Gene in Tamil Love Stories by Sangesh books and stories PDF | ஜெனி

The Author
Featured Books
Categories
Share

ஜெனி

இந்த கதையை உங்க கிட்ட சொல்லியே ஆகணும், அப்டி என டா பெரிய கதைனு பாக்குறீங்களா? ஆமாங்க இது கொஞ்சம் பெரிய கதை தான்.ரொம்ப நாளாவே யார்ட்டயாச்சும் சொல்லணும்னு ட்ரை பண்றேன்.உங்களுக்கு time இருந்த கொஞ்சம் படிச்சு பாருங்க.

எப்ப அவனுக்கு அவ மேல அப்டி ஒரு நெனப்பு வந்ததோ அப்ப இருந்து அவளோட பேசணும்னு ரொம்பவே ஆசையா இருந்தான்.ஆனால் அவளுக்கு அவனை பாத்தாலே பிடிக்காது.வழக்கமா நடக்குறது தானான்னு நெனச்சா அது உங்க தப்பு.

குட்டியா ஒரு flashback பாப்போம்.

அதுக்கு முன்னாடி அவங்கள பத்தி சின்ன intro.பையனோட பேரு ராகுல்.கொஞ்சம் அமைதியா இருக்குற டிபிக்கல் மிடில் கிளாஸ் பையன்.எப்ப பாத்தாலும் ஏதாச்சும் எழுதிட்டே இருக்குற கவிஞன்.(கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க).பொண்ணு பேரு ஜெனி.ராஹுல்க்கு ஆப்போசிட் கேரக்டர் ஜெனி.வாயாடி,அப்பர் மிடில் கிளாஸ் பொண்ணு.selfie freak.இவ்ளோ தெரிஞ்சாலே போதும்.நம்ம ஸ்டோரிக்குள்ள போவோம்.

"மழை மேல்

கொண்ட காதலால்

மண்ணைக்

கிழித்து செடியாகிறது

விதை"

என கிளாஸ் ரூம் போர்டில் எழுதிவிட்டு எதுவும் தெரியாத மாதிரி அமர்ந்திருந்தான் ராகுல். நேரம் செல்ல செல்ல கிளாஸ் நிரம்பியது.அனைவரின் பார்வையும் போர்டில் இருந்த கவிதை மேல் தான் இருந்தது.அவன் தான் எழுதியது என்பது எல்லாருக்கும் தெரியும்,யாருக்காக எழுதியிருக்கிறான் என்பது தான் அவர்களின் சந்தேகம்.அவர்கள் சந்தேகித்த முதல் நபர் கயல்விழி.அவள் தான் அவனிடம் அடிக்கடி பேசுவாள்.எல்லாரும் அவளிடம் சென்று விசாரித்தனர்.அப்போது ஜெனி கிளாஸுக்குள் நுழைந்தாள்.எப்போதுமில்லாத புன்னகை அவளின் வரிகளற்ற உதடுகளில், உள்ளே வந்ததும் அவளின் கண்கள் ராகுலின் கண்களைத் தேடியது.ராகுலின் கண்கள் ஜெனியின் பார்வையை பெற காத்துக்கொண்டிருந்தது.

அவனை பார்த்து கள்ளச்சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு போர்டிலிருந்த வார்த்தைகளை பார்த்தாள்.வெட்கத்தில் சிவந்த முகத்தை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டாள்.தன் மொபைலை எடுத்து பார்த்தாள்.நேற்று ராகுல் அனுப்பிய அதே கவிதை வரிகள் போர்டில் எழுதப்பட்டு இருந்தது.ஹார்மோன்ஸ் செய்த சேட்டையில் இருவரும் மாட்டிக்கொண்டனர்.

அவர்களிருவரும் காதலிப்பது வெளியில் யாருக்கும் தெரியாமலிருக்க நினைத்தனர்.அதனாலேயே கண்களால் மட்டுமே பேசிக்கொண்டனர்.வார்த்தைகள் ராகுலின் மனதில் போர் புரிந்தன அவளிடம் பேச சொல்லி,இருந்தாலும் அவன் பேச தயங்கினான்.யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் தினமும் மணிக்கணக்கில் பார்வையில் பேசிக்கொண்டே இருந்தனர்.அவர்களிருவரையும் தவிர மற்ற அனைவரும் அவர்களை கவனித்தனர்.அதோடு நிறுத்தாமல் இருவரையும் சேர்த்து பேசி கிண்டல் செய்தனர். இருவருக்கும் அதில் சந்தோசம் தான் என்றாலும் ஒரு பயமும் வந்தது.

"நமக்கு மட்டும்

தெரிந்தபோது இனித்த

நம் காதல்;

மற்றவர் அறிந்ததால்

கசந்ததேனோ?"

அந்த சமயத்தில் தான் கயல்விழி ராகுலிடம் நெருங்கி பழக ஆரம்பித்தாள்.அந்த நெருக்கம் கயல்விழியின் காதலை சொல்லாமல் சொல்லியது.ராகுல் பேச மறுத்தாலும் கட்டாயப்படுத்தினாள்.ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் தான் காதலிக்கும் பெண்ணையும்,தன்னை காதலிக்கும் பெண்ணையும் எதிர் கொண்டான் ராகுல்.தன் காதலை பற்றி காயலிடம் கூறினாலும் அவள் ஏற்றுக்கொள்ள மறுத்தாள்."எப்படியும் ஜெனி ஒரு மாதத்திற்க்கு மேல் உன்னை காதலிக்க போவதில்லை,அவள் பேசுவதையெல்லாம் நீ பெரிதாக எடுத்து கொள்ளாதே,அவளின் பொழுதுபோக்கு காதலன் தான் நீ" என கூறுவாள் கயல். அவள் அப்படி சொல்வதை கேட்கும் போதெல்லாம் கயலை பற்றி கேவலமாக நினைத்தான் ராகுல்.

சரியாக ஜெனி காதலை கூறிய ஒரு மாதத்தில் ஜெனி ராகுலை avoid செய்ய துவங்கினாள். காரணமற்ற சண்டைகளால் இருவர் மனதும் காயப்பட்டது.

வழக்கம் போல அன்று இரவு ஜெனி ராகுலுக்கு கால் செய்தாள்.

"ராகுல்? நீயே யோசிச்சு பாரு நம்ம லவ் பண்றதுல நமக்கு சந்தோசம் கிடைக்குதா?, எல்லாரும் நம்மள சேத்து வச்சு பேசுறது நல்லவா இருக்குது?எனக்கு எதோ மாதிரி இருக்குது டா,கொஞ்ச நாள் நம்ம பேசாம,பாக்காம இருப்போம் டா, ப்ளீஸ்.இனிமே எனக்கு கால் பண்ணாத, தயவு செஞ்சு கிளாஸ் ல வச்சு என பாக்காத,ப்ளீஸ்" சடசடவென கூறிவிட்டு கட் செய்தாள் ஜெனி.

ராகுலின் கண்கள் கண்ணீரைக் கொப்பளிக்க ஆரம்பித்தன.அவளுக்கு கால் செய்தான்.அவனின் எண்ணை பிளாக் செய்திருந்தாள்.கயல் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்து சென்றது. ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் மதுவை நாடினான்.முதல் முறை அவனின் ரத்தத்தில் ஆல்கஹால் சென்று அவனை மாசுபடுத்த தொடங்கியது.குடித்து விட்டு ரோட்டில் செல்பவர்களிடம் உலரத் தொடங்கினான்.ஒரு சிலர் அவனை அடிக்கவும் செய்தனர்.பருக்களின் தழும்புகளிருந்த அவனின் முகத்தில் காயங்களால் ரத்தம் வழியத் தொடங்கியது.நிற்க முடியாமல் ரோட்டில் விழுந்தான்.

பலரும் அவனை திட்டி விட்டு சென்றனர்.அப்போது அந்த வழியாக சென்ற ஒரு பெண் அவனை பார்த்து பரிதாபப்பட்டாள்.அவனுக்கு உதவ நினைத்து,அவனை எழுப்ப முயற்சித்தாள்.முடியவில்லை,அருகிலிருந்த சிலரை உதவிக்கு அழைத்தாள், யாரும் வரவில்லை . கஷ்டப்பட்டு அவனை ரோட்டின் ஓரத்திற்கு இழுத்து வந்தாள்.பின் வாட்டர்போக்கெட் வாங்கி அவன் முகத்தில் தெளித்து எழுப்பினாள்.லேசாக கண் விழித்த அவனால் எந்திருக்க முடியாமல் அழுதான்.அவன் மேல் பரிதாபம் அதிகமானது.

மெதுவாக அவனை எழுப்பி அருகிலிருந்த ஒரு கடையில் அமர வைத்தாள்.பின் அவனின் மொபைலை வாங்கி அவன் நண்பர்களுக்கு அழைத்து அவர்களை வரச்சொல்லிவிட்டு அவர்களுக்காக காத்திருந்தாள். அவர்களிடம் ராகுலை ஒப்படைத்து விட்டு கிளம்பினாள்.

மறுநாள் ராகுல் கல்லூரிக்கு செல்ல மறுத்தான்.அழுது கொண்டே இருந்தான்.அவன் நண்பர்கள் கூறிய அறிவுரைகள் அவன் மனதில் பதிய மறுத்தது.பொறுமையிழந்த அவர்கள் அவனை ரூமிற்குள் அடைத்து விட்டு சென்றனர்.நேற்று போல் குடித்துவிட்டு விழுந்து கிடக்க கூடாது என்பதற்காக.கல்லூரிக்கு வராத ராகுலை ஜெனி தேடினாள்.அவன் வராததை உறுதி படுத்தி கொண்டு அவனுக்கு கால் செய்தாள்.

"பேசாமல் போனாலும்

பார்க்காமல் போனாலும்

காணாமல் போய்விடுமா

காதல்?"

"டேய் ,ஏன் டா காலேஜ்க்கு வரல?" கோபத்தில் கூட ஜெனியின் குரல் போதையேற்றியது ராஹுல்க்கு.இருந்தாலும் நேற்று அவள் கூறியதை நினைக்கும் போது அவனின் மனம் பேச மறுத்தது.இணைப்பை துண்டித்தான்.மீண்டும் மீண்டும் ஜெனி அவனை அழைத்து கொண்டே இருந்தாள்.இவனும் துண்டித்துக்கொண்டே இருந்தான்.ஒரு கட்டத்தில் தன் மொபைலை ஸ்விட்ச்ஆஃப் செய்து விட்டு தூங்கிவிட்டான்.

மறுநாள் கல்லூரிக்கு சென்றான்.அவன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள் ஜெனி.அவனை பார்த்ததும் அருகே வந்தாள் .கண்டுகொள்ளாதது போல் ராகுல் நகர்ந்தான்.அவனின் கைகளை பிடித்து அவனை நிறுத்தினாள்.அருகில் நெருங்கினாள்.ஒரு அடிக்கும் குறைவான இடைவெளியில் அவன் பக்கத்தில் நின்றாள்.இருவரின் மூச்சு காற்றும் மோதிக்கொண்டதால் இருவரின் உடலும் சூடாகியது.

அவனின் தோள் மேல் தன் கைகளை வைத்தாள்.அவன் கண்களை பார்த்துக்கொண்டே தன் இதழை அவனின் இதழை நோக்கி செலுத்தினாள்.படபடப்பில் ராகுலின் கைகள் நடுங்கின.சட்டென விலகி பளாரென்று அவனின் கன்னத்தில் அறைந்தால் ஜெனி. எதிர்பார்க்காததால் ஒரு நிமிடம் அசைவற்று நின்றான் ராகுல்.பின் அடுத்தது அறைகள் ராகுலின் கன்னத்தை வீக்கமடைய வைத்தன.

