா அவன் அப்பன் ஏன் வாயைத் திறக்கிறான்?அதை நான் பாத்துக்கிறேன்.ஆனா இவன் ஏன் இந்த நாட்டை விட்டு போக ஆசைப்படுறான்னு தெரிஞ்சு கிட்டேளா?”-ஈஸ்வரன்.

“இப்பக் கேட்டாப் போச்சு…ஏன் இந்த நாடு வேண்டான்னு சொல்றே? “

சுடலை அவன் வயசுக்கு மீறிய அறிவோட பேசுனான். மாட்டை தெய்வமா கும்பிட்ட காட்சி, மாட்டுகறி விக்கிறது,மாட்டுத் தோல்ல செஞ்ச வாத்தியக் கருவிகளை சுத்த சைவமான இனத்தை சேந்தவங்க கூட வாசிக்கிறது எல்லாத்தையும் சொல்லி அவனுக்கு அதெல்லாம் பிடிக்கலைன்னான்.

வெள்ளைக்காரங்க முகத்துல விடை தெரியாத ஏகப்பட்ட கேள்விகள்!

திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷன்.டிரைன் வர இன்னும் நேரம் இருக்கு.

ரொனால்ட் ஈஸ்வரனிடம் பேசினார்.

“மிஸ்டர் ஈஸ்வரன்….கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க….உங்க நாட்டுல காளை மாட்டை வீரத்தோட சிம்பலா நினைக்கிறீங்க…பசு மாட்டை கோமாதான்னு தெய்வமா கும்பிடுறீங்க…..அதோட யூரினைக் கூட புனிதமா மதிச்சு குடிக்ககூட செய்றீங்க…..மாட்டுப் பொங்கல் வைச்சு கொண்டாடுறீங்க….அப்புறம் எப்படி இந்த நாட்டுல மாட்டுக் கறி விக்குறாங்க? மாட்டைக் கொன்னு நீங்க சாப்பிடறது இல்லாம வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்றீங்க…..அது எப்படி நியாயம்? எந்த முஸ்லீம் நாட்டுல,ஏன் இந்தியாவுல இருக்குற ஒரு முஸ்லீம் ஹோட்டல்ல பன்றிக்கறி போடுவாங்களா?”

மனைவி மிராண்டா தொடர்ந்தாள்.

“உங்க சினிமாவுல மிருகங்கள் துன்புறுத்தப்படவில்லை’ னு அறிவிப்பு போடுறீங்க…சர்க்கஸ்ல மிருகங்கள் வைக்கக் கூடாதுன்னு சட்டம் போடுறீங்க….அப்புறம் பசு வதைத் தடுப்புச் சட்டத்தை ஏன் உங்க நாடு கடுமையா அமுல் படுத்தலை? அவங்களுக்கு வருமானம் வருதுங்கறதுனாலயா? இங்க ஆரியம்,திராவிடம், ஜாதி,மதம்,எல்லாத்துக்கும் சண்டை போடுறீங்க……ஆனா நீங்க கடவுளா கும்பிடுற ஒரு பசுவைக் கொல்லக்கூடாதுன்னு ஏன் யாருமே எதிர்ப்பு தெரிவிக்கலை ? உங்க அரசாங்கம் அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தா மாட்டுக்கறி போட்டுத்தான் தீரணும்னு நாங்க வெளிநாட்டுக்காரங்க சண்டை போட மாட்டோம்.உங்க ஆளுங்கதான் போராட்டம்,பஸ் எரிப்பு, உண்ணாவிரதம் ஆரம்பிப்பீங்க…. ஏன்னா நாங்க உயிரோட கொடுத்த காந்தியைக் கொன்னது வெள்ளைக்காரன் இல்லை இந்தியந்தான்!”

மூச்சு விடாமல் கொதிச்சு எழுந்து பேசிய மிராண்டாவை ரொனால்ட் அமைதிப்படுத்தினான்.

ஈஸ்வரன் அசடு வழிய, அங்குமிங்கும் பார்த்தபடி நின்னுகிட்டு இருந்தான்.இப்ப அவனுக்கு சுடலை இந்த நாட்டை விட்டு ஏன் போறான்னு புரிஞ்சுது.

ரயில் வந்தது.அவர்கள் ஏறினார்கள்.

வழி அனுப்ப வந்த ஈஸ்வரன் தான் ஒரு வாரம் கழித்து டெல்லியில் அவர்களை சந்திப்பதாகச் சொன்னான்.

ரயில் மெதுவாக புறப்பட்டது……தம்பதிகள் கை காட்டினார்கள்.ஈஸ்வரன் சுடலையைப் பார்த்தான்.அவன் பார்வையில் நன்றி தெரிந்தது……

ஆள், ஆளுக்கு கட்சி, ஜாதி, மதத்திற்கு ஒரு கட்சி நடத்தி ஆட்சியைப் பிடித்து நாட்டைக் கொள்ளையடிக்கலாம்னு நினைக்கறவங்க இருக்குற இந்த நாட்டை விட்டு…….பக்கத்துல மாநிலத்துக்கு தண்ணி கூட கொடுக்காம விரோதம் பாரட்டுற இந்த நாட்டை விட்டு…….செத்துப் போன தலைவர்கள் ஏன் செத்தாங்கன்னு ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்குற இந்த நாட்டை விட்டு……

பணம் கொடுத்தா யாருக்கு வேணாலும் ஓட்டு போடுவோம்னு முடிவெடுத்த மக்கள் வாழுற இந்த நாட்டை விட்டு…….கொலை, கொள்ளை செஞ்சவங்க கூட பெரிய பதவிக்கு வரலாங்குற இந்த நாட்டை விட்டு……பச்சிளங்குழந்தைகளைக் கூட கற்பழிச்சுட்டு மதம் கலந்த அரசியல் அவங்களைக் காப்பாத்திருங்குற நம்பிக்கையுள்ள மனுஷ மிருகங்கள் இருக்குற இந்த நாட்டை விட்டு………போறேன்னு சொல்ற சுடலை ஈஸ்வரன் பார்வையில இந்தியாவோட முதன்மையான அதிசயமாகத் தெர்ஞ்சான்.தனது பைக்குள்ள இருந்து ஒரு கார்டை எடுத்தான்.அது அவன் சார்ந்த ஜாதிக்கட்சியோட அடிப்படை உறுப்பினர் கார்டு.அதைச் சுக்கு நூறா கிழிச்சு எறிஞ்சான்.அவன் நல்லவனாயிட்ட சந்தோஷத்துல கிழிஞ்ச அந்த காகித துண்டுகள் காத்துல பறந்து போச்சு…………பிற்காலத்துல ஒரு நவீன இந்தியாவை உருவாக்கப்போற சுடலையைச் சுமந்து செல்ற சந்தோஷத்துல ரயில் உற்சாகமா தூரத்துல போய்க் கிட்டு இருந்துச்சு………

சுபம்-

K.DINAKAR cell-9940121525

17 B / 4 Velayutham colony, 1st road

Saligramam, Chennai-600093 e-mail-dinakarkasi@gmail.com