நினைவு-6 மதியம் மணி மூன்றினைத் தொட்டிருந்தது. அந்த நேரத்தில் மதியம் சாப்பாட்டிற்கு, சண்முகம் வீட்டிற்கு வருவது வழக்கம். கட்டிடப் பணிக்குத் தேவையான, சிறு ஆணிமுதல், ஜல்லி, மணல், சிமெண்ட், கம்பி என சகலமும் கொண்ட ஹார்டுவேர் கடை அவருடையது. பெரிய பெரிய பில்டிங் கான்ட்ராக்டர்களும், மேஸ்திரிகளும், கைவசம் வாடிக்கையாளர்களாக இருப்பதால், எப்பொழுதும் வருமானத்திற்கு பஞ்சமில்லாத தொழிலாக சென்று கொண்டிருக்கிறது. காலைநேர உணவை முடித்துக் கொண்டு கடைக்குச் செல்பவர், மதியம் மூன்று மணியப் போல் வந்து சாப்பிட்ட பின், சற்றுநேரம் படுத்து ஓய்வெடுப்பது வழக்கம். மறுபடியும் ஐந்து மணிக்கு மேல் தான் கிளம்புவார். அது வரை கடை வேலையாட்கள் பொறுப்பில். இன்றும் வழமை போல், வீட்டிற்கு வந்தார். திவ்யாவின் வண்டியைப் பார்த்தவருக்கு முகத்தில் சிறு யோசனை. "லட்சுமி…! லட்சுமி…!" கணவர் வரும் நேரம் என்பதால் குரல் கேட்டவுடன், அவரும் வெளியே வந்தார். "என்ன லட்சுமி!? திவ்யா சீக்கிரம் வந்துட்ட மாதிரி இருக்கு." "ஆமாங்க...