இந்த கதையை உங்க கிட்ட சொல்லியே ஆகணும், அப்டி என டா பெரிய கதைனு பாக்குறீங்களா? ஆமாங்க இது கொஞ்சம் பெரிய கதை தான்.ரொம்ப நாளாவே யார்ட்டயாச்சும் சொல்லணும்னு ட்ரை பண்றேன்.உங்களுக்கு time இருந்த கொஞ்சம் படிச்சு பாருங்க.
எப்ப அவனுக்கு அவ மேல அப்டி ஒரு நெனப்பு வந்ததோ அப்ப இருந்து அவளோட பேசணும்னு ரொம்பவே ஆசையா இருந்தான்.ஆனால் அவளுக்கு அவனை பாத்தாலே பிடிக்காது.வழக்கமா நடக்குறது தானான்னு நெனச்சா அது உங்க தப்பு.
குட்டியா ஒரு flashback பாப்போம்.
அதுக்கு முன்னாடி அவங்கள பத்தி சின்ன intro.பையனோட பேரு ராகுல்.கொஞ்சம் அமைதியா இருக்குற டிபிக்கல் மிடில் கிளாஸ் பையன்.எப்ப பாத்தாலும் ஏதாச்சும் எழுதிட்டே இருக்குற கவிஞன்.(கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க).பொண்ணு பேரு ஜெனி.ராஹுல்க்கு ஆப்போசிட் கேரக்டர் ஜெனி.வாயாடி,அப்பர் மிடில் கிளாஸ் பொண்ணு.selfie freak.இவ்ளோ தெரிஞ்சாலே போதும்.நம்ம ஸ்டோரிக்குள்ள போவோம்.
"மழை மேல்
கொண்ட காதலால்
மண்ணைக்
கிழித்து செடியாகிறது
விதை"
என கிளாஸ் ரூம் போர்டில் எழுதிவிட்டு எதுவும் தெரியாத மாதிரி அமர்ந்திருந்தான் ராகுல். நேரம் செல்ல செல்ல கிளாஸ் நிரம்பியது.அனைவரின் பார்வையும் போர்டில் இருந்த கவிதை மேல் தான் இருந்தது.அவன் தான் எழுதியது என்பது எல்லாருக்கும் தெரியும்,யாருக்காக எழுதியிருக்கிறான் என்பது தான் அவர்களின் சந்தேகம்.அவர்கள் சந்தேகித்த முதல் நபர் கயல்விழி.அவள் தான் அவனிடம் அடிக்கடி பேசுவாள்.எல்லாரும் அவளிடம் சென்று விசாரித்தனர்.அப்போது ஜெனி கிளாஸுக்குள் நுழைந்தாள்.எப்போதுமில்லாத புன்னகை அவளின் வரிகளற்ற உதடுகளில், உள்ளே வந்ததும் அவளின் கண்கள் ராகுலின் கண்களைத் தேடியது.ராகுலின் கண்கள் ஜெனியின் பார்வையை பெற காத்துக்கொண்டிருந்தது.
அவனை பார்த்து கள்ளச்சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு போர்டிலிருந்த வார்த்தைகளை பார்த்தாள்.வெட்கத்தில் சிவந்த முகத்தை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டாள்.தன் மொபைலை எடுத்து பார்த்தாள்.நேற்று ராகுல் அனுப்பிய அதே கவிதை வரிகள் போர்டில் எழுதப்பட்டு இருந்தது.ஹார்மோன்ஸ் செய்த சேட்டையில் இருவரும் மாட்டிக்கொண்டனர்.
அவர்களிருவரும் காதலிப்பது வெளியில் யாருக்கும் தெரியாமலிருக்க நினைத்தனர்.அதனாலேயே கண்களால் மட்டுமே பேசிக்கொண்டனர்.வார்த்தைகள் ராகுலின் மனதில் போர் புரிந்தன அவளிடம் பேச சொல்லி,இருந்தாலும் அவன் பேச தயங்கினான்.யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் தினமும் மணிக்கணக்கில் பார்வையில் பேசிக்கொண்டே இருந்தனர்.அவர்களிருவரையும் தவிர மற்ற அனைவரும் அவர்களை கவனித்தனர்.அதோடு நிறுத்தாமல் இருவரையும் சேர்த்து பேசி கிண்டல் செய்தனர். இருவருக்கும் அதில் சந்தோசம் தான் என்றாலும் ஒரு பயமும் வந்தது.