"பொறுக்கியா டா நீ ?, குடிச்சுட்டு ரோட்ல விழுந்து கிடக்குற,நல்லா தான இருந்த, என்ன டா ஆச்சு உனக்கு?,கொஞ்ச நாள் பேச வேண்டான்னு தான சொன்னேன்.அதுக்குன்னு இப்படியா டா பண்ணுவ?,நீ எனக்கு வேணும்டா, ஆனா இப்ப இல்ல,புரிஞ்சுக்கோ ப்ளீஸ்." சொல்லி முடிப்பதுற்குள் ஜெனியின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

சொல்லிவிட்டு திரும்பினாள்,இரண்டடி நடந்து பின் திரும்ப வந்து ராகுலை கட்டிக்கொண்டாள்.முத்தங்களை அவன் மீது அள்ளி தெளித்து கொண்டிருந்தாள்.அவள் இதழ் படத்த இடமே அவன் முகத்தில் இல்லாத அளவுக்கு முத்தங்களை கொடுத்தாள்.பின் எதுவும் நடக்காததை போல் சென்று தன் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவளின் செய்கைகள் அவன் மீது வைத்திருந்த காதலை உணர்த்தியது.அதனால் அவள் கூறியதை போல் அவளிடம் சில காலம் பேசாமல் இருக்க முடிவெடுத்தான்.பேசாமலும் இருந்தான்.அவளிடம் பேசிய நிமிடங்கள் அவன் தூக்கத்தை கெடுத்தது.அவளுடன் பேசும் நேரம் எப்பொழுது வரும் என எதிர்பார்த்து கொண்டிருந்தான்.நாட்கள் ஓடியதே தவிர அவள் ராகுலிடம் பேசும் காலம் மட்டும் வரவே இல்லை.

"காதலிக்க

தொடங்கிய பின் தான்

உணர்கிறேன்,

தனிமையொரு

தண்டனையென "

ராகுலை சுற்றி அதிகம் பேர் இருந்தும் ஜெனி இல்லாதது அவனை தனிமை படுத்தியது.கோபத்தை சுவற்றிடமும்,தன் மீதும் காட்டி தன்னையே காயப்படுத்திக் கொண்டிருந்தான்.இதையெல்லாம் ஜெனி கவனித்தாலும் ராகுலிடம் பேச மறுத்தாள். அந்த சமயத்தில் தான் கயலின் ஞாபகம் ராகுலுக்கு வந்தது.தன் துயரத்தை அவளிடம் கூறினால் நிம்மதியாக இருக்குமென நினைத்தான்.

எனவே கயலிடம் பேச சென்றான்.முதலில் அவனை தவிர்த்தாள் கயல்.இருந்தாலும் அவளுக்குள்ளிருந்த காதல் அவனை ஏற்றுக் கொண்டது.சோகமாக இருந்த அவனை சிரிக்க வைத்தாள்.மாலைப் பொழுதுகளில் அவனுடன் நீண்ட தூரம் நடந்து அவன் கைகளையும், தோள்களையும் அவளுடையதாக்கிக் கொண்டாள்.அவன் எதிர்பார்க்காத பொழுதுகளில் அவனுக்கு பரிசளித்து அவனை ஆச்சர்யப்படுத்தினாள் .

காலம் அவர்கள் இருவரையும் இணைத்து கட்ட நினைத்தது போல.

அன்று மழை பெய்து கொண்டிருந்தது,ராகுல் நனைந்து கொண்டே வந்தான்.அவன் பின்னால் ஜெனியும்,அவளுக்கு பின்னால் கயலும் குடைபிடித்து மலையிலிருந்து தங்களை காத்துகொண்டு வந்தனர்.ராகுல் நனைவதைப் பார்த்த ஜெனி ஓடிச்சென்று அவனுக்கும் தன் குடையினுள் இடம் கொடுத்தாள் .ராகுலுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.முகமெல்லாம் பற்களாக மாறியது.

"என்ன சார்,ரொம்ப ஹாப்பி யா இருக்கேங்க போல?" குறுகுறு பார்வையுடன் கேட்டாள் ஜெனி.

"இந்த மாதிரி மழையில உன்னோட நடக்கணும்னு எவ்ளோ நாள் ஆசை தெரியுமா?" ஏக்கத்துடன் கூறினான் ராகுல்.

"ஒஹ் , அப்டியா ?,லூசு மாதிரி நனஞ்சுட்டு போரையேனு தா வந்தேன்,இல்லாட்டி அப்டியே போயிருப்பேன் டா,இருந்தாலும் இது நல்லா இருக்குல்ல,"

"................................................................"

"அப்புறம் ,ரொம்ப தேங்க்ஸ் டா,என்னய புரிஞ்சுகிட்டு கொஞ்ச நாள் பேசாம இருந்ததுக்கு,ஆனா நா ஒன்னு கேள்வி பட்டேனே?" சந்தேகத்துடன் கேட்டாள் ஜெனி.

"என்ன ஜெனி?"

"நீயும் கயலும் லவ் பண்றதா ?"

"நீயுமா சந்தேக படற?"

"இல்லடா நான்தான் பாக்குறேனே, டெய்லி நீங்க பேசிக்குறத"

"அதுக்காக நா அவளை லவ் பண்றதா ஆயிடுமா?, அவ என்னோட பிரெண்டு அவ்ளோதா!"

"உன்ன நம்பலாமா?"

பதிலேதும் கூறாமல் ஜெனியை முறைத்து விட்டு சென்றான் ராகுல்.ஜெனி அவனை துரத்தி பிடித்தாள்.

"கோச்சுக்காத டா,சும்மா தா கேட்டேன்" என அவனின் தோளில் சாய்ந்தாள்.இருவரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.ஆனால் இதைப் பார்த்துக்கொண்டிருந்த கயலின் முகத்தில் ஏமாற்றமும், கோபமும் மழைநீரைப் போன்று வழிந்தது.

"காதலைக் கேட்டால்

கண்ணீரைத் தருகிறார்

கடவுள்"

ராகுலின் தோளில் ஜெனி.ஜெனியின் தோள்களில் ராகுலின் கைகள்.இதைப் பார்த்த கயலின் கண்ணில் கண்ணீர்.வேறு வழியில்லை,ராகுலை ஜெனியிடமிருந்து பிரிப்பதென்பது இயலாத ஒன்று.ஜெனி அவனிடம் பேசாத சமயத்தில் கூட அவளை பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருப்பான் ராகுல்.அவன் கயலிடம் அதிகமாக பேசிய ஒரே வார்த்தை கூட "ஜெனி" தான்.இருந்தாலும் அவள் ராகுலை இலக்க விரும்பவில்லை.ராகுல் ஜெனியின் மீது வைத்திருந்த காதலை போல் கயல் அவன் மீது வைத்திருந்தாள்.அவனின் சந்தோஷத்திற்காக அவனிடமிருந்து விலக முடிவெடுத்தாள்.

ஆனால் அன்றிலிருந்து அவளின் நடவடிக்கைகள் மாறத்தொடங்கியது.சிரித்த முகத்தோடு இருக்கும் கயலின் முகம் சிரிக்க மறந்து பல யூகங்கள் ஆனதைப் போல் மாறியது.வெட்கத்தில் சிவந்து காணப்படும் அவளின் கன்னங்கள் கோபத்திலும்,ஏமாற்றத்திலும் சிவப்பேறி காணப்பட்டது.அவளின் பெரிய கண்மணிகள் வற்றி உள்ளே சொல்லுமளவிற்கு கண்களை சுற்றி வீக்கம் ஏற்பட்டு வித்யாசமாக காணப்பட்டாள்.அவளை பார்க்கும் போதெல்லாம் ராகுல் வருத்தப்பட்டான். அவளின் மீது பரிவு ஏற்பட்டது.

ஜெனியின் அனுமதியோடு கயலை சமாதானப்படுத்த யோசித்தான். ஜெனியிடம் அவளை பற்றி கேட்டபோது ஜெனியின் மனம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. எங்கு கயல் அவனின் மனதை மாற்றிவிடுவாளோ என்ற பாதுகாப்பற்ற உணர்வு.விடாப்பிடியாக அவன் கூறுவதை மறுத்தாள்.

ஒரு வாரம் பொறுத்துப்பார்த்த ராகுல் ஜெனியிடம் சண்டையிட்டு கயலுக்கு உதவ நினைத்தான்.மேலும் ஜெனியின் அன்பு கட்டளைகள் யாவும் ராகுலை சுயமாக முடிவெடுக்க விடவில்லை என நினைத்தான். தன் சுயமரியாதை பாதிக்கப்படுவதாக கருதி அவளிடம் சண்டையிட்டான். பேசிக்கொண்டிருந்த ஜெனிக்கு அவன் கூறிய வார்த்தைகள் மீது வெறி வந்து அவனின் கன்னங்கள் பழுக்குமளவிற்கு அறைந்து விட்டு சென்றாள்.

ராகுல் தான் சண்டையை தொடங்கினான் என்றாலும் அதனால் அதிகம் காயப்பட்டதும் அவன் தான். கயலின் மீதிருந்த பரிவிற்கும் ஜெனியின் மீதிருந்த காதலுக்குமிடையே போட்டி வைத்தால் எப்போதும் வெற்றி ஜெனிக்கே.தான் செய்யதது தவறென உணர்ந்த்து அன்றிரவே ஜெனியிடம் பேச நினைத்தான்.பொதுவாகவே ஈகோ அதிகமுள்ள ஜெனி இவனின் அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் வெற்றிடம் உருவானது ராகுலின் மனதில்.

"காற்று கூட

இல்லாத இடத்தில்

தான் வெற்றிடத்தை

உணரமுடியுமென்று

யார் கூறியது?,

காதலித்து

பாருங்கள் அவளற்ற

பொழுதுகள் அனைத்திலும்

வெற்றிடத்தை உணரலாம்!"

ராகுலின் அன்றைய இரவு, கண்ணீருக்கு மத்தியில் கழிந்தது. மறுநாள் ஜெனியை பார்க்கும் ஆவலோடு சென்றான்.அங்கு சென்று ஜெனியை பார்த்துவிட்டு ஏன் பார்த்தோமென்று ஆகிவிட்டது. ஜெனியோடு அமுதன் நெருக்கமாக நின்று selfie எடுத்துக்கொண்டிருந்தான். ஜெனியும் அவனின் நெருக்கத்தை விரும்பியவாறு அவனோடு உரசிக்கொண்டு நின்று கொண்டிருந்தாள்.ராகுலை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் அமுதனிடம் பேசுவதும்,சிரிப்பதும், தொடுவதுமாக இருந்தாள்.

"காதல் தான்

ஆண் தன் கருவறையில்

சுமக்கும் குழந்தை,

பெற்றெடுப்பதும், கருவிலே

கலைப்பதும் அவர்கள்

காதலியின் முடிவில் தான்"

நெஞ்சில் சுமக்கூடியதாய் உணர்ந்தான் ராகுல்.தான் செய்த தவறை நன்கு உணர்ந்து கொண்டான். அதற்கான தண்டணையை ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிர்பந்தம்.நாட்கள் நகர நகர அவர்களின் நெருக்கம் அதிகமானது. ராகுலின் மனதில் சோகமும், முகத்தில் தாடியும் அதிகமானது.

"பூனைக்கு காய்ச்சல் என்றால் எலிக்கு கொண்டாட்டம்" இது போல தான் இருந்தது கயலின் மனநிலை, ராகுல் ஜெனியிடமிருந்து விலகியிருப்பதும், ஜெனி அமுதனிடம் நெருங்கியிருப்பதும் அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தந்தது. மீண்டும் தன் காதல் பயணத்தை ஆரம்பிக்க ராகுலிடம் சம்மதம் கேட்டு நின்றாள்.

"காதல்

தொற்றுநோய்,

மருத்துவமற்ற தொற்றுநோய்! "

சம்மதிக்க மறுத்தான் ராகுல்.அவனின் உடல் முழுவதும் ஜெனியின் நினைவுகள் ரத்தம் போல பயணித்துக்கொண்டிருந்தன.காலம் தான் பெரிய கணக்கு வாத்தியராயிற்றே, அவனை பயமுறுத்தியே அவனின் மனதை மாற்ற நினைத்தது.

வழக்கமான நாளாக அன்று இல்லை.அன்று கயலின் பிறந்தநாள்.நேற்றைவிட இன்று கொஞ்சம் அழகாகத் தெரிந்தாள்.உண்மையைச் சொன்னால் அந்த நிமிடம் ராகுலின் நினைவில் ஜெனி இருக்கவேயில்லை. கயலும் கயல் சார்ந்த நினைவுகளும் தான் இருந்தது.இருவரும் தனிமையில் அதிகமாக சுற்றியுள்ளனர்.அப்போதெல்லாம் ஜெனியின் நினைவுகளும் உடனிருக்கும் ஆனால் இப்பொழுது அவர்களின் தனிமையில் ஜெனி இல்லை.

முதல்முறையாக கயலின் உடலை ரசிக்க ஆரம்பித்தான்.அவளின் நடையையும், சிரிப்பையும், சிணுங்கலையும்,கண்ணசைவுகளையும் கவனித்து அவைகளின் அழகில் தன் மனதை பறிகொடுத்தான். அருகில் வந்த அவளை கட்டியணைக்க முற்பட்டான்.ஆனால் கயல் அவனை தடுத்தாள்.ராகுலின் மனம் அந்த நிமிடம் குற்றஉணர்வில் தவித்து அவனை தலைகுனிய வைத்தது. கண்கள் லேசாக தூரலிட ஆரம்பித்தது.

