நினைவு-3 பரம்பரை சொத்து முழுவதும் இழந்த நிலையில் தேவானந்தனின் தந்தையும் இயற்கை எய்திவிட, இதற்குமேல் யாரிடமும் வேலை கேட்கவும், உதவி கேட்கவும் கௌரவம் இடம் கொடுக்கவில்லை. அப்பொழுது தான் மகன் ரவியானந்தனும் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம். அத்தகைய கையறு நிலையில் தான், உடுக்கை இழந்தவனுக்கு கையாக வந்தார், பள்ளித் தோழரும், குடும்ப நண்பருமான இராமநாதன். பணமாக உதவி செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார் எனத் தெரியும். எனவே தான் தேவானந்தனை ஒர்க்கிங் பார்ட்னராகக் கொண்டு இருவரும் தொழில் தொடங்கினர். தேவானந்தன் என்றைக்கும் உடல் உழைப்பிற்கு தயங்கி நின்றதில்லை. ஏற்கனவே கமிஷன் மண்டி நடத்திய அனுபவம் கைகொடுத்தது. எங்கெங்கு நேரடியாகச் சென்றால் குறைந்த விலைக்கு பொருட்களை கொள்முதல் செய்யலாம் என நன்றாகத் தெரிந்து வைத்திருந்தவர், அதைக் கொண்டே தொழிலை நடத்தத் தொடங்கினார். அது ஏறுமுகமாகவே அமைந்தது. இராமநாதன் அலுவலக உள்வேலைகளைப் பார்த்துக் கொள்ள, தேவானந்தன் வெளியே சுற்றித் திரிந்தார். நெல், மஞ்சள், வேர்க்கடலை,