"நமக்கு மட்டும்
தெரிந்தபோது இனித்த
நம் காதல்;
மற்றவர் அறிந்ததால்
கசந்ததேனோ?"
அந்த சமயத்தில் தான் கயல்விழி ராகுலிடம் நெருங்கி பழக ஆரம்பித்தாள்.அந்த நெருக்கம் கயல்விழியின் காதலை சொல்லாமல் சொல்லியது.ராகுல் பேச மறுத்தாலும் கட்டாயப்படுத்தினாள்.ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் தான் காதலிக்கும் பெண்ணையும்,தன்னை காதலிக்கும் பெண்ணையும் எதிர் கொண்டான் ராகுல்.தன் காதலை பற்றி காயலிடம் கூறினாலும் அவள் ஏற்றுக்கொள்ள மறுத்தாள்."எப்படியும் ஜெனி ஒரு மாதத்திற்க்கு மேல் உன்னை காதலிக்க போவதில்லை,அவள் பேசுவதையெல்லாம் நீ பெரிதாக எடுத்து கொள்ளாதே,அவளின் பொழுதுபோக்கு காதலன் தான் நீ" என கூறுவாள் கயல். அவள் அப்படி சொல்வதை கேட்கும் போதெல்லாம் கயலை பற்றி கேவலமாக நினைத்தான் ராகுல்.
சரியாக ஜெனி காதலை கூறிய ஒரு மாதத்தில் ஜெனி ராகுலை avoid செய்ய துவங்கினாள். காரணமற்ற சண்டைகளால் இருவர் மனதும் காயப்பட்டது.
வழக்கம் போல அன்று இரவு ஜெனி ராகுலுக்கு கால் செய்தாள்.
"ராகுல்? நீயே யோசிச்சு பாரு நம்ம லவ் பண்றதுல நமக்கு சந்தோசம் கிடைக்குதா?, எல்லாரும் நம்மள சேத்து வச்சு பேசுறது நல்லவா இருக்குது?எனக்கு எதோ மாதிரி இருக்குது டா,கொஞ்ச நாள் நம்ம பேசாம,பாக்காம இருப்போம் டா, ப்ளீஸ்.இனிமே எனக்கு கால் பண்ணாத, தயவு செஞ்சு கிளாஸ் ல வச்சு என பாக்காத,ப்ளீஸ்" சடசடவென கூறிவிட்டு கட் செய்தாள் ஜெனி.
ராகுலின் கண்கள் கண்ணீரைக் கொப்பளிக்க ஆரம்பித்தன.அவளுக்கு கால் செய்தான்.அவனின் எண்ணை பிளாக் செய்திருந்தாள்.கயல் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்து சென்றது. ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் மதுவை நாடினான்.முதல் முறை அவனின் ரத்தத்தில் ஆல்கஹால் சென்று அவனை மாசுபடுத்த தொடங்கியது.குடித்து விட்டு ரோட்டில் செல்பவர்களிடம் உலரத் தொடங்கினான்.ஒரு சிலர் அவனை அடிக்கவும் செய்தனர்.பருக்களின் தழும்புகளிருந்த அவனின் முகத்தில் காயங்களால் ரத்தம் வழியத் தொடங்கியது.நிற்க முடியாமல் ரோட்டில் விழுந்தான்.
பலரும் அவனை திட்டி விட்டு சென்றனர்.அப்போது அந்த வழியாக சென்ற ஒரு பெண் அவனை பார்த்து பரிதாபப்பட்டாள்.அவனுக்கு உதவ நினைத்து,அவனை எழுப்ப முயற்சித்தாள்.முடியவில்லை,அருகிலிருந்த சிலரை உதவிக்கு அழைத்தாள், யாரும் வரவில்லை . கஷ்டப்பட்டு அவனை ரோட்டின் ஓரத்திற்கு இழுத்து வந்தாள்.பின் வாட்டர்போக்கெட் வாங்கி அவன் முகத்தில் தெளித்து எழுப்பினாள்.லேசாக கண் விழித்த அவனால் எந்திருக்க முடியாமல் அழுதான்.அவன் மேல் பரிதாபம் அதிகமானது.
மெதுவாக அவனை எழுப்பி அருகிலிருந்த ஒரு கடையில் அமர வைத்தாள்.பின் அவனின் மொபைலை வாங்கி அவன் நண்பர்களுக்கு அழைத்து அவர்களை வரச்சொல்லிவிட்டு அவர்களுக்காக காத்திருந்தாள். அவர்களிடம் ராகுலை ஒப்படைத்து விட்டு கிளம்பினாள்.