"ராகுல்?,என்ன பாருடா,உங்கிட்ட ஒன்னு சொல்லணும், சாரி டா, நீ கட்டிப்பிடிக்க ட்ரை பனுவன்னு எதிர்பாக்கலடா, அதனால தா தடுத்தேன் டா, கொஞ்சம் என்னய பாருடா" கயலின் உதடுகள் உதிர்த்த வார்த்தைகள் ராகுலின் காதுகளில் விழுந்த பாடில்லை.

தேம்பி அழுக ஆரம்பித்தான். அதை பார்த்த கயல் பதட்டப்பட்டு அவனை தன்னோடு இறுக அணைத்துக்கொண்டாள்.

ராகுலின் முகம் கயலின் வயிற்றில் அழுந்தியிருந்தது.அவன் கண்ணீர் கயலின் ஆடையை

ஈரமாக்கியது.கயலின் கைகள் ராகுலின் தலையை தன் உடலோடு மேலும் அழுதிக்கொண்டிருந்தது.

"ஹார்மோன்களின் சேட்டையில்

தயக்கத்திற்கென்ன வேலை?"

அந்த அணைப்பை ராகுல் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதற்கு ஆசைப்பட்டான். அவனின் கண்ணீர் கயலின் வயிற்றில் ஆறுபோல் வழிந்து கொண்டிருந்தது. இருந்தாலும் கயலின் அணைப்பின் இறுக்கம் குறையவில்லை. அந்த சமயத்தில் ராகுலின் தலையில் கயலின் கண்ணீர் விழுந்தது. அவளின் முகத்தை பார்க்க அவளின் அணைப்பிலிருந்து விலகினான்.

"கயல்?, எதுக்கு அழகுற?"

"இப்டியே உனையே கட்டிபிடிச்சுட்டு இருக்கலாம்னு தோணுதுடா, எவ்ளோ நாள் இதுக்கு ஏங்கியிருக்கேன் தெரியுமா? கடவுள் என்னைய ரொம்ப அழ வச்சு பாத்துட்டாருடா"

"எதுக்கு இப்ப இப்டி புலம்பிட்டு இருக்க?"

"உனக்கு என்னடா நா இல்லாட்டி ஜெனி, அவ இல்லாட்டி நா"

அவளின் வார்த்தைகள் சுருக்கென்று அவன் நெஞ்சில் முள்ளாய் குத்தியது.அவளிடம் இருந்த நெருக்கத்தை குறைத்து விலக முயற்சிதான்.

"சபலத்தின் சாபத்தில்

சத்தியத்திற்கு இடமேது? "

அவனை மீண்டும் இழுத்து தன் உடலோடு சேர்க்க முயற்சித்த கயலிடமிருந்து விலகிச் சென்றான்.

"டேய்? கோச்சுக்காதடா,நா எதோ நெனப்புல உளறிட்டேன்டா, ப்ளீஸ் என்ன விட்டு போகாத டா"

"சாரி கயல், தப்பு என்மேல தான், உன்மேல சுத்தமா கோபமில்லை, ப்ளீஸ் கொஞ்சம் தனியா இருக்க விடு"

"ஹே,ப்ளீஸ் டா போகாதடா.எனக்கு உன் பக்கத்துலயே இருக்கும்போல இருக்குடா, நா அப்டி பேசியிருக்க கூடாது, மன்னிச்சுக்கோடா."கண்ணீருடன் கயல் கெஞ்சுவதை காதில் வாங்காமல் சென்றான் ராகுல். அவளும் அவன் பின்னாடியே சென்று அவனை சமாதானப் படுத்துச் சென்றாள்.

ராகுலின் கண்கள் விடாமல் கண்ணீரையும், வாய் கேடுகெட்ட வார்த்தைகளையும் உதிர்த்தன. தன்னையே திட்டிக்கொண்டே நடந்து சென்றான். கயல் அவன் பின் வந்துகொண்டிருந்தாள். அபோது ஜெனி அமுதனுடன் நின்று பேசிக்கொண்டிருந்தாள். அதை பார்த்த இவனின் உடலில் கோபம் புயலாக வீசியது. நேராக சென்று ஜெனியை அறைந்தான். அவளின் கன்னங்களில் கைவிரல் பதிந்து அவளின் முகத்தை ரணமாக்கியது. உடனே அமுதன் ராகுலை பிடித்து தள்ளிவிட்டான். பின் அவனை தாக்க முற்பட்டான். கயல் அமுதனை பிடிக்க முயற்சித்தாள். ஆனால் அவளை சுலபமாக பிடித்து தள்ளிவிட்டான் அமுதன். நிலைதடுமாறி கயல் கீழே விழுந்தாள்.அதில் அவளின் கையிலும் நெற்றியிலும் ரத்த காயமேற்பட்டது.

ராகுலின் கோபம் மேலும் அதிகமாகியது,இருந்தாலும் அவன் கயலை நோக்கி சென்றான். சற்றுநேரத்திற்கு முன் காதலில் அணைத்த அவளின் கைகளில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவளை தூக்கி தன் மடியில் படுக்க வைக்க முயற்சிதான். அதற்குள் அமுதன் அவனை பின்னிருந்து எட்டி உதைத்தான். ராகுல் கயலின் மேல் விழுந்து மேலும் அவளை காயப்படுத்தினான். வலி தாங்கமுடியாமல் கயல் அலறினாள்.

சத்தம் கேட்டு கூட்டம் கூடியது.ஒரு சிலர் மனிதாபிமானத்தோடு கயலுக்கு முதலுதவி செய்து ஹாஸ்பிடல் கூட்டிச் செல்ல முற்பட்டனர்.அத்தனை கூட்டம் கூடியும் அமுதன் ராகுலை அடிப்பதை நிறுத்தவில்லை.இருவரையும் பிரிக்க முயற்சித்தாலும் இருவரும் மல்லுக்கட்டிக் கொண்டனர்.அப்போது ராகுலின் நண்பர்கள் வந்து ராகுலை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். நடந்த சண்டையை நினைத்து மிகவும் வருத்தப்பட்டாள் ஜெனி. அவளால் தான் சண்டையேற்பட்டது.அதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டாள். மேலும் அமுதன் ராகுலை அடிக்கும் போது கயல் தடுக்க நினைத்து காயப்பட்டாள், ஆனால் தான் ராகுலுக்காக எந்த முயற்சியும் செய்யாமல் அங்கிருந்து கிளம்பி வந்ததை நினைத்து வருந்தினாள்.இந்த சம்பவம் திரும்ப திரும்ப அவளின் மனதை காயப்படுத்தியது. அதனால் ஊருக்கு செல்ல முடிவெடுத்து கிளம்பினாள்.

ராகுல் முகத்தில் வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டு கயலைக் காண ஹாஸ்பிடல் சென்றான். கயல் காயத்தின் வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் கழித்து டாக்டர் அவளுக்கு சிகிச்சையளித்து விட்டு சென்றார்.ராகுல் கயலிடம் சென்றான்.

"கயல்?ஏண்டி இப்டி பண்ண? என்னால தான நீ கஷ்டப்படுற,என்ன மன்னிச்சுரு கயல்" அழுகையுடன் கூறினான்.

"டேய், விடுடா, அப்படியெல்லாம் ஒன்னு இல்ல, என்னோட புருஷனா நினைக்குற உன்னைய அடிக்க வரப்ப நா எப்படி டா சும்மா இருக்க முடியும், அதுவுமில்லாம நானும் உங்கிட்ட அப்டி பேசியிருக்க கூடாது, அதனால தான இவ்ளோ பிரச்னையும்"

"சாரி கயல், என்ன சொல்றதுன்னு தெரியல"

"ஐ லவ் யூ பொண்டாட்டின்னு சொல்லு"

கயலைப் அதிர்ச்சியாகப் பார்த்தான்.அவள் நினைப்பதை தான் நினைக்கவில்லையென்று எப்படி கூறுவதெனத் தெரியாமல் திகைத்து நின்றான். அவனின் மனதைப் புரிந்துகொண்ட கயல் அவனிடம்

"தெரியும்டா, நீ சொல்லமாட்டேனு, உன்னைய கட்டாயப்படுத்த விரும்பல, பொலம்பிட்டு இருந்தாயா அதான் அப்டி சொல்லி உன்ன ஸ்டாப் பண்ணேன்" என கூறினாள். அவளை அணைப்பதா அவளிடமிருந்து விலகுவதா என குழம்பி போனான் ராகுல்.

"ராகுல்?..............."

கூப்பிட கயலைப் பார்த்தான்.

"கொஞ்சம் என்கிட்ட வாயேன்". சென்றான்.

"நீ எனக்காக தான அமுதன்கிட்ட சண்டை போட்ட?"

"ம்ம்ம், ஏன் உனக்கு தெரியாதா?"

"டேய், ஆமா இல்ல, இது மட்டும் தான் உன்னோட பதிலா இருக்கனும் ஓகே?"

"ஆமா கயல்"

"அப்ப என்மேல உனக்கு அக்கறை அதிகமாவே இருக்குதான?"

"ஆமா"

"உன்னோட மனசுல நா இருக்கேன்ல?"

தயக்கத்துடன் "ஆமா கயல், எதுக்கு இப்டி லூசு மாதிரி கேக்குற? "

"சும்மா தாண்டா, ஏன் கேட்டா சொல்ல மாட்டயா?"

"............................................"

"ரொம்ப சந்தோசமா இருக்குடா,யாரும் இப்படியொரு பர்த்டே ப்ரெசென்ட் தந்திருக்க மாட்டாங்க, பட் யூ டிடிட், நௌ ஐயம் தி லக்கியெஸ்ட் பெர்சன் இன் தி வேர்ல்ட்" தன்னைத்தானே புகழ்ந்து கொண்டாள்.

ராகுலின் கைகள் தானாக அவளை அணைக்க முற்பட்டது.அணைத்தான்.

"பனிப்பூவாய் அவள்

குறுக, பூவிதழாய்

விரிகிறது காதல்"

அந்த நேரம் ஜெனி கயலைப் பார்க்க வந்திருந்தாள். ராகுலின் மார்ர்புசூட்டில் குளிர்காய்ந்து கொண்டிருந்தாள் கயல்.அதைப் பார்த்த ஜெனியின் கண்கள் தானாக கண்ணீரில் மிதக்க ஆரம்பித்தன. அங்கிருந்து கிளம்பச் சொல்லி ஜெனியின் மனம் கூறியது.ஆனால் அவள் அவர்களை நெருங்கிச் சென்றாள்.

"கயல்?"நடுக்க குரலில் அழைத்தால் ஜெனி.

சட்டென இருவரும் விலகினார்கள்.ராகுல் ஜெனியைப் பார்த்து முறைத்துவிட்டு தன் மீது குத்திவிட்டு அங்கிருந்து சென்றான்.ஜெனி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.கன்னங்கள் தாண்டி கண்ணீர் அவளின் மேலாடையில் விழுந்தது.

"ஜெனி? என்ன ஆச்சு? எதுக்கு அழகுற?"கயலின் குரலில் பரிவு கலந்திருந்தது.

"இல்ல,என்னால தான எல்லாம்?"

"........................................."

"என்னய மன்னிச்சுக்கோ கயல். ராகுல் அடிச்சதும் எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியல, அதனால தான் அங்கிருந்து கிளம்பிட்டேன்"

"பரவாயில்ல ஜெனி, நீ மட்டும் அங்கிருந்து போகலாட்டி ராகுல் என்மேல வம்சருக்குற பாசம் எனக்கு தெரியாம போயிருக்கும், ஸோ தேங்க்ஸ்."

"ஓஹ்,ஓகே கெட்வெல் சூன், நா கிளம்புறேன், பை" கூறிவிட்டு கிளம்பினாள் ஜெனி. அடக்கமுடியாத அழுகை அவளின் கண்களில் நதியாய் ஓடியது. ராகுலின் மனதில் இன்னொரு பெண் நுழையும் வாய்ப்பை தானே ஏற்படுத்திக் கொடுத்ததை நினைத்து வருந்தினாள். அழுதுகொண்டே ஊருக்குக் கிளம்பினாள்.

