நினைவு-15 "மாமா... சத்யா ஃபோன் ஏதும் பண்ணினானா?" பெரும் கவலையுடன் கேட்டார் மங்கையர்க்கரசி. இதோடு இவர் கேட்பது நூறாவது முறையோ ஐநூறாவது முறையோ! அது அந்த கடவுளுக்கும் கூட தெரியாது. எத்தனை முறை கேட்டாலும் தனது பதில் ஒன்றே தான் என்ற முறையில் பதிலளித்தார் தேவானந்தன். "இல்லைமா, உனக்கும் பண்ணலியா?" இரவு சாப்பாட்டை மேஜையில் எடுத்து வைத்தவாறே மங்கையர்கரசி, மாமனாரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். "எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் தான் மாமா! போனா... போன வேலையை முடிச்சோமா வந்தோமானு இருக்கணும். அப்படியே நாடோடி மாதிரி ஊர் சுத்த கிளம்பிற வேண்டியது." "இந்தக் காலத்துப் பிள்ளைகளை ரொம்ப இறுக்கிப் பிடிக்க முடியாதும்மா. பிடிக்கவும் கூடாது. அதுவும் என் பேரன் தகப்பன் சாமி மாதிரி. சின்ன வயசுலயே அதிகப்படியான அனுபவம். எது செய்தாலும் சரியாத்தான் இருக்கும்." மெச்சுதலாய் சொன்ன மாமனாரின் சமாதானங்கள் எதுவும் தாய் மனதை குளிர்விக்கவில்லை. தாத்தாவிற்கு பேரனின் மீது அபார நம்பிக்கை.