மறுநாள் ராகுல் கல்லூரிக்கு செல்ல மறுத்தான்.அழுது கொண்டே இருந்தான்.அவன் நண்பர்கள் கூறிய அறிவுரைகள் அவன் மனதில் பதிய மறுத்தது.பொறுமையிழந்த அவர்கள் அவனை ரூமிற்குள் அடைத்து விட்டு சென்றனர்.நேற்று போல் குடித்துவிட்டு விழுந்து கிடக்க கூடாது என்பதற்காக.கல்லூரிக்கு வராத ராகுலை ஜெனி தேடினாள்.அவன் வராததை உறுதி படுத்தி கொண்டு அவனுக்கு கால் செய்தாள்.
"பேசாமல் போனாலும்
பார்க்காமல் போனாலும்
காணாமல் போய்விடுமா
காதல்?"
"டேய் ,ஏன் டா காலேஜ்க்கு வரல?" கோபத்தில் கூட ஜெனியின் குரல் போதையேற்றியது ராஹுல்க்கு.இருந்தாலும் நேற்று அவள் கூறியதை நினைக்கும் போது அவனின் மனம் பேச மறுத்தது.இணைப்பை துண்டித்தான்.மீண்டும் மீண்டும் ஜெனி அவனை அழைத்து கொண்டே இருந்தாள்.இவனும் துண்டித்துக்கொண்டே இருந்தான்.ஒரு கட்டத்தில் தன் மொபைலை ஸ்விட்ச்ஆஃப் செய்து விட்டு தூங்கிவிட்டான்.
மறுநாள் கல்லூரிக்கு சென்றான்.அவன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள் ஜெனி.அவனை பார்த்ததும் அருகே வந்தாள் .கண்டுகொள்ளாதது போல் ராகுல் நகர்ந்தான்.அவனின் கைகளை பிடித்து அவனை நிறுத்தினாள்.அருகில் நெருங்கினாள்.ஒரு அடிக்கும் குறைவான இடைவெளியில் அவன் பக்கத்தில் நின்றாள்.இருவரின் மூச்சு காற்றும் மோதிக்கொண்டதால் இருவரின் உடலும் சூடாகியது.
அவனின் தோள் மேல் தன் கைகளை வைத்தாள்.அவன் கண்களை பார்த்துக்கொண்டே தன் இதழை அவனின் இதழை நோக்கி செலுத்தினாள்.படபடப்பில் ராகுலின் கைகள் நடுங்கின.சட்டென விலகி பளாரென்று அவனின் கன்னத்தில் அறைந்தால் ஜெனி. எதிர்பார்க்காததால் ஒரு நிமிடம் அசைவற்று நின்றான் ராகுல்.பின் அடுத்தது அறைகள் ராகுலின் கன்னத்தை வீக்கமடைய வைத்தன.
"பொறுக்கியா டா நீ ?, குடிச்சுட்டு ரோட்ல விழுந்து கிடக்குற,நல்லா தான இருந்த, என்ன டா ஆச்சு உனக்கு?,கொஞ்ச நாள் பேச வேண்டான்னு தான சொன்காலம் னேன்.அதுக்குன்னு இப்படியா டா பண்ணுவ?,நீ எனக்கு வேணும்டா, ஆனா இப்ப இல்ல,புரிஞ்சுக்கோ ப்ளீஸ்." சொல்லி முடிப்பதுற்குள் ஜெனியின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
சொல்லிவிட்டு திரும்பினாள்,இரண்டடி நடந்து பின் திரும்ப வந்து ராகுலை கட்டிக்கொண்டாள்.முத்தங்களை அவன் மீது அள்ளி தெளித்து கொண்டிருந்தாள்.அவள் இதழ் படத்த இடமே அவன் முகத்தில் இல்லாத அளவுக்கு முத்தங்களை கொடுத்தாள்.பின் எதுவும் நடக்காததை போல் சென்று தன் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
அவளின் செய்கைகள் அவன் மீது வைத்திருந்த காதலை உணர்த்தியது.அதனால் அவள் கூறியதை போல் அவளிடம் சில காலம் பேசாமல் இருக்க முடிவெடுத்தான்.பேசாமலும் இருந்தான்.அவளிடம் பேசிய நிமிடங்கள் அவன் தூக்கத்தை கெடுத்தது.அவளுடன் பேசும் நேரம் எப்பொழுது வரும் என எதிர்பார்த்து கொண்டிருந்தான்.நாட்கள் ஓடியதே தவிர அவள் ராகுலிடம் பேசும் காலம் மட்டும் வரவே இல்லை.