"உணர்ந்த காதலை

மறுப்பதும், மறைப்பதும்

பெண்ணின்

குணங்களோ? "

ராகுல் இதற்கு முன் ஜெனியிடம் அப்படி நடந்துகொண்டதில்லை. அவளின் முகத்தைப் பார்க்க ஆசையுடன் காத்திருப்பான். ஆனால் இன்று அவளின் முகத்தை பார்க்கப் பிடிக்காமல் செல்கிறான். அவளின் மனதில் ஒளித்துவைத்திருந்த காதல் தன் திரையை விட்டு வெளியே எட்டிப் பார்த்தது.

"காற்றின் விரல்கள்

கண்ணீர் துடைக்க;

மனதை புண்ணாகிய

காதலின் பிரிவில்

காதலி"

ராகுலை காதலித்தாலும் அவனை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழலில் ஜெனி.காரணங்கள் இருந்தாலும் காதலை முறிக்கும் அளவிற்கு அவள் யோசித்திருக்க வேண்டியதில்லை.விதி யாரை விட்டது.காதல் கறையுமென நினைத்து கண்ணீரை வீணாக்கிக் கொண்டே வீட்டிற்குச் சென்றாள்.

"என்ன ஏதும் லீவ் விட்ருக்காங்களா? இன்னைக்கு வந்திருக்க?"அவளின் அம்மா கேட்டதை காதில் வாங்காமல் தன் அறைக்குச் சென்று படுத்துகொண்டாள். சோகமோ? களைப்போ? அப்படியே தன்னையறியாது தூங்கிவிட்டாள். மகளின் செய்கைகளை பார்த்து கொஞ்சம் பதறிப்போன அவளின் தாய் அறைக்குள் சென்று அவளின் அருகில் அமர்ந்தார்.

தன் மகளின் அழகிய முகத்தில் லேசான கையின் தடத்தைப் பார்த்தார்.கண்கள் லேசாக வீங்கியிருப்பதையும் பார்த்தார்.அதனால் அவரையறியாமல் அவரின் கண்கள் வேதனையில் கொப்பளித்தது.ஜெனி எந்திருக்கும் வரை அவளின் காயங்களுக்கான கரணம் தெரியப்போவதில்லையென நினைத்து வேதனையுடன் அங்கிருந்து கிளம்பி சென்றார். ஜெனியை அந்த நிலையில் பார்த்த அவரின் மூளை வேலைசெய்ய மறுத்தது.

ஒரு சில மணிநேரங்கள் ஓடின.ஜெனியின் அப்பா வீட்டிற்கு வந்தார்.

"ஏய்? எங்க உன்னோட பொண்ணு?, காலேஜ்ல இருந்து வந்துடலாமே?" அந்த குரலின் அழுத்தத்தில் பயந்து போனார் ஜெனியின் அம்மா.

"ஆமாங்க, உங்களுக்கு எப்படி...............?"

"ஏண்டி புள்ள வந்தா போன் பண்ணி சொல்ல மாட்டயா? ஏதாச்சும் அவளுக்கு பிடிச்சதை வாங்கிட்டு வந்திருப்பேன்ல?,அந்த பஸ்ஸ்டாண்ட் கடைக்காரன் சொல்லித்தான் எனக்கு தெரியுது"

"அவளுக்கு உடம்பு சரியில்லைன்னு நெனைக்குறேங்க, வந்தோன ரூம்க்கு போய் தூங்கிட்டா, அதா ஏதும் சொல்லல"

"என்ன ஆச்சு?"

"தெரியல, அவ எதுவும் என்கிட்ட சொல்லல"

"போடி இவளே, புள்ளைக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்ற,என்ன எதுன்னு கேக்க மாட்டயா?"

"உங்களுக்கு சொன்னா புரியாது,இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் போங்க, சாயங்காலம் நல்ல ஆயிடுவா" ஏதோ கூறி சமாளித்தார்.

"ஓஹ் அப்டியா?, சரி வீட்டுல பழம் ஏதாச்சும் இருந்தா வெட்டிக்குடு, நா கடைக்கு போயிட்டு வரேன்" எனக் கூறி கிளம்பினார். சென்ற சில மணிநேரங்களில் ஆரஞ்சு, தர்பூசணி மற்றும் அவளுக்கு பிடித்த சாக்லேட் என ஒரு பெரியப்பட்டியல் பொருட்களை வாங்கிவந்தார்.

"எதுக்கு இப்டி இதெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க?"கண்டிப்புடன் கேட்டார் ஜெனியின் தாய்.

"இல்லடி,இந்த மாதிரி நேரத்துல உடம்பு சூடாகுமாம், அதனால தான்ஆரஞ்சு, தர்பூசணி வாங்கிட்டு வந்தேன்" வெகுளியாக பதில் கூறினார்.

"சரி, அப்ப இவ்ளோ சாக்லேட் எதுக்கு? கடை போடப்போறீங்களா?"

"உனக்கு என்னடி தெரியும், சாக்லேட் சாப்ட்டா சந்தோசமா இருக்கலாம்னு செய்தில போட்டாங்கடி, அதனால தான் வாங்கிட்டு வந்தேன்"

"நல்ல மனுஷன் போங்க நீங்க, நானும் எத்தனையோ மாசம் கஷ்ட பட்ருக்கேன் என்மேல எந்த அக்கறையும் இல்ல, உங்க பொண்ணுக்கு மட்டும் இவ்ளோ கவனிப்பா, அது சரி, உங்கள போய் லவ் பண்னேன்ல என்ன சொல்லணும்"

"போடி அழுக்காத, போயி அவளை எழுப்பி இதெல்லாம் குடு"

இவர்களின் பேச்சு ஜெனியின் தூக்கத்தை கலைத்தது.கன்னத்தில் கைத்தடமும், கண்களில் வீக்கமும் மறைந்திருந்தன. அவள் எழுந்து வெளியே வந்தாள். தூக்கத்தில் அவளின் உடைவிலகி அவளின் உள்ளாடையை காண்பித்தது.

ஜெனியின் அப்பா "ஏன்டா செல்லம் துணிய சரிபண்ணிட்டு வெளிய வரணும் சரியா?,இங்க வேற யாராச்சும் இருந்தா பிரச்னை நமக்குத்தான்" கண்டிப்பில்லை, பெண்ணைப் பெற்றதால் பயத்தில் வந்த வார்த்தைகள் தான் அவை.

அதை கவனித்த ஜெனி தன் தலையில் அடித்துக்கொண்டு" சாரி பா கவனிக்கல" என்றாள்.

"சரி,இந்தா இதெல்லாம் உனக்குத்தான் சாப்பிடு போ, உங்கம்மாக்கு குடுத்துடாத" என்று கையில் வைத்திருந்த பையை நீட்டினார்.

"ஐயோ! இவ்ளோ சாப்ட்டா நானும் அம்மா மாதிரி குண்டாயிடுவேனே?"

"ஏய், என்னடி உங்கப்பனோட சேந்துட்டு நக்கல் பண்றயா?,அந்த மனுஷன் வெளிய போனதும் என்கிட்டதான வருவ அப்ப வா வாயில வத்தபொடிய அள்ளி போடுறேன்" பொய்யான கோபத்தில் திட்டினார் அவளை. முகத்தில் மறைந்த சந்தோசம் மீண்டும் வந்தது. அதன்பின் மிக சகஜமாக உரையாடினார்கள் மூவரும். சிறிதுநேரம் கழித்து ஜெனியின் அப்பா வேலைக்கு கிளம்பினார்.

ஜெனியும்,அவளின் அம்மாவும் மட்டும் தான் வீட்டில் இருக்கின்றனர்.

"ஜெனி? என்ன பிரச்னை உனக்கு?"

"எனக்கென்ன? நா நல்லாத்தானே இருக்கேன்"

"புத்திசாலின்னு நெனப்பா? எல்லாத்தையும் கவனிச்சுட்டு தான் இருக்கேன், ஏதோ தப்பு பண்ற கண்டுபிடிக்க முடியாதுனு நினைக்காத"

"அப்டிலாம் இல்லமா, ஏன் இப்டியெல்லாம் யோசிக்குற?"

"கன்னத்துல என்னடி கைத்தடம்?"

"அதுவா......................................"

"ஆமா"

"விடுமா சும்மா தான், அதெல்லாம் ஒன்னு இல்ல" சமாளிக்க முயன்றாள் ஜெனி.

".........................................." மௌனமாக முறைத்தார்.

"அம்மா, நானும் கண்மணியும் ஒரு சின்ன போட்டி வச்சோம், அதுல தோத்துட்டா 10 அறை வாங்கணும். நா தோத்துபோய்ட்டேன், அதனால தான் கன்னத்துல தடம்"

"அவளுக்கு கூப்டு"

"ஏம்மா இப்டி பண்ற?,விடுமா"

"கூப்பிடுடி"

வேறுவழியில்லாமல் தன் தோழி கண்மணிக்கு கால் செய்தாள்.இவளுக்கு நடந்த அணைத்து சம்பவங்களும் அவளுக்கு தெரியும் என்பதால் சமாளித்துக் கொண்டாள் கண்மணி.அவளையும் கண்டித்துவிட்டு தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார் ஜெனியின் தாய். ஜெனி தன் அறைக்குள் சென்று யோசிக்கத்தொடங்கினாள். தான் ராகுலை பிரிய முடிவெடுத்த அந்த நொடிகளைப் பற்றி.

ஜெனியும்,கண்மணியும் உடலும்,ஆடையும் போன்றவர்கள்.எப்போதும் ஒன்றாகத்தான் இருப்பார்கள். ராகுல் வந்தபின் ஜெனி கண்மணியுடனிருக்கும் நேரம் குறைந்தது.இதனை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஜெனியிடம் சண்டையிட்டு அவனிடம் பழக்கவேண்டாம் என வற்புறுத்தினாள்.ஜெனிக்கு கண்மணியா? ராகுலா? என்று பார்க்கும் பொழுது கண்மணிதான் முக்கியமாக பட்டாள். அதனால் ராகுலை விட்டு தற்காலிகமாக விலக நினைத்து விலகினாள். கொஞ்சம் நாட்கள் கழித்து கண்மையிடம் பேசி சமாதான படுத்திவிட்டு ராகுலிடம் பேசலாமென எண்ணினாள். ஆனால் அதற்குள் இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டது. இதையெல்லாம் நினைத்துக்கொண்டே அன்றையபொழுது கழிந்தது.

மறுநாள் விடிந்தும் தூங்கிக்கொண்டிருந்த ஜெனியின் போன் அவளை எழுப்ப முயற்சித்தது.முடியவில்லை. அவளின் தாய் அவளின் போனை எடுத்து பேசினார்.

"ஹலோ?" ஒரு பையனின் குரல்.

"ஜெனி?"

"நீ யாருப்பா?நா அவளோட அம்மா பேசுறேன்"

"அம்மா? எப்படி இருக்கேங்க மா?, நா ஜெனியோட கிளாஸ்மெட் ராஜா, இன்னைக்கு கிளாசுக்கு ஜெனி வரலையா அதான் கால் பண்ணி கேட்கலாம்னு"

"அப்டியப்பா, அவளுக்கு உடம்பு சரியில்ல, கொஞ்சம் லீவு சொல்லிருப்பா"

"சரிம்மா, போனை வைக்குறேம்மா"

"...................."

தூங்கிக்கொண்டிருந்த ஜெனியை எழுப்பி போன் வந்ததைப் பற்றி கூறினார்.ஜெனிக்கு குழப்பம். ராஜா ராகுலின் நண்பன், தனக்கு ஏன் கால் செய்ய வேண்டும். யோசித்துவிட்டு மீண்டும் அவனுக்கு அழைத்தாள். அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியானாள்.

ராஜா கூறியதை கேட்டதிலிருந்து ஜெனியின் முகத்தில் சோகம் படற ஆரம்பித்தது.திரும்ப காலேஜ்க்கு கிளம்ப முடிவெடுத்தாள். வீட்டில் ஏதோ கூறி சமாளித்துவிட்டு கிளம்பினாள்.

அந்த சமயத்தில் ராகுலும் அமுதனும் hod ரூமின் வாசலில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் சண்டையிட்ட செய்தி கல்லூரி முழுவதும் பரவியது.அதற்கான விசாரணைக்காக தான் அவர்கள் நின்றுகொண்டிருந்தனர். கயலின் தந்தை கோபமாக வந்தார்.வந்தவுடன் அவர்களிருவரையும் சாராமரியாகத் தாக்கினார். அலுவலக ஊழியர்களின் தலையீட்டால் இருவரும் தப்பித்தனர்.