"காதலிக்க
தொடங்கிய பின் தான்
உணர்கிறேன்,
தனிமையொரு
தண்டனையென "
ராகுலை சுற்றி அதிகம் பேர் இருந்தும் ஜெனி இல்லாதது அவனை தனிமை படுத்தியது.கோபத்தை சுவற்றிடமும்,தன் மீதும் காட்டி தன்னையே காயப்படுத்திக் கொண்டிருந்தான்.இதையெல்லாம் ஜெனி கவனித்தாலும் ராகுலிடம் பேச மறுத்தாள். அந்த சமயத்தில் தான் கயலின் ஞாபகம் ராகுலுக்கு வந்தது.தன் துயரத்தை அவளிடம் கூறினால் நிம்மதியாக இருக்குமென நினைத்தான்.
எனவே கயலிடம் பேச சென்றான்.முதலில் அவனை தவிர்த்தாள் கயல்.இருந்தாலும் அவளுக்குள்ளிருந்த காதல் அவனை ஏற்றுக் கொண்டது.சோகமாக இருந்த அவனை சிரிக்க வைத்தாள்.மாலைப் பொழுதுகளில் அவனுடன் நீண்ட தூரம் நடந்து அவன் கைகளையும், தோள்களையும் அவளுடையதாக்கிக் கொண்டாள்.அவன் எதிர்பார்க்காத பொழுதுகளில் அவனுக்கு பரிசளித்து அவனை ஆச்சர்யப்படுத்தினாள் .
காலம் அவர்கள் இருவரையும் இணைத்து கட்ட நினைத்தது போல.
அன்று மழை பெய்து கொண்டிருந்தது,ராகுல் நனைந்து கொண்டே வந்தான்.அவன் பின்னால் ஜெனியும்,அவளுக்கு பின்னால் கயலும் குடைபிடித்து மலையிலிருந்து தங்களை காத்துகொண்டு வந்தனர்.ராகுல் நனைவதைப் பார்த்த ஜெனி ஓடிச்சென்று அவனுக்கும் தன் குடையினுள் இடம் கொடுத்தாள் .ராகுலுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.முகமெல்லாம் பற்களாக மாறியது.
"என்ன சார்,ரொம்ப ஹாப்பி யா இருக்கேங்க போல?" குறுகுறு பார்வையுடன் கேட்டாள் ஜெனி.
"இந்த மாதிரி மழையில உன்னோட நடக்கணும்னு எவ்ளோ நாள் ஆசை தெரியுமா?" ஏக்கத்துடன் கூறினான் ராகுல்.
"ஒஹ் , அப்டியா ?,லூசு மாதிரி நனஞ்சுட்டு போரையேனு தா வந்தேன்,இல்லாட்டி அப்டியே போயிருப்பேன் டா,இருந்தாலும் இது நல்லா இருக்குல்ல,"
"................................................................"
"அப்புறம் ,ரொம்ப தேங்க்ஸ் டா,என்னய புரிஞ்சுகிட்டு கொஞ்ச நாள் பேசாம இருந்ததுக்கு,ஆனா நா ஒன்னு கேள்வி பட்டேனே?" சந்தேகத்துடன் கேட்டாள் ஜெனி.
"என்ன ஜெனி?"
"நீயும் கயலும் லவ் பண்றதா ?"
"நீயுமா சந்தேக படற?"
"இல்லடா நான்தான் பாக்குறேனே, டெய்லி நீங்க பேசிக்குறத"
"அதுக்காக நா அவளை லவ் பண்றதா ஆயிடுமா?, அவ என்னோட பிரெண்டு அவ்ளோதா!"
"உன்ன நம்பலாமா?"
பதிலேதும் கூறாமல் ஜெனியை முறைத்து விட்டு சென்றான் ராகுல்.ஜெனி அவனை துரத்தி பிடித்தாள்.
"கோச்சுக்காத டா,சும்மா தா கேட்டேன்" என அவனின் தோளில் சாய்ந்தாள்.இருவரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.ஆனால் இதைப் பார்த்துக்கொண்டிருந்த கயலின் முகத்தில் ஏமாற்றமும், கோபமும் மழைநீரைப் போன்று வழிந்தது.
"காதலைக் கேட்டால்
கண்ணீரைத் தருகிறார்
கடவுள்"
ராகுலின் தோளில் ஜெனி.ஜெனியின் தோள்களில் ராகுலின் கைகள்.இதைப் பார்த்த கயலின் கண்ணில் கண்ணீர்.வேறு வழியில்லை,ராகுலை ஜெனியிடமிருந்து பிரிப்பதென்பது இயலாத ஒன்று.ஜெனி அவனிடம் பேசாத சமயத்தில் கூட அவளை பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருப்பான் ராகுல்.அவன் கயலிடம் அதிகமாக பேசிய ஒரே வார்த்தை கூட "ஜெனி" தான்.இருந்தாலும் அவள் ராகுலை இலக்க விரும்பவில்லை.ராகுல் ஜெனியின் மீது வைத்திருந்த காதலை போல் கயல் அவன் மீது வைத்திருந்தாள்.அவனின் சந்தோஷத்திற்காக அவனிடமிருந்து விலக முடிவெடுத்தாள்.
ஆனால் அன்றிலிருந்து அவளின் நடவடிக்கைகள் மாறத்தொடங்கியது.சிரித்த முகத்தோடு இருக்கும் கயலின் முகம் சிரிக்க மறந்து பல யூகங்கள் ஆனதைப் போல் மாறியது.வெட்கத்தில் சிவந்து காணப்படும் அவளின் கன்னங்கள் கோபத்திலும்,ஏமாற்றத்திலும் சிவப்பேறி காணப்பட்டது.அவளின் பெரிய கண்மணிகள் வற்றி உள்ளே சொல்லுமளவிற்கு கண்களை சுற்றி வீக்கம் ஏற்பட்டு வித்யாசமாக காணப்பட்டாள்.அவளை பார்க்கும் போதெல்லாம் ராகுல் வருத்தப்பட்டான். அவளின் மீது பரிவு ஏற்பட்டது.
ஜெனியின் அனுமதியோடு கயலை சமாதானப்படுத்த யோசித்தான். ஜெனியிடம் அவளை பற்றி கேட்டபோது ஜெனியின் மனம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. எங்கு கயல் அவனின் மனதை மாற்றிவிடுவாளோ என்ற பாதுகாப்பற்ற உணர்வு.விடாப்பிடியாக அவன் கூறுவதை மறுத்தாள்.
ஒரு வாரம் பொறுத்துப்பார்த்த ராகுல் ஜெனியிடம் சண்டையிட்டு கயலுக்கு உதவ நினைத்தான்.மேலும் ஜெனியின் அன்பு கட்டளைகள் யாவும் ராகுலை சுயமாக முடிவெடுக்க விடவில்லை என நினைத்தான். தன் சுயமரியாதை பாதிக்கப்படுவதாக கருதி அவளிடம் சண்டையிட்டான். பேசிக்கொண்டிருந்த ஜெனிக்கு அவன் கூறிய வார்த்தைகள் மீது வெறி வந்து அவனின் கன்னங்கள் பழுக்குமளவிற்கு அறைந்து விட்டு சென்றாள்.
ராகுல் தான் சண்டையை தொடங்கினான் என்றாலும் அதனால் அதிகம் காயப்பட்டதும் அவன் தான். கயலின் மீதிருந்த பரிவிற்கும் ஜெனியின் மீதிருந்த காதலுக்குமிடையே போட்டி வைத்தால் எப்போதும் வெற்றி ஜெனிக்கே.தான் செய்யதது தவறென உணர்ந்த்து அன்றிரவே ஜெனியிடம் பேச நினைத்தான்.பொதுவாகவே ஈகோ அதிகமுள்ள ஜெனி இவனின் அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் வெற்றிடம் உருவானது ராகுலின் மனதில்.
"காற்று கூட
இல்லாத இடத்தில்
தான் வெற்றிடத்தை
உணரமுடியுமென்று
யார் கூறியது?,
காதலித்து
பாருங்கள் அவளற்ற
பொழுதுகள் அனைத்திலும்
வெற்றிடத்தை உணரலாம்!"
ராகுலின் அன்றைய இரவு, கண்ணீருக்கு மத்தியில் கழிந்தது. மறுநாள் ஜெனியை பார்க்கும் ஆவலோடு சென்றான்.அங்கு சென்று ஜெனியை பார்த்துவிட்டு ஏன் பார்த்தோமென்று ஆகிவிட்டது. ஜெனியோடு அமுதன் நெருக்கமாக நின்று selfie எடுத்துக்கொண்டிருந்தான். ஜெனியும் அவனின் நெருக்கத்தை விரும்பியவாறு அவனோடு உரசிக்கொண்டு நின்று கொண்டிருந்தாள்.ராகுலை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் அமுதனிடம் பேசுவதும்,சிரிப்பதும், தொடுவதுமாக இருந்தாள்.