"சார். என்ன சார் இப்டி அடிக்குறேங்க விசாரிக்கத்தானே உங்கள வரச் சொன்னோம்" கண்டித்துக்கொண்டார் hod.

"சார் நேத்து எம்பொண்ணுக்கு பொறந்தநாள் சார், அவளைப் போய் அடிச்சு,ச்சே!வர கோவத்துக்கு இவனுங்க ரெண்டுபேரையும் கொல்லப்போறேன் பாருங்க" ஆதங்கத்தில் கத்தினார்.

"சார், பசங்க சண்டை போடறப்ப உங்க பொண்ணு எதுக்கு சார் நடுல போச்சு, அது அவளோட தப்புதானே?" லாஜிக்காக கேட்டார் hod.

".............................."கயலின் தந்தையிடம் பதிலில்லை.

"கொஞ்சம் பொறுமையா இருங்க சார், விசாரிப்போம்" கயலின் தந்தையை சமாதானப் படுத்தினார்.

பின் ராகுலையும் அமுதனையும் பார்த்து, "உங்க வீட்டுக்கு சொல்லிடீங்களா இன்னு யாரும் வரல?" என கேட்டார்.

"வந்துட்டு இருகாங்க சார்" இருவரின் குரலும் சேர்ந்து வந்தது.

"படிக்க சொன்னா பொறுக்கி மாதிரி சண்டை போட்டு ஒரு பொண்ணோட கைய உடைச்சுட்டேங்க, உங்கள சொல்லி தப்பில்ல,பெத்தவங்கள சொல்லணும்"

திட்டிக்கொண்டிருக்கும் போதே ராகுலின் தந்தை வந்தார்.

"வாங்க சார், என் பையன பத்துக்கோங்கன்னு சொல்லிவிட்டுட்டு போனேங்க, போற போக்க பாத்தா அவன்கிட்ட இருந்ததா மத்தவங்கள பாத்துக்கணும் போல, வேற வழியே இல்ல பிரச்னை காலேஜ்ல எல்லாத்துக்கும் தெரிஞ்சுபோச்சு, சஸ்பெண்ட் பண்ண சொல்லி கமிட்டில சொல்லிருக்காங்க, என்னால எதுவும் செய்ய முடியாது, கூட்டிட்டு போயி புத்திசொல்லி அனுப்பிவைங்க, அப்டியே ஹாஸ்டல்ல vacate பன்னிருங்க, இனிமே ஹாஸ்டல் குடுக்க முடியாதுனு சொல்லிட்டாங்க" hod கூறி முடிப்பதுற்குள் ராகுல் அழுக ஆரம்பித்து விட்டான்.

"சார் ப்ளீஸ் சார், இனிமே இப்டி நடக்காம பாத்துக்கிறேன் சார், ப்ளீஸ் சார்" என கெஞ்சினான். ஒரு கட்டத்திற்கு மேல் அவரின் காலில் விழுந்து கெஞ்சினான். பலனில்லை. அதே நிலைமை தான் அமுதனுக்கும் ஆனால் அவன் அதற்கு கவலைப் பட்டதாக தெரியவில்லை. ராகுலின் தந்தை அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.அவர்கள் கிளம்பும் நேரத்தில் தான் ஜெனி அங்கு வந்தாள். ராகுலைப் பார்த்ததும் அவனிடம் பேச வந்தாள்.

"ராகுல்? என்ன ஆச்சு?"கேட்கும் போது அவளின் கண்களும் கண்ணீர்விட்டன.

ராகுல் அவளைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு "தயவுசெஞ்சு எதுவும் பேசாத, போதும்" எனக் கூறிவிட்டு நகர்ந்தான்.

அவன் கூறியதைக் கேட்ட ஜெனி அங்கயே உறைந்து நின்றாள். அவளின் கண்ணீர் மட்டும் உறையாமல் வழிந்து கொண்டிருந்தது. ராகுலின் தந்தைக்கு ஆச்சரியம் அவன் ஜெனியிடம் இப்படி பேசியதைப் பார்த்து.ராகுல் தன் தந்தையிடம் எதையும் மறைக்காமல் கூறிவிடுவான். எனவே அவனின் இந்த நிலைக்கான காரணத்தையும் அவர் அறிவார். ஆனால் அவனிடம் வருத்தமிருந்தாலும் கோபப்பட்டதில்லை. தன் தந்தையை எங்கேயோ பார்த்துவிட்டு தான் வாரணம் ஆயிரம் படத்தை கௌதம்வாசுதேவ் எடுத்ததாக,ராகுல் அடிக்கடிக் கூறுவான், அந்த படத்தில் காண்பித்த அப்பாவை போல் தன் அப்பாவும் நடந்துகொள்வதால் அப்டி கூறுவான்.இந்த பிரச்சனையால் இருவரின் உறவுகுள்ளும் பாதிப்பு வராதென ராகுலின் தந்தை நினைத்தார். ஆனால் ஏமாற்றம் தான்.

ஒரு வழியாக வீட்டிற்கு வந்தனர். வழக்கத்திற்கு மாறாக அவனின் வருகை வீட்டிலிருந்த யாருக்கும் பிடிக்கவில்லை. அவன் முகத்தில் முழிப்பதையே பாவமாக நினைத்தனர். வீட்டில் சிரித்தே பழகிய ராகுல் இம்முறை அழுவதையே வாடிக்கையாக்கிக் கொண்டான். நாட்கள் கரைந்தன. சஸ்பெண்ட் காலம் முடிந்து மீண்டும் கல்லூரிக்கு சென்றான்.மனதில் சிறிது குற்றஉணர்ச்சியுடன் சென்றான். உண்மையைக் கூறவேண்டுமென்றால் அவனுக்கு மீண்டும் கல்லூரிக்கு செல்ல விருப்பமேயில்லை. அப்பாவின் வற்புறுத்தலால் தான் மீண்டும் சென்றான்.எப்போதும் ஆர்வமாக கல்லூரிக்கு கிளம்பும் அவன் அன்று வேண்ட வெறுப்பாக சென்றான்.

அங்கு கயலும், ஜெனியும் அவனின் வருகைக்காக காத்திருந்தனர்.சஸ்பெண்ட் ஆனதிலுருந்து இருவரிடமும் பேசுவதை நிறுத்தி விட்டான். எனவே இரண்டு கன்னிகளும் அவனின் வருகைக்காக காத்திருந்தனர். இருவரின் மனத்திலும் அவனை பார்க்காமலிருந்த நாட்களில் அவன் மீதிருந்த காதல் அதிகமாகியது.

கிளாஸ்க்குள் நுழைந்த ராகுலை நோக்கி இருவரும் வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டாலும் ராகுலிடம் பேசுவதை நினைவில் கொண்டு அவனருகே சென்றனர்.

"எதுக்கு என்கிட்ட இவ்ளோ நாள் பேசல?" ஒரு சேர இருவரும் கேட்டுவிட்டு ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டனர்.

"சாரி, எனக்கு பேசத் தோனல" சுருக்கமாக எங்கேயோ பார்த்து கூறினான்.

"முகத்த பாத்து பேச மாட்டயடா?" ஜெனி கேட்டாள்.

"முகத்த பாத்து பேசி என்ன ஆகபோது?,உங்களுக்கு பதில் கெடச்சா போதாதா?"

"ஏன்டா இப்டி பேசுற? அப்டி அவ என்ன கேட்டுட்டா? முகத்த பாத்து பேசுனு தான சொன்னா" கயல் கேட்டாள்.

"என்னய எங்க வீட்டுலகூட யாரும் டா போட்டு பேசமாட்டாங்க, நீங்க பேசுறீங்க, அப்டினா உங்கள எந்த எடத்துல வச்சுருக்கேன்னு புரிஞ்சுக்கோங்க,ஆனா இப்ப உங்ககிட்ட பேசுற நிலைமையில நா இல்ல, ப்ளீஸ் என்ன தனியா விடுங்க" விரக்தியில் பேசிவிட்டு நகர்ந்தான்.

இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டனர். ராகுல் தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தான்.சில நிமிடங்கள் கழித்து கண்மணி அவனருகே சென்றாள்.ஜெனிக்கும் கயலுக்கும் குழப்பம்.பார்த்துக்கொண்டே இருந்தனர்.அவள் ஏதோ கூற ராகுலின் உதடுகள் சிரிப்பை உதிர்ந்தன. சோகமாக வந்த ராகுலை சிரிக்க வைத்துவிட்டு தன் இடத்திற்கு வந்து அமர்ந்தாள் கண்மணி. அவளைப் பார்கும் பொழுது ஜெனிக்கும், கயலுக்கும் கோபமும், பொறாமையும் ஒருசேர வந்தது.

அன்று இரவு ஜெனி ராகுலுக்கு கால் செய்தாள். ராகுல் கட் செய்தான்.சில பல முயற்சிக்குப் பின் ஜெனிக்கு ஒரு எண்ணம் தோன்றியது. கண்மணியிடம் சென்று அவளின் போனை வாங்கி ராகுலை அழைத்தாள். அடுத்த நொடியே அட்டென்ட் செய்தான் ராகுல். ஜெனிக்கு அழுகை வந்தது.

"நா ஜெனி பேசுறேன்"

"தெரியுது எதுக்கு கால் பண்ண"

"ஏன் பண்ணகூடாதா?"

"எனக்கு வேல இருக்கு சட்டுனு மேட்டர சொல்லு இல்லாட்டி கட் பண்ணிருவேன்"

"என்னோட நம்பர்ல கூப்பிட்டா எடுக்கல? இப்ப இவளோடநம்பர்ல கூப்பிட்டாஉடனே எடுக்குற?"

"நாந்தான் சொல்றேன்ல வேலையா இருக்கேனு"

"இப்டிலா பண்ணாத ராகுல்,ரொம்ப கஷ்டமா இருக்குடா, நான் பண்ணது தப்புதான் அதுக்காக பேசாம இருக்காத ப்ளீஸ்"

"நீ என்ன பைத்தியமா? ஒளறிட்டு இருக்க, போன வை நான் அப்புறம் பேசுறேன்." எனக் கூறி இணைப்பைத் துண்டித்தான்.

ஜெனி வருத்தம் தாங்காமல் அழுக ஆரம்பித்தாள்.அவள் அழுவதைப் பார்த்த கண்மணி அவளை சமாதனப் படுத்த முயற்சித்தாள்.

அவளிடம் ஜெனி "உனக்கு பிடிக்கலைனு தான அவன்கிட்ட பேசாம இருந்தேன், இப்ப நீ எதுக்கு அவன்கிட்ட பேசுற?, இப்ப கூட என்னோட நம்பர பாத்தா கட் பன்றான், உன் நம்பர்ல கூப்பிட்டா எடுத்து பேசுறான், என்னடி நடக்குது உங்களுக்குள்ள? "

"பையித்தியம் மாதிரி பேசாத, ஏற்கனவே ஒரு தடவ குடிச்சுட்டு ரோட்ல விழுந்து கிடந்தான், இப்ப அப்டி எதுவும் பன்னிரக்கூடாதுல,அதனால தான் அவனோட பேசுனேன் சரியா?"

"உனக்கென்ன அவன்மேல புதுசா அக்கறை?"

"புரிஞ்சுக்கோ,நீ நெனைக்குற மாதிரியெல்லாம் ஒன்னு இல்ல"

"உன்னால அவன்கிட்ட நா கெட்டபேர் வாங்கிட்டேன், நீ அவகிட்ட நல்லவளா நடந்துக்குறல, உன்ன நெனச்சாலே கூசுதுடி"

பளாரென்று அறைந்தாள் கண்மணி."வாய்க்கு வந்தபடி பேசாத, யோசிச்சுட்டு பேசு" எனக் கூறிச் சென்றாள் கண்மணி.

"பகிர்ந்துகொள்ள

காதலென்ன தின்பண்டமா? "

கண்மணி ஜெனியை அறைந்து விட்டு அறைக்கு சென்றாள். ஜெனியை கோபமாக அறைந்தாலும் அவள் மீது சிறிதும் கோபம் இல்லை. கோபம் முழுவதும் ராகுலின் மீது வந்தது. தன் அலைபேசியிலிருந்து அழைத்ததும் பேசியது அவளை குற்றவாளி ஆக்கியதால். மறுநாள் அவனிடமே சென்று கேட்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டே தூங்கிப்போனாள்.