"காதல் தான்
ஆண் தன் கருவறையில்
சுமக்கும் குழந்தை,
பெற்றெடுப்பதும், கருவிலே
கலைப்பதும் அவர்கள்
காதலியின் முடிவில் தான்"
நெஞ்சில் சுமைக்கூடியதாய் உணர்ந்தான் ராகுல்.தான் செய்த தவறை நன்கு உணர்ந்து கொண்டான். அதற்கான தண்டணையை ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிர்பந்தம்.நாட்கள் நகர நகர அவர்களின் நெருக்கம் அதிகமானது. ராகுலின் மனதில் சோகமும், முகத்தில் தாடியும் அதிகமானது.
"பூனைக்கு காய்ச்சல் என்றால் எலிக்கு கொண்டாட்டம்" இது போல தான் இருந்தது கயலின் மனநிலை, ராகுல் ஜெனியிடமிருந்து விலகியிருப்பதும், ஜெனி அமுதனிடம் நெருங்கியிருப்பதும் அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தந்தது. மீண்டும் தன் காதல் பயணத்தை ஆரம்பிக்க ராகுலிடம் சம்மதம் கேட்டு நின்றாள்.
"காதல்
தொற்றுநோய்,
மருத்துவமற்ற தொற்றுநோய்! "
சம்மதிக்க மறுத்தான் ராகுல்.அவனின் உடல் முழுவதும் ஜெனியின் நினைவுகள் ரத்தம் போல பயணித்துக்கொண்டிருந்தன.காலம் தான் பெரிய கணக்கு வாத்தியராயிற்றே, அவனை பயமுறுத்தியே அவனின் மனதை மாற்ற நினைத்தது.
வழக்கமான நாளாக அன்று இல்லை.அன்று கயலின் பிறந்தநாள்.நேற்றைவிட இன்று கொஞ்சம் அழகாகத் தெரிந்தாள்.உண்மையைச் சொன்னால் அந்த நிமிடம் ராகுலின் நினைவில் ஜெனி இருக்கவேயில்லை. கயலும் கயல் சார்ந்த நினைவுகளும் தான் இருந்தது.இருவரும் தனிமையில் அதிகமாக சுற்றியுள்ளனர்.அப்போதெல்லாம் ஜெனியின் நினைவுகளும் உடனிருக்கும் ஆனால் இப்பொழுது அவர்களின் தனிமையில் ஜெனி இல்லை.
முதல்முறையாக கயலின் உடலை ரசிக்க ஆரம்பித்தான்.அவளின் நடையையும், சிரிப்பையும், சிணுங்கலையும்,கண்ணசைவுகளையும் கவனித்து அவைகளின் அழகில் தன் மனதை பறிகொடுத்தான். அருகில் வந்த அவளை கட்டியணைக்க முற்பட்டான்.ஆனால் கயல் அவனை தடுத்தாள்.ராகுலின் மனம் அந்த நிமிடம் குற்றஉணர்வில் தவித்து அவனை தலைகுனிய வைத்தது. கண்கள் லேசாக தூரலிட ஆரம்பித்தது.
"ராகுல்?,என்ன பாருடா,உங்கிட்ட ஒன்னு சொல்லணும், சாரி டா, நீ கட்டிப்பிடிக்க ட்ரை பனுவன்னு எதிர்பாக்கலடா, அதனால தா தடுத்தேன் டா, கொஞ்சம் என்னய பாருடா" கயலின் உதடுகள் உதிர்த்த வார்த்தைகள் ராகுலின் காதுகளில் விழுந்த பாடில்லை.
தேம்பி அழுக ஆரம்பித்தான். அதை பார்த்த கயல் பதட்டப்பட்டு அவனை தன்னோடு இறுக அணைத்துக்கொண்டாள்.
ராகுலின் முகம் கயலின் வயிற்றில் அழுந்தியிருந்தது.அவன் கண்ணீர் கயலின் ஆடையை
ஈரமாக்கியது.கயலின் கைகள் ராகுலின் தலையை தன் உடலோடு மேலும் அழுதிக்கொண்டிருந்தது.
"ஹார்மோன்களின் சேட்டையில்
தயக்கத்திற்கென்ன வேலை?"
-தொடரும்