மறுநாள் ராகுலின் இருப்பிடத்தை பார்த்தாள், அவன் வரவில்லை. எப்போதும் சீக்கிரமாகவே வருபவனை இன்று காணவில்லை, தனியாக பேச நினைத்து தான் வந்தது வீணாகி போய்விடுமோ என்று யோசித்தாள். அதுமட்டுமின்றி நேற்றிலிருந்து ஜெனியிடம் பேசாததும் அவளை குழப்பின. நேரம் கடந்தது அவன் வரவில்லை. ஏமாற்றத்துடன் தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தாள்.

காற்று ஜன்னல் கம்பிகளுடன் சண்டையிட்டு அவளின் மேனிதொடுவதற்கு விரைந்தன. கன்னத்தில் சரிந்திருந்த அவளின் கூந்தலை கொத்தாக பிடித்து மேலே இழுத்தன. தோளில் போட்டிருந்த துப்பட்டா அவளின் உடலை இறுக்கமாக பற்றிக்கொண்டது.காற்றுடன் சேர்ந்து தூறலும் அவளை தொடுவதற்கு எத்தனித்து உள்ளே புகுந்து அவளை தொட கைகள் நீட்டின. சடாரென ஜன்னல் கதவுகள் சாரலின் விரல்களுக்கு தடை போட்டு வெளியேற்றின. ஜன்னலை மூடியது யார் என பார்த்தாள் கண்மணி.

சில்லென்ற காற்று தடைபட்டு அவளின் மேனி சூடான மின்விசிறியின் காற்றில் நோவு பட்டது. அதை கண்டுகொள்ளும் எண்ணம் அவளுக்கு இல்லையென்பது அவள் ராகுலை முறைத்து பார்ப்பதிலிருந்து நமக்கு தெரிகிறது. உங்கள் யூகம் சரிதான். ஜன்னலை பூட்டியது ராகுல் தான். அவனை கோபமாக திட்டவேண்டும் என்று நினைத்து வந்த கண்மணி பேசமுடியாமல் அவனை முறைத்தாள்.

"சிறகடித்து

பறக்க துடிக்கும்

கண்களில், தூசி

பட்ட காயம் சிவப்பேற்றியதோ? "

மெல்லிய குரலில் ராகுல் தன்னை பார்த்து கேட்பது விளங்காமல் சிரித்தாள் கண்மணி.

"பனி பொழிந்து

என் தோட்ட பூக்களெல்லாம்

கருகி உதிர, உன் புன்னகைப்பூ

மட்டும் முத்துகள் காட்டி

மலர்கிறதே? "

நடப்பது கனவுபோல தோன்றியது கண்மணிக்கு. தன் கையை கிள்ளி பார்த்து கொண்டாள்.

"என்ன கண்மணி? யாருக்கோ காத்துகிட்டு இருக்க போல? "

"உனக்கு தெரியாதோ? "

"எனக்கு எப்படி தெரியும்?"

"ரொம்ப புத்திசாலிதான்.நேத்து நீ பண்ண வேலைக்கு உன்னோட பல்ல பேத்து கைல கொடுக்கலாம்னு உன்னத்தான் எதிர்பாத்துட்டு இருக்கேன்"

"........................................................................"

"என்ன பயமா இருக்கா?கவலைப்படாத உன்ன பாத்தோன கோபம் போச்சு, இனிமே அப்டி பண்ணாத, ஜெனி தப்பா எடுத்துக்க போறா? "

"சரி"

"சரினா? "

"போன்ல பேச வேணான்னு சொல்றியா? இல்ல பேசவே வேணான்னு சொல்றியா? "

"லூசா நீ? நா என்ன பேசுறேன் நீ என்ன பேசுற? "

"நம்ம ரெண்டு பேரும் பேசலான உனக்கு எந்த நஷ்டமும் இல்லையே? "

".............................................."

"என்ன மன்னிச்சுக்கோ கண்மணி,நேத்தே இதை உங்கிட்ட சொல்லணும்னு தா கால் அட்டென்ட் பண்ணேன். ஆனா அவ பேசுனா, ஏமாந்துட்டேன். ரொம்ப அனுபவிச்சுட்டேன் கண்மணி, அதனால இதெல்லாம் எனக்கு வேணாம். ஸோ ஹோப் யூ அண்டர்ஸ்டேன்ட் ."

வெடு வெடுவென கூறிவிட்டு அவளின் பதிலுக்கு காத்திராமல் சென்றான்.அவனிடம் பேச வார்த்தை வராத காரணத்தால் தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.அவன் முகத்தில் என்ன தெரிந்ததென்று லயித்து பார்த்துக் கொண்டிருக்கின்றாள் என்பது கடவுளுக்கு மட்டும் தெரிந்த விஷயம்.அவள் அவனைப் பார்த்து கொண்டிருப்பதை நம்மைத் தவிர யாரோ பார்பது போல இருக்கிறதே, அட கயல்விழி.

என்னவொரு குரோதம் அவள் பார்வையில், கோபத் தனலின் வெப்பம் தாங்காமல் கண்களில் நீர் கொப்பளித்து குளிர்காற்றில் இதமாக கரைந்து போனது. கண்மணி விட்ட பாடில்லை, தொடர்ந்து அவனை பார்த்து கொண்டும், நடு நடுவே திட்டிக் கொண்டும் ஜன்னலை திறக்க எத்தனித்தாள். பார்வை அவன் மீதிருந்ததால் அவளுக்கு அருகில் வந்து நின்ற கயலை கவனிக்கவில்லை. ஜன்னலை திறக்க கை நீட்டியபோது அவளின் பஞ்சுப்பொதி இடையில் மோதி நின்றது.

சட்டென நினைவிற்கு திரும்பி கயலை பார்த்தாள், கன்னத்தை நனைத்த கண்ணீர் அவளின் தாடையிலிருந்து சொட்டி கண்மணியின் கையில் விழுந்தது. பிரச்னையை யூகித்துக் கொண்டாள்.

"என்னடி அழுதுட்டு இருக்க?,யாராச்சும் பாத்து தொலைக்க போறாங்க" என கூறிக்கொண்டே தன் மல்லிகை மணம் வீசும் கைக்குட்டையை வைத்து அவளின் கண்ணீரை துடைத்தாள்.

"கண்ணு, சாரிடி, உன்ன தீட்டலாம்னு தா வந்தேன், ஆனா....."சொல்லி முடிக்கும் முன் மீண்டும் அழுதாள்.

"மொதல்ல கண்ணை தொட, நம்ம வெளிய போய் பேசிக்கலாம் வா"

இருவரும் வெளியே செல்ல எத்தனித்தனர், லேசான தூறல் மழையாக மாறி அவர்களை மீண்டும் உள்ளே துரத்தியது.ஜன்னலை நோக்கி இருவரும் அமர்ந்து மழையை வேடிக்கை பார்க்க தொடங்கினர். ராகுல் அவர்களை திருடனைப் போல் அடிக்கடி திரும்பி பார்த்து கொண்டிருந்தான். அவன் பார்த்த போதெல்லாம் கயலின் விம்மலும், கண்மணியின் ஆறுதல் செய்கைகளும் தென்பட்டன. பத்து நிமிடங்களுக்கு பின் மழைக் குயிலாய் நம் நாயகி ஜெனியும் வந்து சேர்ந்தாள்.

நேற்றைவிட இன்று ஏதோ வித்யாசமாக தெரிகிறதே? .ஆம் கண்கள் வீங்கி சிவந்து போய் உள்ளன. உதட்டின் ஓரத்தில் லேசாக ரத்தக்கட்டு தெரிகிறது. சோகமா? கோபமா? என விளங்காத முகத்தோடு உள்ளே நுழைந்தாள்.நேராக வந்து தன் தோழி கண்மணியைக் கட்டிக்கொண்டாள். கயல் விலகி தன் இருகைக்குச் சென்றாள்.

"கோபமா கண்மணி என்மேல? எதுவும் சொல்லாம கிளம்பி வந்துட்ட? "

"இல்லடி,உன்னோட விஷயமா அவன்கிட்ட பேசலாம்னு வந்தேன்,உங்கிட்ட சொன்னா தடுப்ப, அதனால தான், சாரிடி. "

"யார்கிட்டயும் எதுவும் கேக்க வேணாம் விடு, இனிமே அவன பத்தி பேசுனா பாரு, ரொம்ப தான் பன்றான், என்னாலதான் கஷ்ட பாட்டானு பேச போனா? விடு, எனக்கென்ன குடி முழுகி போக போகுதா? " இந்த வார்த்தைகள் கயலுக்கு சந்தோஷத்தையும் ராகுலுக்கு எரிச்சலையும் தந்தன. தன் கோபம் முழுவதையும் எதிரே இருந்த மேஜையின் மீது காண்பித்தான். மூவரும் ராகுலை பார்த்தனர்.கிறுக்கனை போல மேஜையையும் தன்னையும் மாற்றி மாற்றி குத்தி கொண்டான்.

ரெண்டு மூன்று முறை ஏதோ கத்திகொண்டே தலையை மேஜையில் மோதினான், மூன்று பேரும் சட்டென அவனை நெருங்கினர். ஆளுக்கொரு திசையில் நின்று அவன் செய்வதை நிறுத்த கைகளை நீட்டினர். ராகுல் அவர்கள் நெருங்குவதை பார்த்து அமைதியானான். ஏளனமாக அவர்களைப் பார்த்து "தெரியாதவனுக்கு சொல்லி குடுக்கலாம், தெரியாத மாதிரி நடிக்குற உங்களுக்கு எப்படி சொல்லி குடுக்க? ஜெனி நேத்து நைட் கண்மணி கிட்ட ரகசியம் பேசறதுக்கு ட்ரை பண்ணல, இனிமே பேசாதனு சொல்லத்தான் பேசுனேன் சரியா?கயல் நீ கண்மணிகிட்ட ஏதோ பேசுனையே ஹஸ்கி வாய்ஸ்ல, உண்மையா இருந்தா யாருக்கும் பிடிக்காம போயிருது இனிமே அப்படி இருக்க கூடாதுனு, உன்னோட விருப்பம் அது, ஆனா உண்மையாவே நீ ஆசைப்பட்டா பொறுமையா இருக்கனும் சரியா"

கண் கொட்டாமல் மூவரும் பார்த்தனர். மீண்டும் ஆரம்பித்தான்.

"அன்னைக்கு உன்னோட பர்த்டேல உங்கிட்ட சொன்னதெல்லாம் பொய் இல்ல, நெஜமாவே உன்னைய ரொம்ப பிடிக்கும்,பட் இப்ப மனசு சரி இல்லை, கொஞ்சம் எனக்கு டைம் குடு ப்ளீஸ்" கையெடுத்து கும்பிட்டு கேட்டான். ஜெனிக்கு அங்கு நிற்பதற்கே உடல் நடுங்கியது, முட்டிக்கொண்டு நின்ற கண்ணீர் பீறிட்டு வெளியேறியது. அங்கிருந்து கிளம்பி அறைக்கு சென்றாள். மழைத்துளிகள் ஒவ்வொன்றும் ஊசிகளாக குத்துவது போன்ற உணர்வு அவளுக்கேற்பட்டது. அதன் காரணமும் நமக்கு தெரியும். தன் ஆசை காதலன் தன் கண்முன்னே வேறொருத்தியை பிடித்திருப்பதாக சொல்வதை எந்த பெண்ணால் தான் தாங்கிக் கொள்ள முடியும்.

"கடந்துபோக வேண்டிய காதல்

கசந்து போனதேனோ? "

"அய்யர் வரும் வரை அம்மாவாசை காத்திராது" இந்த பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே. காலமும் நேரமும் யாருக்கும் காத்திராது. அதுபோல காலத்தின் வேகத்தில் நம் தோழர்களின் வாழ்க்கையில் நடந்த நமக்கு தேவையற்ற சம்பவங்களை கடக்க வேண்டியதாயிற்று. நம் பதின்ம வயது தோழர்களின் வயதுகள் இருபதை தொட ஆரம்பித்துவிட்டது. யோசனையும் செயல்களும் முதிர்ச்சிபெற துவங்கின. உடலிலும் முகத்திலும் வனப்பு கூடியது. கயலின் பார்வையில் ஏதோ கோளாறின் காரணமாக கண்ணாடி அணிந்திருந்தாள். அது அவளின் அழகில் சில கிலோகிராம் அதிகப்படுத்தியது. அவளின் உதடுகளை புன்னகை முத்தமிட்டு கொண்டிருந்தது.இவ்வளவு சந்தோசமாக கயலை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. யாரோ ஒருவன் கயலின் அருகில் அமர்ந்து சிரித்து சிரித்து பேசுகிறானே.யாராக இருக்கும்?,அட நம் ராஜா!

காலத்தின் விளையாட்டே ஒரு புதிர்தான்.கயல் சந்தோசமாக இருக்கிறாள் அந்த வரையில் நமக்கு சந்தோசம்.மற்ற நண்பர்களை பார்த்துவிட்டு இவர்களின் பின்கதையை கூறுகிறேன்.இதோ கண்மணி வருகிறாள். முன்பு பார்த்ததைவிட உடல் பூசினாற்போல உள்ளது. மேனியில் பளபளப்பு கூடி பிரகாசமாக உள்ளது.தலையை வாரியிருக்கும் அழகை பார்த்தால் மேற்கத்திய நாகரிகத்திற்கு பழகிவிட்டது போல தெரிகிறது, அட கடவுளே கூந்தலின் நீளம் முன்பைவிட சிறியதாக இருக்கிறதே,மேற்கத்தியம்.

அவள் கண்களின் வசீகரம் பட்டால் அவளுக்காக நேர்ந்துவிட்ட ஆடுகளைப்போல நாமும் மாறிவிடுவோம் போல. பார்வையை வேறெங்காவது திருப்புவோம். குப்பைக்கோழிகளுக்கு நடுவே தோகை மயிலாய் பட்டத்திலவரசி போல வண்ணமயாக தெரிவது சாட்ஷாத் நாயகி ஜெனியே தான்.

"வாடைக்காற்று பட்டு

வயதுக்கு வந்த பூக்கள் ,

பூக்கள் கொண்டு தங்கம்

பூசி தோல் செய்தாரோ? "

என்ற பாடலுக்கு ஏற்றார்ப்போல தெரிகிறாள். அவளின் குட்டையான உருவத்தில் எதனை வைத்து பிரம்மன் படைத்தானோ? அழகு புதையலையே மறைத்து வைத்திருக்கிறாள் போல. குண்டு குண்டு விரல்களை பற்றி கூறுவதா? புதுமொட்டை போல பூத்திருக்கும் உதடுகளின் புன்னைகை பற்றி கூறுவதா?,முப்போகம் தரும் வயலைப்போல செழுமையாக விளைந்திருக்கும் அவளின் உடலைப் பற்றி கூறுவதா? உலகிலுள்ள கவிஞர்கள் அனைவரும் இவளொருத்திகாக மட்டும் கவிதை படுவார்கள் என்று கூறினாலும் மிகையாகாதோ? (வர்ணிப்பு அதிகமாக உள்ளதென நினைக்க வேண்டாம், நம் மனதிற்கு பிடித்தவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு மேல் தான் என்பதை உணர்ந்து அடியேனை மன்னிக்கவும்).

காற்றில் கலையும் காதோர முடியை கோதிக்கொண்டே நம் பக்கம் திரும்புகிறாள். இல்லை ராகுலின் பக்கம் திரும்புகிறாள். (நாம் அவர்களின் கண்களுக்கு புலப்படாமல் அவர்களை கவனிப்பது நல்லது). யார் எப்படி மாறினாலும் நம் நாயகன் ராகுல் மட்டும் முன்பைவிட மோசமான நிலையில் தென்படுகிறான். முன்பைவிட உடல் மெலிந்து ,கன்னத்தில் தாடி புதர்போன்று மண்டி, நெற்றிமறைத்த அவனின் முடி சற்று மேலேறி(முடி கொட்டி) அழகென்றும், அசிங்கமென்றும் கூறமுடியாமல் காட்சியளிக்கிறான். அவனின் உடுப்புமட்டும் தான் அவனை பிச்சைக்காரனிலிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. இவனை பார்த்தால் யாருக்கு தான் பேசத் தோன்றும், அதனால் தனியாக தான் வந்துகொண்டிருக்கிறான். கையில் ஒரு நோட்டுடனும், சட்டைப்பையில் சில மடித்த தாள்களுடனும். அவனை ஜெனி பார்ப்பதை அவன் கவனிக்கவில்லை,(கவனித்திருந்தால் அவனின் செய்கைகள் எப்படி இருக்குமென்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்)அவனை பார்த்து அனுதாபப்பட்டு கண்மணியிடம் சென்றாள். அவளை நெருங்குவதற்கு முன் நடுவில் கருப்பாய் நாகரிகமே தெரியாமல் நாகரிக போர்வை போர்த்திய இருபதாம் நூற்றாண்டின் முத்திரை பதித்த இரு கிறுக்கர்கள் ஜெனியை வழிமறித்து ஏதோ பேசினர். ஜெனியும் அவர்களுடனான உரையாடலை ரசிக்கும் விதமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். இந்த சமயத்தில் ராகுல் அவர்களை கடந்து சென்றான்.

கோபமோ, ஏக்கமோ எதுவுமின்றி கடந்து சென்றான். அவன் நெருங்கும் சமயத்தில் ஜெனியின் மனதில் இதயத்துடிப்பு அதிகமாகியது.எதிரிலிருந்த கிறுக்கர்களை மனதுக்குள் திட்டிக்கொண்டாள். நேர சமயம் தெரியாமல் இவர்கள் வந்து பேசிக்கொண்டிருப்பது ஒருவித குற்ற உணர்வை அவளுக்கு தந்தது. ராகுல் என்ன நினைத்து கொள்வானோ என்ன துடித்தாள்.அவள் முகத்தில் சட்டென தோன்றி மரணித்த கவலைக்குறி நமக்கு அவளின் எண்ண ஓட்டங்களை தெளிவாக காட்டுகிறது. கடந்த சில மாதங்களாக அவளுக்கு இது போல தோன்றுவது சகஜமாகி போனது.

இதையெல்லாம் ராகுல் கண்டுகொள்ளாமல் தன் காரியங்களில் ஈடுபடத் தொடங்கினான். இறுதியாண்டு என்பதால் ப்ராஜெக்ட் விஷயத்தை கவனித்தான். அவனின் குழுவிலிருந்த மற்ற நண்பர்களும் அவனுக்கு உதவியாக இருந்தனர். ராஜாவை தவிர, அவன் தான் ஆசை நாயகி கயலின் பேச்சில் மதியிழந்து பல்லிழித்து கொண்டிருக்கிறானே!

அவனும் கயலும் சேர காரணமும், நிலைமையும் உருவாக்கி தந்தவன் ராகுல் தான். அன்று அவளிடம் பொறுமையாக இருக்குமாறு கூறியது தான் அவளிடம் பேசிய கடைசி வார்த்தை.அதிலிருந்து அவளை கண்டுகொள்ளாமல் இருந்தான். வேதனையாக இருந்தாலும் அவனின் வார்த்தைக்கு மரியாதை தரும் பொருட்டு பேசாமல் இருந்தாள். அந்த வருடம் ஜெனியின் பிறந்தநாள் வரை ராகுலும் ஜெனியிடம் பேசாமல் தான் இருந்து வந்தான். அவளின் பிறந்தநாள் அன்று முதல் வாழ்த்தை அவன் தான் கூறினான்,இரவு பனிரெண்டு மணிக்கு.

ஜெனி அதனை எதிர்பார்க்கவில்லை. அவன் மீதிருந்த கோபமெல்லாம் சட்டென மாறியது.உள்ளிருந்த அன்பு பொங்கி பெருக்கெடுத்து வெள்ளமாக அவளின் கண்ணின் வழியே கொட்டியது. பேச வார்த்தை வரவில்லை. மௌனத்தை பதிலாக அளித்தாள். இதனை கண்மணியிடம் கூறக்கூடாதென நினைத்து மறைத்தாள்.ஆனால் அன்று அவளின் அதீத சந்தோசம் அவளை காட்டிக்கொடுத்து விட்டது. சில மாதங்களாக அவளிடம் விடுப்பெடுத்துக்கொண்டிருந்த சந்தோசம் இன்று மீண்டும் தன் பணிக்கு வந்து அவளை காட்டிக்கொடுத்தது. கண்மணியும் ஒருவாறு யூகித்துக்கொண்டாள், அவளின் மகிழ்ச்சிக்கான காரணத்தை.

அன்றிரவு குறுஞ்செய்தி வாயிலாக நீண்ட நேரம் பேசிக்கொண்டனர் ராகுலும், ஜெனியும். மறுநாள் கண்மணியிடமிருந்து ராகுலுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. "ஜெனியிடம் பேசாதே!" என்பது தான் அந்த குறுஞ்செய்தி.ராகுலுக்கு தன் செயலின் மீது அருவறுப்படைந்தான்.மீண்டும் அவளிடம் பேசுவதை குறைத்துக்கொண்டான். இதனை கவனித்த கயலுக்கு ராகுல் மீது வெறுப்பு ஏற்பட்டது. தன்னிடம் பேசாமல் அவளிடம் பேசியது. அவனிடம் இதனைப் பற்றி கேட்டு அசிங்கபடுத்த நினைத்தாள். ஆனால் அதற்கு அவளின் மனம் இடம் தரவில்லை.அவனை தன் வாழ்க்கையிலிருந்து விலக்கிகொண்டாள். ராகுலின் நண்பன் ராஜா தன் மீது காட்டிய பரிவு அவன் மீது காதலை வளர்த்தது. இன்று இருவரும் சந்தோசமாக இருக்கின்றனர். (அவர்களின் காதல் கல்யாணத்தில் முடிய கடவுளை பிரார்த்திப்போம்)

அடுத்த சில தினங்களில் ராகுலும் அவன் நண்பர்களும் ப்ராஜெக்ட் முடித்து தேர்விற்கு தயாராகினர். கிட்டத்தட்ட ப்ராஜெக்ட் சப்மிஷன் தேதியை நெருங்கினர். அன்றோடு ராகுலுக்கும் அந்த கல்லூரிக்கும் இருந்த தொடர்பு முடிவுக்கு வரும் கடைசி நாள். ராகுலுக்கு குழப்பம் ஏற்பட்டிருப்பது அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. எப்போதும் கண்மணியுடன் சுத்தும் ஜெனி இன்று தனியாக வந்திருக்கிறாள். அதுவும் அடிக்கடி தன்முன் வந்து நிற்கிறாள்.

"என்னவோ சொல்லத்துணிந்தேன்,

ஏதேதோ செய்யத்துணிந்தேன் ,

உன்னோடு சேரத்தானே நானும் மலர்ந்தேன்"

என்பது போல அவளின் செயல்கள் இருந்தன. இதனால் அவனின் மனதில் குழப்பம் குடிகொண்டது. அடிக்கடி அவன் தூக்கத்தில் வரும் கனவு இப்பொது விழித்துக் கொண்டிருக்கும் போதே வந்தது.

காலை சூரியனே குளிருக்கு பயந்து இன்னும் வெளியே வரவில்லை. அந்த அறையில் மெல்லிய மஞ்சள் நிற ஒளியை கட்டிலின் கீழிருந்த மின்விளக்கு பரப்பிக்கொண்டிருந்தது. மூடியிருந்த ஜன்னலை திறந்து மார்கழி பனியை உள்ளே புகவிட்டான் ராகுல். பின் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவி ஜெனியை எழுப்ப முயற்சிதான்.

"ஏய்?தூங்குமூஞ்சி எழுந்திரு,இன்னைக்கு என்ன நாள்னு மறந்து போச்சா?"

"போடா லூசு,அடிக்குற குளிருக்கு என்னால எந்திருக்க முடியாது" என கூறி போர்வைக்குள் தன் உடலை மறைத்து கொண்டாள் ஜெனி. சொல்லவந்ததை சொல்ல முடியாமற் போனதால் சோகமாக ஜன்னலை மூடிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றான் ராகுல்.

திடுமென எழுந்து ஒரே தாவாக அவன் மீது தாவி முதுகில் தொத்திக்கொண்டாள் ஜெனி. முதலில் தடுமாறினாலும் அவளை கெட்டியாக பிடித்துக்கொண்டு நின்றான் ராகுல்.

"டேய் லூசு புருஷா,எங்கடா என்னோட பெட்காபி" செல்லமாக கேட்டால் அவனின் முதுகில் சவாரி செய்துகொண்டே.

"மொதல்ல, ப்ரஷ் பண்ணிட்டு வா கொண்டு வரேன், போ"எனக்கூறி அவளை கீழே இறக்கிவிட்டான். தாய் சொல் கேட்கும் குழந்தை போல உடனே ஓடிச்சென்றாள் ஜெனி. சில நிமிடங்கள் கழித்து காலை கடன்களை முடித்து வந்தாள். அந்த சில நிமிட பிரிவை கூட தாங்காத ராகுல் முகம் வாடி காபியுடன் அமர்ந்திருந்தான்.

"ஆசை புருஷா என்ன முகம் சுருங்கி போச்சு, அதா உங்க பொண்டாட்டி வந்துட்டேன்ல சிரிங்க பாப்போம்" என வாஞ்சையுடன் கூறி அவனை அணைத்தாள். ஜெனியை அப்படியே ராகுல் தன் மடிமீது அமர வைத்தான்.

"ஜெனி, இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்குதா?"

"இன்னைக்கு................. வியாழக்கிழமை"

"நக்கல் பண்ணாத, நிஜமா தெரியலையா?"

"ஹான், ஞாபகம் வந்துச்சு,நம்ம இந்த வீட்டுக்கு வந்த நாள் தான?"

"இல்ல"

"பின்ன, வேற என்ன?"

"ஹே,ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இன்னைக்கு தா உன்ன இங்க என்னோட கூட்டிட்டு வந்தேன்"

"அதைத்தானே நானும் சொன்னேன்"

"சரி விடு" ஜெனியை விட்டு விலக எத்தனித்த அவனை ஜெனி அடக்கி மீண்டும் அமர வைத்தாள்.

"நான் தான் உக்காந்து இருக்கேன்ல,எங்க போற பொறுடா"

"ஜெனி, இன்னைக்கு நம்ம கல்யாண நாள்டி"

"தெரியுமே"

"பின்ன ஏன் நான் கேட்டப்ப சொல்லல?"

"சும்மா தான்"

"................................................"

"நான் எப்படிடா மறப்பேன், லூசு"

"ஜெனி, நான் உன்ன சந்தோசமா பாத்துக்குறேனா?, எதுவும் கஷ்டம் குடுக்கலையே?"

"ஏன் டா இப்படி கேக்குற?"

"இல்ல ஜெனி உங்க வீட்லயும்,எங்க வீட்லயும் நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கல, அவங்கள பிரிஞ்சு தான் நம்ம கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்"

"தெரியுமே எனக்கு"

"அதனால தான் கேக்குறேன் நீ சந்தோசமா தான இருக்க?"

"டேய், எங்க வீட்ல கூட நா இவ்ளோ சந்தோசமா இருந்தது இல்ல டா, ரொம்பவே சந்தோசமா இருக்கேன் டா, நா என்ன பண்ணாலும் நீ ரசிக்குற உன்ன விட வேற என்னடா எனக்கு பெரிய சந்தோசம்" ஜெனி கூறிக்கொண்டிருக்கும் போதே ராகுல் கண்ணீர் கக்கினான். அதை பார்த்த ஜெனி அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு முத்தங்களை தெளித்தாள்.

"ராகுல், அழுகாத, எனக்கு நீ அழுகுறது ஏதோ மாதிரி பீல் ஆகுது, உனக்கு இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குது வேகமா கெளம்பு போ" சொல்லிக்கொண்டே ராகுலின் மடியிலிருந்து எழுந்து நடந்தாள்.

அடுத்த சில மணிநேரங்களில் சூரியனும் தன் பணிக்கு வந்தது, இவர்களும் கிளம்ப ஆயத்தமானார்கள். அவர்கள் சென்ற கார் ஒரு கோவிலின் வாசலில் நின்றது. ஜெனி முதலில் இறங்கி உள்ளே சென்றாள். அவளைத் தொடர்ந்து ராகுல் சென்றான். அங்கே ராகுல் பார்த்தது ஒரு அதிசயத்தை தான். அசையாமல் நின்று கொண்டிருந்த அவனை அவன் தம்பி அறைந்த பின் தான் நினைவு வந்தது.

"பெரிய இவனாக்கும்? பேசாம இருந்துட்டா எல்லா பிரச்சனையும் முடிஞ்சுருமா?" பொய் கோபத்துடன் ராகுலின் தம்பி கேட்டான்.

அதற்கு பதிலாய் கண்ணீரை மட்டும் தான் தர முடிந்தது. பின் அவனின் அம்மா, அப்பா, அண்ணன் என மொத்த குடும்பமும் அவனிடம் வந்து பேசினர். ஜெனியை கல்யாணம் செய்த போது பிரிந்த அவனின் குடும்பம் இன்று ஜெனியினால் சேர்ந்து விட்டது. என்ன பேசி அவர்களை சமாதான படுத்தினாலோ? . அடுத்த சில மணிநேரங்கள் எப்படி கழிந்தது என்று ராகுலுக்கு தெரியவில்லை. அதில் ஜெனியை நினைக்க மறந்து போய்விட்டான். திடீரென ஜெனியை தேடினான். கோவிலின் தூணில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு அவளின் குடும்ப நினைவு வந்துவிட்டதை யூகித்த ராகுல் அவளை தன்னருகில் அழைத்தான்.

"ஜெனி, கவலை படாத, ஒரு பேரனோ, பேத்தியோ பெத்து குடுத்தா உன்னோட வீட்லயும் நம்மள ஏத்துப்பாங்க, என்ன சொல்ற?" என காதில் மெதுவாக கூறினான்.

"ச்ச்ச்சீ! பொறுக்கி, கோவில்ல வந்து புத்தி எங்க யோசிக்குது பாரு" செல்லமாக திட்டினாள்.

"என்னோட பொண்டாட்டிய தான கேக்குறேன்"

"வாயமூடு, உங்கம்மாக்கு கேட்டு தொலைக்க போது"

"உத்தரவு மஹாராணி" எனக் கூறி அமைதியானான். வழக்கத்திற்கு அதிகமாக அன்று அவர்கள் சந்தோசமாக இருந்தனர். மகிழ்ச்சியுடன் அன்றைய தினம் முடிந்தது.

சில மாதங்கள் கழிந்தன, ஜெனியின் பிறந்தநாள் வந்தது.அவளுக்கான பரிசுடன் இரவு பனிரெண்டு மணிக்காக காத்திருந்தான் ராகுல். கடிகார முள் பனிரெண்டை தொட்டது. ஜெனியை எழுப்பினான். வாழ்த்தினான், பரிசை கொடுத்தான், ஜெனி வாங்க மறுத்து மீண்டும் தூங்கினாள். ராகுல் சோகமாக தூங்காமல் அன்றைய இரவை கழித்தான். விடிந்தவுடன் ஜெனி அவனிடம் எதுவும் பேசாமல் வெளியே கிளம்பி சென்றாள். அன்று முழுவதும் ராகுல் ஜெனியை பார்க்கவே முடியவில்லை. அந்த நாள் முடிய இன்னும் கால் மணிநேரம் தான் இருந்தது. அவளுக்கான பரிசை அவளிடம் எப்படியாவது கொடுக்கவேண்டும், தன் மீது திடீர் கோபத்தின் காரணத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும், இதற்கு என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்தான். அப்போது ஜெனி வீட்டிற்குள் நுழைந்தாள்.

"ஜெனி, எதுவும் கோபமா? ஏன் பேச மாட்டேங்குற?" அப்பாவியாக கேட்டான். அதெல்லாம் கண்டுகொள்ளாமல் வீட்டிலிருந்த எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு அவர்கள் இருந்த அறையில் மட்டும் மெழுகுவர்த்தி ஏற்றினாள்.

"ஜெனி, நான் கேட்டுட்டே இருக்கேன், நீ என்ன பண்ற?"

ஒரேயொரு முறைப்பு தான் பதிலாக வந்தது. கப்சிப்பானான் ராகுல். பின் அவனை அமரச்செய்து அவன் மடியில் அமர்ந்தாள். அவனின் கைகளை எடுத்து தன் வயிற்றில் வைத்தாள். அப்போது வெட்கத்தில் அவளின் முகம் சிவந்தது. தலை குனிந்தாள்.

"ஏய் என்னடி லூசு மாதிரி பன்னிட்டு இருக்க?"

"போடா முட்டாள் புருஷா?,நீயெல்லாம் எப்படி டா டிஸ்டிங்க்ஷன்ல பாஸ் ஆன?"

"என்னடி பேசுற, ஒன்னு புரியல, ப்ளீஸ் கிப்ட வாங்கிக்கோ"

"முடியாது, நீ தா முன்னாடியே தந்துடயே"

"ஐயோ, தல சுத்துது எனக்கு, தெளிவா பேசு"

"மக்கு, மக்கு" என கூறி மீண்டும் தன் வயிற்றில் அவனின் கையை வைத்து வெட்க பட்டாள். இந்த முறையும் ராகுலுக்கு புரியவில்லை. ஏமாற்ற தொனியில் ஜெனி அவனிடம் " நா எங்க அப்பா, அம்மாவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர போறேன், காரணம் நீ தான்" என கூறினாள்.

ராகுலுக்கு இப்போதும் விளங்கவில்லை.

"டேய் அன்னைக்கு கோயில்ல என்னடா சொன்ன?யோசிச்சு பாரு"

பொறிதட்டியது ராகுலுக்கு. ஜெனியை குழந்தையை தூக்குவதை போல தூக்கி முத்தமிட்டான்.

"எப்ப ஜெனி கன்பார்ம் பண்ண?"

"ரெண்டு நாளுக்கு முன்னாடி, இந்த மாதிரி பர்த்டே கிப்ட் யாரும் தந்திருக்க மாட்டாங்க, உன்னோட கிப்ட் ரொம்ப சூப்பர் டா" என ஜெனி அவனின் காதோரம் சிணுங்கினாள்.

இந்த மொத்த கனவும் அவளை பார்க்கும் ஒவ்வொரு முறையும் வந்து சென்றது. கைகள் நடுங்கின. எந்த சமயத்திலும் வருவதற்கு தயாராக கண்ணீர் இருந்தது. இருந்தாலும் கட்டுப்படுத்தி கொண்டான். அப்போது விதியின் விளையாட்டாய் ஜெனியிடம் பேசுவதற்கான சந்தர்ப்பம் வந்தது. அன்று ராகுல் பேணா எடுத்து வரவில்லை, அதனால் அவனின் நண்பன் ஜெனியிடமிருந்து வாங்கி கொடுத்தான். அதனை திருப்பி தரும் பொறுப்பு ராகுலின் தலையில் விழுந்தது. ஜெனிக்கு அருகில் சென்றான்.

"ஜெனி? "

திரும்பி பார்த்தாள். அந்த பார்வை , அந்த பார்வைக்காக எத்தனை நாள் காத்திருக்கிறான். மீண்டும் அந்த பார்வை கிடைப்பது எப்போது? .

"தேங்க்ஸ்" என கூறி விலகி வந்தான், மீண்டும் ஜெனியை பார்க்கும் சக்தி அவனுக்கு இல்லை. கண்களை கசக்கி கொண்டே வீட்டிற்கு கிளம்பினான். ஜெனியும் எதுவும் பேச முயற்சிக்கவில்லை. நெஞ்சில் பாரத்தோடு இருவரும் பிரிந்தனர்.

எல்லா கதைகளும் சந்தோசமாக முடித்து வைக்க கடவுள் ஆசைப்படுவதில்லை போல.இவர்களை சேர்ப்பது பற்றி கடவுள் யோசித்தால் நல்லது. இன்று நம் நாயகி ஜெனி தோட்டக்கலை துறையில் ஒரு உத்தியோகத்தில் இருக்கிறாள். அவன் காதலி அவனுக்கு கிடைக்காமல் போய் விட்டதை நினைத்து தினமும் கண்ணீர் சிந்திக்கொண்டு தான் இருக்கிறான். அவன் ஜெனியுடன் சேர்வதற்கான தடைகள் நீங்கி அவனின் கனவு நிஜமாய் நடக்க வேண்டிக்கொள்வோம். கண்மணியை பற்றி கூறுவதும் அவசியமாகிறது. அவளுக்கு வீட்டில் நிச்சயம் செய்து விட்டார்கள். கல்யாண கனவுகளில் நாட்களை கழித்து கொண்டிருக்கிறாள். இந்த கதையை எழுதும் போது அதிக மன உளைச்சலுக்கு ஆளானேன், அதனால் தான் இவ்வளவு அவசரமாக முடிக்கிறேன். இனி காதல் கதைகள் எழுதுவதை குறைத்துக்கொள்ள போகிறேன். இந்த கதையின் முடிவு ஏமாற்றமாய் இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். மீண்டும் சந்திப்போம். நன்றி.

அன்புடன்,

சங்கேஷ் லிங்கம் .